என்னோடு பேசுகிறேன்-வித்யா

என்னோடு பேசுகிறேன்......!!-வித்யா

மரண உச்சம்தொடும்
அச்சம் விளக்கி பயணப்படு
என் மனமே..........!!

--மோட்சத்தின் வாயிலில்
கால்பதிக்க சித்தமாய் இருக்கிறேன்

செவியோடு உறவாடும்
பரிகாசங்கள் மூடர்களின்
வசனங்களென சொல்லிக்கொடு


--அன்பின் தேசத்தில்
பூவாய் மலர ஏங்குகிறேன்

வன்சொல் தவிர்க்க
உதடுகள்மூடி
இதயம்திறக்க
கற்றுக்கொடு

--பண்பில் உயர்ந்து
புனிதம் எய்த விழைகிறேன்

என் இரத்தத்தில் கலந்துவிட்ட
எதிலும் சிரத்தையில்லா நோய் நீக்கி
ஈடுபாட்டோடு இருக்கச்செய்


--தோள்களில் பாரம்சுமந்து
பொறுப்புகள் ஈடேற்ற விரும்புகிறேன்

அறியாமையோடு அடங்கிவாழ்வதினும்
போர்க்களத்தில் போராடிமடிவதே மேலெனும்
ரௌத்திரம் பழக்கு


--தன்மானம் அறிந்து
தரணியை வெல்ல ஆவல் கொண்டிருக்கிறேன்

கட்டளையிட விருப்பமில்லை
கீழ்படியக்கற்றுக்கொடுத்து
என்னுள் மேன்மை விதை


--நிலையில்லா உலகில்
நிலையான வாழ்விற்கு விருட்சமாகிறேன்

பொய்கள் புளித்துப் போயிற்று
மெய்மை புகட்டி
அமைதியில் மையம் கொள்


--என்னிலிருந்து தொடங்கட்டும்
மாற்றம் என பேராசை கொள்கிறேன்..........!!

எழுதியவர் : வித்யா (2-Dec-14, 9:22 pm)
பார்வை : 199

மேலே