திரும்பிப் பார்க்கிறேன் உள்ளோரை ​​

​நோக்கிடும் பார்வையும் புரிகிறது
​தாக்கிடும் விழிகளும் உரைக்கிறது !
தேங்கிடும் எண்ணங்கள் வழிகிறது
பொங்கிடும் உணர்வுகள் பேசுகிறது !

ஏழ்மையே எங்களின் சாதியாகும்
தாழ்ந்த நிலையே எம்வாழ்வாகும் !
ஒருவேளை உணவே கனவாகும்
ஒருநாள் கடப்பதே யுகங்களாகும் !

அருந்தும் உணவோ மருந்தளவு
விருந்து என்பதோ மலையளவு !
வறுமை எங்களின் உடன்பிறப்பு
பொறுமை எங்களின் உயிர்நட்பு !

கற்றிட விருப்பமே இருந்தாலும்
பெற்றிட வயதுமே இருந்தாலும்
உதவிட இதயங்கள் இல்லையே
உணர்த்திட வழியும் தெரியலையே !

பிறப்பில் நாங்களும் மனிதர்தானே
பிறந்தபின் பேதம் மண்ணில்தானே !
இறப்பும் உலகில் நிச்சயம்தானே
இருப்போர் மறப்பதும் ஏன்தானோ !

திரும்பிப் பார்க்கிறேன் உள்ளோரை
திருத்திக் கொள்வீரே உங்களையும் !
தீண்டாதோர் அல்லவே ஏழைகளும்
தீவிரம் காட்டிடுங்கள் உதவுவதில் !

இயன்றதை நாமும் உதவிடுவோம்
இல்லாமை கல்லாமை நீக்கிடுவோம் !
நல்லவையே நடந்திட பாடுபடுவோம்
நானிலம் போற்றிட வாழ்ந்திடுவோம் !

பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (6-Dec-14, 3:39 pm)
பார்வை : 211

மேலே