எனது கவிதைப் புத்தகத்தைப் புரட்டிப் பார்க்கிறேன் 25

நேற்று இன்று நாளை 1

நேற்று :
நீ புரட்டிப் பார்க்கும்
சரித்திரத்தின்
பழைய பக்கங்கள்

இன்று :
நீ எழுதிக் கொண்டிருக்கும்
நாட்குறிப்பு

நாளை :
நீ எழுதவேண்டிய
சரித்திரத்தின்
புதிய அத்தியாயம்

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
மா முனிவர்கள் போற்றும் மந்திராலயம் 2

இதய மலையில் இயற்ற முடியாத
தவத்தினை
இமய மலையில போயா இயற்றப் போகிறாய்

இதயக் குகையில் கிட்டாத மௌனம்
இமய முடியிலா கிட்டும்

மனந்தான் ஆலயம் மௌனம்தான் மந்திரம்
அதுதான்
மாமுனிவர்கள் போற்றிய மந்திராலயம்
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

சிகரம் அடிவாரம் 3

அடிவாரத்திலிருந்து அண்ணாந்து
பார்த்துக் கொண்டிருப்பவனுக்கு
சிகரங்கள் கிட்டுவதில்லை

மலையை நோக்கிப் பயணப் படுபவனே
சிகரத்தைத் தொடுவான் அடைவான்

ஆன்மீகத்தில் நூற்றிற்கு தொநூற்றுஒன்பது பேர்
அடிவாரத்து ஆரவாரக் கூட்டங்களே

பயணிப்பவன் எவனோ ஒருவனே !

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

இயற்க்கை எனும் ஆலயம் 4

வைகறை மௌனம் கலைய
பறவைகள் மகிழ்ந்து இசை பாடும்

மலர்களெல்லாம் விரிந்து
பனித்துளி ஏந்தி மலர் ஆரத்தி எடுக்கும்

மலர் மஞ்சத்தில் துயின்ற தேன் வண்டும்
சிலிர்த்து இறகு விரித்து ரீங்காரம் பாடும்

நான்மறை வேதங்கள் பக்தன் நாவினின்று
ஓங்கி உயர்ந்து ஒலிக்கும்

நீலச் செவ்வான நெடு வீதியில்
ஆதவனின் தேர் அசைந்து எழுந்து வரும்

இயற்கை எனும் எழில் ஆலயம் மெல்ல
வாசல் திறக்கும் இளங்காலை நேரம்
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

ஆனந்தக் குற்றாலம் 5

குற்றாலம் பார்த்தேன்
என்பது அல்ல
குற்றாலத்தில் குளித்தேன்
என்பதே சரி

கோவிலைப் பார்த்தேன்
என்பது அல்ல
கோவிலில் இறைவனை
வணங்கினேன் என்பதே சரி

அருவியில் நனைவது
இனிய அனுபவம்
ஆண்டவன் அருளில் நனைவது
தெய்வீக அனுபவம்

குற்றால அருவியில் நீராடி
குழல்வைமொழியினளுடன்
அழகிய அருவிக் கரையில் அமர்
கவின் சாரலன் குற்றால நாதனை
அவன் ஆலயத்தில் வணங்குதல்
ஆன்மா களித்திடும் ஆனந்த குற்றாலம்

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

ரோஜாவின் காதலன் 6

ரோஜா நீ மலர்களின் ராணி
முட்கள் உனக்கு காவல்

நீ புன்னகையின் அரசி
பெண்கள் நேசிக்கும் தோழி

உன் இதழ்கள்
நான் எழுதும் இலக்கியம்

அத்த்ருக்கு உன்னை பிழிபவர்கள்
உன்மத்தப் பித்தர்கள்

முட்களோடும்
உன்னை நான் அணைத்திடுவேன்

உன் கண்ணீரை
என் கவிதையால் துடைத்திடுவேன்

ரோஜாவே
கவிஞன் நான் உன் காதலன்
நீ என் காதலி
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

அவள் பார்வை உன்னைத் தொடும் 7

வான வில்லின்
வண்ணங்களை எல்லாம்
வார்த்தைகளில் எழுதி
கவிதையாய்
அவள் காலடியில்
வைத்தால்
உன்
கவிதை விண்ணைத் தொடும்
அவள் பார்வை உன்னைத் தொடும்
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

வார்த்தைகள் நிமிர்ந்து நின்றால் 8

வண்ணகள் வளைந்து நின்றால்
வானவில்
வார்த்தைகள் நிமிர்ந்து நின்றால்
கவிதை
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

நான் வணங்கும் ஆலயம் 9

அழகு எனக்கு ஆராதனை
அன்பு எனக்கு மணி ஓசை
ஆன்மா நான் வணங்கும் ஆலயம்
மானுடம் நான் போற்றும் தத்துவம்
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

ஆலய தரிசனம் 10

ஒளியை மறைத்து நிற்கும்
உபய விளம்பரம்
ஆன்மாவை மறைத்து நிற்கும்
உள்ளத்தின் ஆணவம்
இரண்டும் அகன்று விட்டால்
ஒளி வெள்ளம்
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

-----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (14-Dec-14, 4:24 pm)
பார்வை : 109

மேலே