கைபேசியின் கனவு-ரகு
தெருமுக்கில்தான் உன்வீடு
உன் திசைகள் தேடுவதில்
அலாதிப் பிரியம் எனக்கு
உன் பாதைகளில்
சுவடுபதித்திருக்கும்
என் தவமானது
சொல்லிமாளாத சுகம்
உன்னிதழ் உதிர்க்கும் சொற்களில்
கவிதைக்காகுமென சிலவற்றை
தெரிவு செய்கிறேன்
தெரியாமல் ஒருநாள்
நெற்றிகள் உரசிக்கொண்டோம் நாம்
அந்த நிமிடத்திலிருந்து
சற்றே நகரவும் முயசிப்பதில்லை
என் மனக்கால்கள்
பேருந்து நிறுத்தத்திலும்
தோழிகளுடனான பூங்கா விஜயத்திலும்
தூரம்நின்று பார்க்கும்எனக்கு
சிறகுபோல மென்கவிதையொன்றை
நல்காமல் போவதில்லை உன்வரவு
பூங்காக்களின் மணற்பாதையில்
ஒத்தடம் கொடுத்தாற்போல்
உன்கால்கள் பதிக்கிறாய்
அதைப் பத்திரப்படுத்துவதில்
நீள்கிறது என் கைபேசியின் கனவு
நான் மறைந்துநின்ற
மரத்து நிழலில்
உதிர்ந்துகிடக்கும்
கூந்தல் பூக்கள்
மென்னிதழ்களில்
மெல்லியப் புன்னகை
விழுந்துதெறித்த நாழிகை
சற்றும் எதிர்பாராமல்
என்வசம் திரும்பும் குறும்பார்வை
உனதான அனைத்தையும்
உள்ளடக்கியே என்காதல்.!