காற்றில் மிதக்கும் இறகு - தேடல் 8 - கிருத்திகா தாஸ்

தன் நிறமொத்த
பறவையொன்றைத்
தேடித் திரிந்தது இறகு...
கனத்துப் போன
பாதைகளோடும்
கறுத்துப் போன
மேகங்களோடும்...


குருதிக் காற்றில்
மிதந்து சென்ற இறகு
பாலத்தைக் கடந்த
சாலையொன்றில்
பறந்து திரிந்தது...


எறிந்து கிடந்த
சிறு
பூக்கூடைக்குள்
முகம் சிதைந்த
அந்தக்
குழந்தை பொம்மையும்
பாதி கருகிய
ஒரு புகைப்படமும்


முள்வேலி கடந்து
சருகுதிர்த்த மரத்தினடியில்
காய்ந்த பூக்களோடும்
கருகிய சருகுகளோடும்
கிடந்த இறகு ,
தன் அடையாளம்
மறந்து போனது...


பிளந்து கிடந்த
அந்தப்
பாதையின் ஓரம்
வரைந்து வைத்த
மனிதக் கோடுகள்...
காக்கை கொத்திய
மிச்சங்களாய்...


சிதைந்து போன
மண் மேட்டின் மேல்
உடைந்து கிடந்த
குடுவைக்கு வெளியே
தன்னந்தனியாய்க் கிடந்தது
அந்தத் தங்க மீன்...


வேலி கொண்ட
சிவந்த பாறைகள் ,
சில
சுவாசக் காற்றுகளை
சுமந்திருந்தன...


புகைந்து முடித்திருந்த
நெருப்புக் குவியலுக்குள்
சிக்கிக்கொண்ட இறகு
பறந்து சென்று
பதுங்கிக் கொண்டது ,
ரத்தம் தோய்ந்த
மணல் துகள்களுக்குள்...


கரைந்து போன
காட்சிகள் சில
கடந்து கடந்து போக...
பறந்து போன இறகு
ஒட்டிக் கொண்டது
அந்தப் பெயரற்ற
பலகையின் மேல்...


"விபத்துப் பகுதி
கவனமாகச் செல்லவும்"




- கிருத்திகா தாஸ்...



((இது நான் எழுதும் முதல் சமூக கவிதை... இத்தகைய நல்லதொரு தொடக்கத்தையும் வாய்ப்பையும் கொடுத்த தோழர் திரு.குமரேசன் அவர்களுக்கு என் நன்றிகள் பல))

எழுதியவர் : கிருத்திகா தாஸ் (12-Dec-14, 1:43 pm)
பார்வை : 337

மேலே