அவள் வருவாளா பொள்ளாச்சி அபி

“எங்கேப்பா அவளை இன்னும் காணோம்..,உறுதியா வந்துடுவாளா..?” சந்திரன் இந்தக் கேள்வியைக் கேட்பது இதோடு நான்காவது முறை..ஒவ்வொரு முறை இந்தக் கேள்வியை அவர் கேட்கும்போதும் முதல்முறையாக கேட்பது போன்றே அவரது தொனி இருந்தது.

அந்தப் பேருந்து நிலையத்தில் வந்து நிற்கும் ஒவ்வொரு பேருந்திலிருந்தும் அவள்தான் இறங்குகிறாளா..? என்று உன்னிப்பாகப் பார்த்துக் கொண்டிருந்த அவனுக்கும்,சந்திரன் ஒவ்வொரு முறை கேள்வி கேட்கும்போதும் சற்று திக்கென்றுதான் இருந்தது.

அவரைச் சொல்லிக் குற்றமில்லை. “சாயங்காலம் அஞ்சுமணிக்குள்ளே நிச்சயம் நான் வந்துருவேன்.எனக்காக பஸ் ஸ்டேண்டுலேயே வெயிட் பண்ணுங்க..”என்று காலையில்,அவனை சந்தித்தபோதே சொல்லிவிட்டுத்தான் சென்றிருந்தாள்.

மணி இப்போது ஆறு ஆகப்போகிறது.

சந்திரனின் கேள்விக்கு இப்போதும் பதில் சொல்லாமல் இருந்தால்,நன்றாக இருக்காது. “அஞ்சு மணிக்குளளே; வந்துடறேன்னுதான் சொன்னாள்.இப்ப லேட் ஆகுதுன்னா,ஏதாவது நியாயமான் காரணம் இருக்கும்.கண்டிப்பா அவ வந்துடுவா. எனக்கு நம்பிக்கையிருக்கிறது”அவருக்கு பதிலளித்துவிட்டு,அங்கு வந்து நிற்கும் பேருந்துகளிலிருந்து இறங்கும் பெண்களை,சற்று அவஸ்தையோடு பார்க்கத் துவங்கினேன்.சந்திரனும் பேருந்து நிறுத்தத்தின் மீது ஒரு கண்ணை வைத்துக் கொண்டே சிகரெட் பிடிக்கத் துவங்கிவிட்டார்.புகை மெதுவே என்னைக் கடந்து கொண்டிருந்தது.

நான் பணியாற்றிக் கொண்டிருந்த தொழிற்சாலையில்தான் அவளும் பணியாற்றிக் கொண்டிருந்தாள்.அவளை முதன்முதலில் பார்த்தவுடன் எனக்கு அவள்மீது காதலெல்லாம் வந்துவிடவில்லை. பழகப்பழக அவளின் குணம் எனக்குப் பிடித்திருந்ததைப் போலவே,என்னையும் அவளுக்குப் பிடித்திருந்தது.அதற்கே மூன்றாண்டு காலம் பிடித்தது.

பின்னர் வழக்கமான காதலர்களைப் போலவே,நாங்களும் கடிதங்களைப் பகிர்ந்து கொண்டோம்.ஒன்றாக வெளியிடங்களில் சுற்றினோம்.

திடீரென்று ஒருநாள் வழக்கமான சந்திப்பின்போது, என்னைப் பெண் பார்க்க,வீட்டில் ஏற்பாடு செய்துவிட்டார்கள். நமது காதலைப் பற்றி வீட்டில் சொல்லிவிடலாம் என்று இருக்கிறேன் என்று அவள் சொன்னபோது,எனக்கொன்றும் அதிர்ச்சியாயில்லை. “சரிதான்..சொல்லீடு,நானும் எங்கவீட்டுலே சொல்லிடறேன்”

“வீட்டுலே சம்மதிக்கலேன்னா..?”

“சம்மதிக்க மாட்டாங்கதான்..,என்ன செய்யுறது.? நம்மளைப் பத்தி பெத்தவங்ககிட்டே சொல்லிடறது நம்ம கடமை.அதுக்கப்புறம்,அவங்க முடிவைப் பொறுத்து நாம என்ன செய்யுறதுன்னுதான் ஏற்கனவே முடிவு பண்ணி வெச்சுருக்கறமே.எப்படி யோசிச்சாலும் நமக்கு,அதைத் தவிர வேறு வழியில்லை.!”

சில விநாடிகளாக,அவளிடமிருந்தும் மௌனத்தைத் தவிர பதிலாக எதுவும் வெளிப்படவில்லை.

“என்னப்பா..யோசிக்கிறே..? வேற சாத்தியமான வழி எதுவாயிருந்தாலும் சொல்லு..”

“இல்லைங்க..நானும் இதைப்பத்தி பலமுறை யோசிச்சுட்டேன்..ஒரு வழியும் தெரியலை.நீங்க சொன்னமாதிரியே செய்துடலாம்..”

பெற்றோர் எங்கள் காதலை ஏற்றுக் கொள்ளாத பட்சத்தில்,முறைப்படி பதிவுத் திருமணம் செய்து கொள்வது.திருமண பந்தத்தில் நாம் இணைந்துவிட்டதை இந்த உலகுக்கு அறிவிக்கும் வகையில்,அன்று மாலையே நண்பர்களுக்காக ஒரு வரவேற்பு நிகழ்ச்சியையும் ஏற்பாடு செய்துகொள்வது..,திருமணத்திற்குப் பிறகு வசிப்பதற்கு தேவையான ஒரு வீட்டையும் வாடகைக்கு ஏற்பாடு செய்து கொண்டுவிடலாம்.., என்பதுதான் எங்கள் திட்டம்.

எங்கள் காதல் குறித்து வீட்டில் சொன்னபோது,நாங்கள் முன்னமே எதிர்பார்த்தபடி, இருதரப்பு பெற்றோரும் கடுமையாக எதிர்த்தனர்.அவர்களின் எதிர்ப்புக்கு,அவர்கள் தரப்பில் ஆயிரம் நியாயங்களும் இருந்தது. ஆனால்,அதற்காக காதலைக் கைவிட முடியவில்லை.அதற்கும் எங்கள் தரப்பில் ஆயிரம் காரணங்கள் இருந்தது.

எங்கள் திட்டப்படி,இன்று அவள் வீட்டைவிட்டு வெளியேறுகிறாள்.சந்திரன் வீட்டில் அவளைத் தங்க வைப்பதும்,மற்ற ஏற்பாடுகளை விரைவில் செய்து கொள்ளவேண்டும்.

இப்போது அவள் வருகைக்காகத்தான் நானும் சந்திரனும் பேருந்து நிறுத்தத்தில் காத்திருக்கிறோம். மேலும் சில நிமிடங்கள் கழிந்தன.

அதோ..,அவள்தான்.., பேருந்திலிருந்து இறங்குகிறாள்.நான் வேகமாகச் சென்று அவள் முன்பாக நின்றேன்.

அவள் கண்ணில் நான் பட்டதும்,ஒரு நைந்த புன்னகை அவளிடமிருந்து வெளிப்பட்டது.வரும் வழியில் அழுதிருப்பாள் போலும்.முகம் வழக்கமான பிரகாசத்தை இழந்திருந்தது.நடையிலும் சோர்வு. “ஏம்ப்பா..இவ்வளோ லேட் ஆயிடுச்சு..வீட்டுலே ஏதாவது பிரச்சினையா..?”

“பச்..வழியிலே ஒரு ஆளுங் கட்சியோட ஊர்வலமாம்,பஸ்செல்லாம் எங்கேயோ பொய் சுத்திட்டு வந்தது.வேற பிரச்சினையெல்லாம் ஒண்ணும் இல்லேங்க..வீட்டைவிட்டு பிரிஞ்சு வர்றதுதான் ரொம்பக் கஷ்டமாயிருக்கு..” அவளுடைய கண்கள் இப்போது நீரில் மிதப்பது நன்றாகத் தெரிந்தது.

பிறந்த வீட்டைவிட்டு வெளியேறும் ஒரு பெண்,எத்தனை விதமான மனப் போராட்டங்களை சந்திக்க வேண்டியதிருக்கும்..என்று நானும் உணர்ந்துதான் இருந்தேன்.ஆனால்..இப்போது அதற்காக என்ன சமாதானம் சொல்லமுடியும்.? எனக்கும் தடுமாற்றமாகத்தான் இருந்தது.

சந்திரன் எங்களுக்கு முன்பாக மெதுவே நடந்து கொண்டிருக்க,அவரைத் தொடர்ந்து நாங்களும் அவர் வீட்டிற்கு சென்றோம்.

வீட்டில்,சந்திரனின் மனைவியும்,இன்னும் சில நண்பர்களும் எங்களுக்காகக் காத்திருந்தனர்.ஏற்கனவே எதிர்பார்த்த சூழல்தான் என்பதால்,அவள் இப்போது சற்று சகஜமான மனநிலைக்கு வந்திருந்தாள்.

உள்ளே சென்று அமர்ந்தவுடன் கொடுக்கப்பட்ட டீ,பிஸ்கெட்டுகளை மெதுவே கொறித்தோம். “சரி..பதிவுத்திருமணத்திற்கு நாள் பாத்திரலாமா..? யாரோ ஒரு நண்பரின் குரலைத் தொடர்ந்து,சுவற்றில் மாட்டப்பட்டிருந்த காலண்டர்,இன்னொரு கைக்கு மாறியது.

கிழமைகள்,விடுமுறைகள் என பல தேதிகள் அலசப்பட்டன. அவகாசம் போதாது.., அன்னைக்கு வெச்சா நம்ம நண்பர்கள் வரமுடியாது.. என்று ஏதாவது ஒரு காரணத்திற்காக சில தேதிகள் மறுக்கப்பட்டன.

அதுவரை மௌனமாக அவர்கள் பேசிக் கொண்டிருப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த அவள்,என்ன சிக்கல் வந்தாலும் சரி,டிசம்பர் பதினொன்னாம் தேதி திருமணத்தை வெச்சுக்கலாம்.அவள் சொன்னவிதம்,அதில் தொனித்த உறுதி.. அங்கிருந்த நண்பர்களை மறுத்துப் பேசவிடாமல் செய்து விட்டது போலும்.சிலவிநாடிகள் மௌனத்தில் கழிந்தன.

“குறிப்பா அந்தத் தேதியிலே என்னம்மா விசேஷம்..?”சந்திரன்.

“அது பாரதியார் பிறந்தநாள்.எங்களை மாதிரி கல்யாணம் செய்யுறவுங்களுக்கு அதைவிட விசேஷமான நாள் வேறென்ன இருக்கமுடியும்..சொல்லுங்க.” அவள் கூறியதன் பின்னே உள்ள நியாயத்தை அனைவரும் உடனே உணர்ந்தனர். ஆகா..பிரமாதம்..என்ற குரல்களைத் தொடர்ந்து கைதட்டல்களால் அந்த அறை நிரம்பியது.

அதன்படி,டிசம்பர்.11.1993 என்று,அவள் குறிப்பிட்ட தேதியே முடிவு செய்யப்பட்டு, அழைப்பிதழுக்கான வாசகங்கள் முடிவு செய்யப்பட்டன.மாதிரி அழைப்பிதழுக்காக எழுதியவற்றை எங்களிடம் கொடுத்தனர்.

அந்த வாசகங்களின் இறுதியில்,என்றென்றும் அன்புடன்..அவளது பெயரான பிரேமா என்றும்,எனது பெயரான அக்பர் என்றும் எழுதி அதனை நிறைவு செய்தோம்.!
-----------------------------


குறிப்பு-வணக்கம் தோழர்களே..! இது ஏதோ சிறுகதை என்று நினைத்து நீங்கள் வாசித்து வந்திருந்தீர்கள் எனில் மன்னிக்க வேண்டுகிறேன்.இது 21 ஆண்டுகள் முடிந்து,22.ஆம் ஆண்டில் காலடி எடுத்துவைக்கும் எங்கள் வாழ்க்கைக் கதை..!

எழுதியவர் : பொள்ளாச்சி அபி B +ve (10-Dec-14, 11:16 pm)
பார்வை : 774

மேலே