காலத்தின் கண்ணாடி அல்ல - சந்தோஷ்

இங்கே....
இந்த உலகத்திலே....!
நானொர் எழுத்தாளன் என்றேன்
நானே காலத்தின் கண்ணாடி என்றேன்.

கல் எடுத்து அடித்தாலும்
உடைந்து போயிருக்கமாட்டேன்..!
கல்நெஞ்சோடு
முகம் கொடுக்க மனமில்லாமல்
நாசியை பொத்திக்கொள்ளாமல்
செவிகளை மூடிசெல்கிறார்கள்...!
சமூக வாசனை அறியாதவர்கள்..!


யாருக்காக நான் எழுதுகிறேன்..!
எனக்காக....?
எதற்காக எனக்காக
எனக்கு எழுதவேண்டும்?

நண்பனுக்காக..?
அவன் ....
அருமை என்றோ
தொடருடா என்றோ...
உண்மையாய் பொய் அங்கீகாரம்
கொடுப்பானே...!

அவளுக்காக..?
அவளே ஓர் உயிர்கவிதை
அவளுக்கு எதற்கு
என் பொய்கவிதை..?
வேண்டுமென்றால்
முத்தமிட முடியா நேரத்தில்
பத்து பத்து கவிதை
அவளுக்கு எழுதிவிடுகிறேன்.

பாவம் அவளாவது
என் ரசிகையாக வாழட்டும்.....!!


ஆனாலும்....!

நான் எழுதி என்ன பயன்...?


அரசியல் மேடையில்
பொய்வாக்கு கொடுக்கும்
அயோக்கியனின் வாயை
கிழிக்க வேண்டுமே...!

அதற்காகவேனும்.....!

ஆண் என்ற மமதையில்
சிறுமிகளிடம் சில்ஷமிட்டு
மன்மதன் வேடமிடும்
கிழவர்களின் ஆண்மையை
பிடுங்க வேண்டுமே...!


அதற்காகவேனும்....!


விளக்கமாற்றை கையிலெடுத்து
விளம்பரத்தில் குப்பைகொட்டும்
ஊடகவியாதிகளின் ஆட்டத்தை
அடக்க வேண்டுமே... !

அதற்காகவேனும்.....!


ஏகாபத்திய நாட்டாமையில்
அக்கிரம ராஜபக்சேக்கள்
உலகத் தமிழர்களையும்
எமது மீனவர்களையும்
பொழுதுபோக்காய்
இனப்பிரிவினையிடும்
கொடுமையினை என்
கொடுவாளில் வெட்டி
வீழ்த்த வேண்டுமே..!

அதற்காகவேனும்....!

நான்....
முதலில் சொரணைப்பெற
உப்பு திங்க வேண்டும்..- பின்பு
தப்புகளை தவிடுப்பொடியாக்க
பேனா தாண்டவம் ஆட வேண்டும்..!

என் ஆட்டத்தின் மரண அடி
ஒவ்வொரு நெஞ்சத்திலும்
இடியாய் இறங்கும்...!
இடியாய் இறக்கி
புயலாய் புரட்சியை
சுழுற்றி உருவாக்குவேன் !
காது பொத்தியவனின்
கரங்களை உடைத்து
உண்மையை உரக்க சொல்வேன்.


எழுத்தில் எழும்
அடாவடித்தனத்திற்கு
பெயர் வன்முறை அல்ல...!


ஆம் ...!
என்னிலிருந்து வரும்
ஒரு புதிய பரிணாமம்...!


இன்னும் ...
எத்தனை நாளைக்குத்தான்
சே.குவேராவையும்
பாரதியையும்
படித்து படித்து
பொய் வீராப்பு காட்டிட முடியும்..!


நான் எப்போது ?
அவர்களை போல
புரட்சியை விதைத்து
புதிய மாற்றத்தை
சரித்திரத்தில் எழுதுவது..! ?

நான் காலத்தின் கண்ணாடி அல்ல..!
காலக்கொடுமையில் உருவான
கோபக்காரன்...!
திமிர் பிடித்த எழுத்தாளன்...!



-----
நான் என்பது நான் மட்டுமல்ல...!

-இரா.சந்தோஷ் குமார்.

எழுதியவர் : -இரா.சந்தோஷ் குமார் (6-Dec-14, 4:32 pm)
பார்வை : 236

மேலே