கடலில் காதலன்கரையில் காதலி
கடலில் காதலனைத் தொலைத்து விட்ட ஓர்
காதலியின் குரல் ..
ஓ..கடலன்னையே காதலைத் தொலைத்து
விட்ட காதலியின் கதறல்
கேட்கிறதா ...உனக்கு ?
அலைகளின் ஓசையில் இந்த,
அபலைப் பெண்ணின் ஓலத்தையும்
சேர்த்துக் கொள் ..!
காதலின் நதியில் என்னை ,
ஓடமாய் சுமந்து தங்கிச் சென்ற ...என்
தலைவன் ...இன்று
உன்னில் மிதந்து கொண்டிருக்க
நானோ அவன் விட்டுச் சென்ற
நினைவுகளில் நனைந்து கொண்டிருக்கிறேன் ..!
என்னவனை என்னிடம் தந்து
விடு தாயே...
சிப்பிக்குள் இருந்து முத்தெடுக்க அவன்
செல்லவில்லை,இந்த முத்திற்காக
சிப்பி எடுக்க சென்றிருக்கிறான் ..!!
கரையோரம் ஈர மணலில் தவழ்ந்து
கொண்டிருக்கும் நண்டினை போல
என் மனம் அலைகிறது ....
இந்த திசையில் வருகிறானா ..இல்லை
அந்த திசையில் வருகிறானா .
என்று பார்பதற்காக....
உன்னிடம் மட்டுமல்ல கடற்கரையின்
கடைக்கோடியில் இருக்கும் கோரைப் பறைகளிடமும்
இப்படி சொல்லி வைத்தேன் ..
கருங்கற் பாறைகளா கேளுங்கள் ..நீங்கள்
இந்த நீண்ட நெடுங் கடற்கரையின் காவலர்கள்
ஆதலினால் உங்களிடம் கூறுகிறேன் ..
என் காதலன் கடலுக்குச் சென்றிருக்கிறான் ,
வந்ததும் எங்களுக்கு கல்யாணம் ,
அதனால் நீங்கள் .....
'அதனால் என்ன'என்ற பாறைகளிடம்,இன்று
பௌர்னமி இரவு..சந்திரன் சேர்த்து வைத்த
குளிரை எல்லாம் உமிழ்வான் வாடைக் காற்றாக ..!
வாடையின் வாதத்திற்கு அஞ்சி,கடலுக்குள்
அமர்ந்து ஒடுங்கி விடாதீர்கள் ..என் காதலன்
இன்று வருவதாய் மனதில் ஓர் சேதி ..!!
உங்களது மேனி தான்,என் பஞ்சு மெத்தை
நான் தூங்கிவிட்டால் என்னை துயிலெழுப்
புங்கள் அவன் வரும் போது....
அவன் வாசம் பட்டால் என் தூக்கம்
கலையும் என்று நம்பினேன் ..கலைந்தது
நாட்களும் நம்பிக்கையும் தான் ..!!
அங்கே கோரைப் பாறைகளுடன் ஓர்
அழுக்குப் பெண்ணும் படிந்து
விட்டாள்..பாறையின் படிமமாக ..!!
உச்சி வெயிலில் என் உயிரவன்
காய்ந்து கொண்டிருப்பானே ..!!
வானிலிருக்கும் கருமேகங்களை தூது
அனுப்பி அவனுக்கு கருமை காட்டச்சொன்னேன்
அவர்களோ ..என்னை கண்டு கொள்ளவில்லை ..!!
கடலில் ஒருவனும் ...இங்கே கரையில்
ஒருத்தியும் காய்ந்து கிடப்பது
தான் காதலா ???
இந்த காதலுக்கு நீ தான் சாட்சி
சொல்ல வேண்டும் கடலன்னையே ..
என்னைவனை என்னிடம் தந்து
விடு தாயே ..!
இல்லையெனில்,இதோ ஓர் சமரசம்
உன் சத்தத்தை எல்லாம் ஒடுக்கிக்
கொண்டு கவனமாகக் கேள் ..!!
என்னவனை ..நீ உன்னிடம் வைத்து
கொள்ளப் போகிறாய் என்றால்..இதோ உன்
மகளையும் நீயே எடுத்துக் கொள் .!!
எங்கள் கல்யாணம் அக்னிக்குப் பதில்
அலைக்கடலே உன் தலைமையில்
நடந்து விட்டுப் போகட்டும் ..!!!!