இவன் கவிஜி அல்ல

நான் ஓடி ஒளிகிறேன்
கரப்பான் பூச்சிகளின்
கனவுக்குள்
என் நிறங்கள்
என்னவோ ஆகின்றன.....

மின் மினிக் கற்பனைகளை
நான்
மரணங்களில்
உலர்த்திக் கொண்டேயிருக்கிறேன்.....

தேடலும் தீவிரமும்
எனை,
எழுத்துக்களாக்கி
சிறை வைத்திருக்கின்றன....

தூக்கம் வேண்டாத
தொலைதலில்
தொலைதூர புரியாமைக்குள்
என் விசும்பல்கள்
உதிர்ந்து கொண்டேயிருக்கின்றன...

தீ சுட்ட வடுக்களை
நீர் ஊற்றி கடந்த பெருமனதுக்குள்
இருள் சூழ்ந்த
மூட்டை பூச்சிகளின்
தடிப்பு
சுவர் சமைக்கின்றன...

யாருமற்ற வெளிகளில்
என் வரம்
ஒரு தொலைக் காட்சிப் பெட்டிக்குள்
என்னை சவமாக்கி
தீர்க்கிறது....

சனிகளில் ஞாயிறுகளில்
கடவுளாகத் திரிந்த
பொழுதுகளில்
என் மழைச் சாரலை
குடையாக்கி சுமந்த
விரல்கள் மட்டும்
என் கதவுகளை திறந்து கொண்டும்
அடைத்துக் கொண்டும்
எனக்குள்
கல்லறையொன்றை
மறக்கச் செய்து
கொண்டேயிருக்கிறது...

நான் சுவரற்ற
ஓவியமாய்
வரியற்ற காவியமாய்
புரியாத தேசத்துள்
புத்தியின்றி சிதறுகிறேன்...

நான்
நானற்றவனாய்
தொலையத் துவங்கும்
நாளில்
யாராவது எழுதுவார்கள்
இவன் கவிஜி அல்ல
விஜி என்று......

கவிஜி

எழுதியவர் : கவிஜி (7-Dec-14, 1:37 pm)
Tanglish : ivan kaviji alla
பார்வை : 170

மேலே