பாசப்பிரிவினை

அது மழலைக் காலம்,

முட்களின் தேசத்தில்
முள் என்பதை அறிந்ததில்லை
உன் முதுகில் ஏறி
பயணம் சென்றதால் !

அறியாப் பருவம் அது
உனக்கு மட்டும் மழை பொழியும்
என்று எண்ணியது,

உன் அரவணைப்பில்
நான் சென்ற மழைக் காலம் அது!

நீ உள்ள வரை
உணரவில்லை,
உண்ணா விடின் பசிக்கும் என்பதை!

பக்குவம் கொள்ள வித்திட்ட பருவம் அது ,

தாய் துவைத்து, மடித்த உடையை
எடுத்துக் கொடுத்தாய்,
நான் துவைத்துப் பழக,

என் உள்ளங்கை கொள்ளும்
மூன்று கல் கூட்டி
நான் ஆக்கிய முதல் சோறு
சுடுநீர்

அச்சூட்டுடன் பருகி
ஆஹா ! அருமை என்றாயே!

நானும் சுவைக்க,
உன்னிடம் பிடுங்கி அருந்த,

ஐயோ ! சுடச் செய்தேனே
இன்று வரை வெப்பம் அறியா
உன் கை விரல்களை,
உன் மென் நாவினை
என்று அறைந்து கொண்டாயே!

பள்ளிக்கூடம் சென்றேன் ஆனால்
இறுதி வரை நான் வழி
அறியவில்லை
அப்பள்ளிக்கூடத்திற்கு ,

வழி தோறும் வேடிக்கை காட்டி
அழைத்துச் சென்றாயே!

ஆகாயம் நின்று ,
பூவுலகில் தேடியே,
உன் மைத்துனன்
அறிந்தாயே!

பெயரே வேண்டாம்
மருமகள் என்ற சொல் போதும்
என்று

என் குழந்தைக்கு இட்ட
நாமம் மறந்தாயே!

இன்று ஏன் கனக்கச் செய்தாய் என் மனதை?
இப்பாகப்பிரிவினையால்,

அன்றே,
அறியாப் பருவம் !
அன்றே,

நம் வேடிக்கை கேள்விகளில்,

எதுவும் வேண்டாம்
நீ மட்டும் போதும்
என்று விடை பதித்தேனே!

இன்றும் அதே வாக்கியம்
சொல் மாறாமல்தான் கூறுகிறேன்
என் மனம் கொண்டு,

ஏன் நீ மட்டும்
நம்பிக்கை இழந்தாய்?

உன்னில் மட்டும்
ஏன் இந்த மாற்றம்?

நம் தந்தையைக் கூட கடிந்து கொள்கிறேன்,

உன் பாசம் பறிக்கும்
இப்பாகப்பிரிவினைக்கு
இப்பாரில் இடம் பார்த்ததற்கு!


இவ்வுலகில் நான் அறிய
யாரும் பெற்றிடாத
என் பெரும்பாகம் நீயே!

நீயே கொள்!

உன்னையும் சேர்த்து
என் அன்புச் சகோதரா!

எழுதியவர் : கலையரசி (17-Dec-14, 4:10 pm)
பார்வை : 197

மேலே