எய்ட்ஸின் வரலாறும் தற்போதைய நிலையும்

அறிமுகம்.

தனிமனித ஒழுக்கத்தின் மேன்மையையும், பாலியல் கல்வியின் தேவையையும் உலக மக்களின் மத்தியில் பொதுவுடைமை ஆக்கியது இந்த எய்ட்ஸ் நோயாகும்.

நூறு ஆண்டுகளுக்கு முன்பு சப் சஹாரன் நாடுகளின் ஏதோ ஒரு மூலையில் ஆரம்பித்து இன்று உலகில் சுமார் 35.3 மில்லியன் மக்களின் உயிர்குடிக்கும் நோயாக மாறியிருக்கும் எய்ட்ஸின் வரலாறு மற்றும் பயணம் இன்றளவும் நோயியல் மற்றும் நுண்ணுயிரியல் ஆராய்ச்சியாளர்களுக்கு பெரும் சவாலாக விளங்குகிறது ...


பெயர் மற்றும் ஆரம்ப கால ஆராய்ச்சிகள் :

ஓரினசேர்க்கை மற்றும் சுத்தகரிக்கபடாத போதை ஊசிகளை பகிர்ந்து கொண்ட ஆண்களின் தோல்களில் ஏற்பட்ட புற்றுநோய் (காபோசி சார்கோமா) எய்ட்ஸ் பற்றிய ஆராய்சிக்கு வித்திட்டது .. அதிக அளவில் பரவி வந்த காபோசி சர்கோமா மற்றும் நிமோசிஸ்டிஸ் கார்னி நிம்மோனியா நோய்களின் தாக்கத்தால் 1981-ல் அமெரிக்காவின் நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு மையம் எய்ட்ஸ் பற்றிய ஆராய்ச்சியினை லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் ஓரின சேர்க்கை செய்து நிமோசிஸ்டிஸ் கார்னி நிம்மோனியா நோய் தாக்கப்பட்ட 5 ஆண்களை கொண்டு தொடங்கப்பட்டது

எய்ட்ஸ் நோய் 1981-ல் கண்டுபிக்கப்பட்ட போதிலும் அதற்கான நோய் கிருமியான ஹெச். ஐ . வி வைரஸ் 1983-ல் கண்டறியப்பட்டு 1984 - ல் அமெரிக்க தேசிய புற்றுநோய் ஆராய்ச்சி நிலையத்தில் உறுதி செய்யப்பட்டது.

ஆரம்ப காலங்களில் பெயரிடப்படாத இந்நோய் ஓரினசேர்க்கை மற்றும் ஊசிகள் மூலம் போதை மருந்து உபயோகிக்கும் ஆண்களில் மட்டுமே பரவும் நோய் என கருதப்பட்டு GRID - Gay Related Immune Deficiency என்று பெயரிடப்பட்டது. ஆனால் 1982 - களின் பிற்பகுதியில் இந்நோயின் தாக்கம் ஓரினசேர்க்கையாளர்கள், இரத்தம் உரையாமை நோய் (Hemophiliacs), ஹெராயின் போதை மருந்து உபயோகிக்கும் ஆண்களை தவிர்த்து பெண்களிடமும் இருப்பதை அறிந்து AIDS என்று 1982 ஜூலை பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

ஹெச்.ஐ .வியின் வகைப்பாடு :

மேற்கத்திய நாடுகளை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் தொற்றினை உண்டாகக்கூடிய ஹெச்.ஐ .வி வைரஸை இரண்டாக வகைபடுத்தினர். அமெரிக்கா உள்ளிட்ட மேலை நாடுகளில் கண்டறியப்பட்ட ஹெச்.ஐ .வி வைரஸை HIV -I எனவும் , ஆப்பிரிக்க நாடுகளில் கண்டறியப்பட்ட ஹெச்.ஐ .வி வைரஸை HIV- II எனவும் பிரித்தனர்.

எய்ட்ஸின் தோற்றமும் பரவிய விதமும் :

HIV I & II ஆகிய இரண்டு நோய் கிருமிகளும் மனித இனமிடமிருந்து தோன்றவில்லை என்று தெளிவாக நம்பப்படும் சூழ்நிலையில், இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மத்திய மேற்கு ஆப்பிரிக்க நாடான கமரூனில் வாழ்ந்துவந்த மனித குரங்குகளை தாக்கிய ஹெச்.ஐ .வி 1 & 2 வகைப்பாட்டில் இருக்கும் Asimian Immunodeficiency Virus மூலமாக ஹெச்.ஐ .வி வைரஸ் மனிதர்களிடம் தொற்றியிருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள்.

அந்நோய் பாதிக்கப்பட்ட மனிதக்குரங்குகளை இறைச்சிக்காக வேட்டையாடப்பட்டு உணவாக மனிதர்களால் உட்கொள்ளபட்டதும் ஒரு காரணம் என்று கருதப்படுகிறது.

ஐரோப்பிய காலனி ஆதிக்கத்திற்கு உட்பட்ட ஆப்பிரிக்க நாடுகளில் இருந்த பாலியல் தொழில் முக்கியமான நோய் பரப்பும் காரணியாக்கப்பட்டது. குறிப்பாக பெல்ஜிய ஆட்சியின் கீழ் இருந்த காங்கோ நாட்டிலிருந்து தான் எய்ட்ஸ் பரவியது என்று கூறப்படுகிறது. 1928 ம் ஆண்டில் காங்கோ நாட்டில் , கின்ஷாசா நகரில் வசித்த பெண்களில் 45 சதவீத பெண்கள் பாலியல் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். 1933 ன் தொடக்கத்தில் சுமார் 15 சதவீத காங்கோ மக்கள் சைபில்ஸ் என்ற பால்வினை நோய் தொற்று உடையவர்களாக இருந்துள்ளனர்.

ஆப்ரிக்காவில் இரண்டாம் உலக போருக்கு பின் ஏற்பட்ட பாதுகாப்பில்லாத மருத்துவ நடவடிக்கைகள் மற்றும் விழிப்புணர்வு இல்லாமை போன்ற காரணங்கள் மேலும் நோயை அதிவேகமாக பரவ செய்தது. இரண்டாம் உலக போர் நடந்து கொண்டிருந்த காலகட்டங்களில் ஏற்பட்ட சாதாரண மலேரியா நோய் தொடரினை தடுக்க பயன்படுத்திய தடுப்பூசிகள் யாவும் சுகாதாரமற்ற முறையில் கையாளப்பட்டதாகவும் , ஒரே ஊசியின் மூலம் பலதரப்பட்ட மக்களுக்கு மருந்து தரப்பட்டது எனவும் கூறப்படுகிறது.

நோய் நாடெங்கும் பரவிய போதும் 1958 ல் தான் எய்ட்ஸ் என்ற நோய் மனிதனை தாக்கியதாக ஆதாரத்துடன் விளக்குகிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். 1969 ல் ஹைத்தி வழியாக அமெரிக்க ஐக்கிய மாகணங்களில் இந்நோய் பரவியது. 1978 ல் நியூயார்க் மற்றும் சான்பிரான்சிஸ்கோவின் மக்கள் தொகையில் 5 % மக்களுக்கு(ஓரினசேர்க்கையார்கள்) இந்நோயின் தோற்று இருப்பது கண்டறியப்பட்டது.

பரவியதற்கான காரணங்கள்:

நோய் பரவலுக்கான காரணத்தை பட்டியலிட்டால் பாதுகாப்பற்ற உடலுறவு காரணமாகவே அதிக மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 86 சதவீதம் பாதுகாப்பற்ற உடலுறவின் மூலமாக ஏற்படுகிறது . 4 சதவீதம் நோய் பாதிக்கப்பட்ட தாயிடம் இருந்து குழந்தைகளுக்கும் , 4 சதவீதம் சுத்திகரிக்கப்படாத , முறையாக கையாளப்படாத மருத்துவ கருவிகள் மற்றும் பரிசோதிக்கப்படாத இரத்த பரிமாற்றம் மூலமும் பரவுகிறது.

சிகிச்சை :

எய்ட்ஸ் நோய்க்கான சிகிச்சையோ , தடுப்பு முறையோ இன்றும் கண்டுபிடிக்கப்படவில்லை. ஒருவேளை நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டால் அந்நோயாளியின் வாழ்நாள் சுமார் 9 மாதங்கள் மட்டுமே. இந்நோய் தொற்று மேலும் பல நோய்களை வரவேற்க வழிசெய்கிறது. காபோசியின் சதை புற்று நோய் , கருப்பை முகப்பு புற்று நோய், நிணத்திசு புற்று நோய் மற்றும் மத்திய நரம்பு மண்டல புற்று நோய் ஆகியவை பொதுவாக எய்ட்ஸ் நோயாளிகளிடம் காணப்படும் புற்றுநோயாகும். மேலும் காய்ச்சல், நடுக்கம் , தளர்ச்சி ஆகியவையும் ஏற்படுகிறது.

நோயாளியின் வாழ்நாளை அதிகரிக்க அதி தீவிர ரெட்ரோ வைரல் எதிர்மருந்து அல்லது மிகுதிறன்மிக்க மீளூட்டுநச்சுயிரி எதிர்ப்பொருள் மருந்து பயன்படுத்தப்படுகிறது. இருப்பினும் இதன் அதீத விலை காரணமாக சாதாரண நோயாளிகளால் இதை வாங்க இயலுவதில்லை. 1996 ல் இம்மருந்து நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது. இம்மருந்து நோயாளியின் வாழ்நாளை சுமார் 9 ஆண்டுகளிலிருந்து 10 ஆண்டுகள் வரை அதிகப்படுத்துகிறது. வாழ்நாளை அதிகபடுத்த மட்டுமே இம்மருந்து பயன்படுத்தபடுகிறதே தவிர இம்மருந்தால் எய்ட்ஸ் நோயை முழுவதும் குணப்படுத்த இயலாது.

தற்போதைய நிலை :

வரலாற்றில் மிக மோசமான தொற்று நோயாக கருத்தப்படுகிறது எய்ட்ஸ் . நோய் கண்டறியப்பட்ட நாளிலிருந்து சுமார் 30 மில்லியன் மக்கள் இந்நோயால் இறந்துள்ளனர் . சுமார் 35.3 மில்லியன் மக்கள் இந்நோயுடன் இன்றும் வாழ்ந்து வருகின்றனர்.

தென் ஆப்பரிக்க மக்கள் தான் இந்நோயால் அதிகம் பாதிக்கப்பட்டு உள்ளனர் . மேலும் பாதிக்கப்பட்டவர்களில் 61 சதவீதம் சகாராவை சுற்றயுள்ள பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

உலகில் ஒரு மணி நேரத்திற்கு 600 மக்களுக்கு இந்நோயின் தொற்று ஏற்படுகிறது. மேலும் நிமிடத்திற்கு ஒரு குழந்தை எய்ட்ஸ் நோயால் இறக்க நேரிடுகிறது. பாதிக்கப்பட்ட 35.3 மில்லியன் மக்களில் 17 சதவீதம் பெண்கள் எனவும் , 3.4 மில்லியன் மக்கள் பதினைந்து வயதிற்கு கீழ்பட்ட குழந்தைகள் எனவும் கணக்கிடப்பட்டுள்ளது.

மிக மோசமான பாதிப்புகளுக்கு உள்ளான நாடாக தென்ஆப்ரிக்கா முதல் இடத்திலும் அதை தொடர்ந்து நைஜீரியாவும் மூன்றாம் இடத்தில் இந்தியாவும் உள்ளது. இவ்விபரங்கள் நோயின் வெளித்தோற்றத்தை மற்றும் உணர்த்திவிடாமல் , நாட்டில் உள்ள மக்களுக்கான சுகாதாரம் , ஒழுக்கம் , விழிப்புணர்வு போன்ற விஷயங்களையும் சேர்த்து கேள்விக்குறியாக்கிவிடுகிறது. இந்நோயினால் ஏற்படும் மரணங்கள் ஒரு நாட்டு மக்களின் சராசரி ஆயுட்காலத்தை குறைத்துவிடுகிறது. போட்ஸ்வனா மக்களின் சராசரி ஆயுட்காலம் 65 ஆண்டுகளிலிருந்து 35 ஆண்டுகளாக குறைந்து உள்ளது.

மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்ரிக்காவில் நோய் தொற்று உள்ளவர்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. கிழக்காசியாவில் 0.1 சதவீத மக்களே எய்ட்ஸ் நோய் தாக்கத்திற்கு ஆளானவர்கள் . மேற்கு மற்றும் மத்திய ஐரோப்பிய நாடுகளில் நோய் தோற்று மிகவும் குறைவாகவே இருக்கும் போதிலும் ஐரோப்பிய நாடுகளான ரஷ்யா , உக்ரைன், லட்வியா மற்றும் பெலாரஸ் நாடுகள் அதிக பாதிப்பை சந்தித்துள்ளன .

முடிவு :

நோய் தொற்று கொண்ட பெற்றோர்களுக்கு பிறக்கும் குழந்தைகளை சில நேரம் கைவிட்டு செல்லும் நிலையும் காணப்படுகிறது. இந்நோயால் பாதிக்கப்பட்ட மக்களால் அதிகம் வேலை செய்ய முடியாமல் போவதால் அவர்களின் அன்றாட தேவையை பூர்த்தி செய்யும் கடமை அரசின் பொறுப்பாக்கப்படுகிறது . வயது வந்தோர்களின் இறப்பு எண்ணிக்கை அதிகம் ஏற்படின் மோசமாக பாதிக்கப்பட்ட ஒரு நாட்டின் மக்கள் செல்வம் , பொருளாதார செல்வம் மற்றும் நாட்டின் வளர்ச்சி மேம்பாட்டு திட்டங்கள் எல்லாம் வீழ்ச்சியை நோக்கியே நகருகிறது. இந்நோய் ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியை பாதிக்கும் ஒரு காரணியாக கொண்டாலும் அது ஏற்புடையதாகும் ..


- நித்யா பாண்டியன்

எழுதியவர் : நித்யா (16-Dec-14, 9:44 am)
பார்வை : 423

சிறந்த கட்டுரைகள்

மேலே