இரண்டு வார்த்தைகள்

ஒரு வார்த்தை
ஒரே ஒரு வார்த்தை..
அம்மா..
பிறகு
..ப்பா..
நீ பேச ஆரம்பிக்கையில்
அதைக் கேட்டு
உலகத்து சந்தோஷமெல்லாம்
எங்கள் கையில் வந்ததென்று
உன்னை உச்சி முகர்ந்தோம்..
இன்று..
உன்னோடு எங்களை
வைத்துக் கொள்வதில்
உறவு கெட்டுப் போய்விடும்
என்று சொல்லி
இரண்டே வார்த்தையில்..
இந்த இல்லத்தில் கொண்டு
வந்து சேர்த்து விட்டாய்..
மகனே..
அது..
"வயசாச்சே ..அறிவிருக்கா?"
அதுவும் உன்
ஆசை மனைவி முன்..
ஆனாலும் வாழ்த்துகிறோம்
உனக்கு இந்த நிலை
என்றும் வரவே வேண்டாமென்று !
இங்கிருந்தும் போகின்றோம்
உனக்கு செலவு வேண்டாமென்று!