நீதான் நீயே தான் - யாழ்மொழி

ஆண்டுகாலமாகத் தேடி
அகப்படாத நிம்மதியினை யெண்ணி
அலுத்துக்கொண்ட நேரத்தில்தான்
அறிந்துகொண்டேன் உனை....

ஆம்.!
நீ தான்
நீயே தான்

உனக்குப்பின் என் வாழ்வில்
எவருமிருக்க கூடாதென
வெறுமையினை துணையாக்கி - எனை
வேற்றுக்கிரகவாசியாக வாழச்செய்தது
நீயேதான்...

இதயக்கத வுடைத்து - நீ
இரக்கமின்றி சென்றபின்னும்
இல்லாமல் இதயமெல்லாம்
இருந்தென்னை வதைப்பதும்
நீயே தான்...

காதலென்ற சொல்லை - பிறர்
சொல்லிக்கேட்கும் நொடி
நினைவு சாட்டையினால் - என்
நெஞ்சில் அடிப்பதும்
நீயே தான்...

பிரிவதுதான் நோக்கமென்று
பிரிந்தும் சென்றுவிட்டு
உணர்வோடு கலந்திருந்து
உயிர் குடித்து செழிப்பதும்
நீயே தான்...

உறவொன்று வேண்டுமென்று
உறவுகள் தொல்லைசெய்ய
உன்னால் இயலாதென்று
உள்ளிருந்து கர்வமாய் உரைப்பதும்
நீயே தான்....

தொடுத்து வைத்த வார்த்தையெல்லாம்
தொண்டைக்குள்ளே சூழ்கொள்ள
தோகை யெனை தவிக்கவிட்டு
தோல்வியினை பரிசளித்ததும்
நீயேதான்...

களிப்புடனே நீ சென்று
காலங்கள் பல கடந்தும்
கண்ணீர் வழி இன்றும் - என்
கன்னங்கள் தொட்டு ரசிப்பதும்
நீயே தான்...

சிறு புன்னகைத்தேடி தேடி
சளைத்துப்போகும் நேரங்களில் - இரு
செவிகளுக்குள் சம்மணமிட்டமர்ந்து
சத்தமிட்டு சிரிப்பதும்
நீயே தான்...

ஆம்.!
நீ தான்
நீயே தான்

சாவிற்கும் வாழ்விற்கும்
சாணளவே உள்ளபோதும்
சிறுக சிறுக என்னுயிரை - தினம்
சித்ரவதை செய்வதும்
நீ தான்..... நீயே தான்......

எழுதியவர் : யாழ்மொழி (16-Dec-14, 2:07 pm)
பார்வை : 247

மேலே