நான் எழுதிய கிறிஸ்மஸ் பாடல்

நான் எழுதும் மற்றும் வடிக்கும் கவியின் பலனாக கடந்த இரண்டு ஆண்டுகாலம் சென்னை அசோக் நகரில் உள்ள மத்தியாஸ் சர்ச்சுக்கு கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு விழாவிற்கு பாடல்களை எழுதுகிறேன். இதோ என்னுடைய படைப்புகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி கொள்கிறேன்.. எனது கவிதை படைப்புகளோடு எனது பாடல் படைப்புகளையும் பார்த்து ரசிக்கவும் பகிரவும் கேட்டுகொள்கிறேன். போன வருடம் திருவண்ணாமலை சிவன் "கிரிவலம்" பற்றிய பாடல் எழுதிகொடுத்தேன். கிடைத்த வரவேற்பு எனக்கு அடுத்தடுத்த சிந்தனைக்கு அழைத்து செல்கிறது.. ஆக்கமும் ஊக்கமும் உங்கள் கைகளில். அன்புடன் முத்தி செய்கிறேன்... இதோ இந்த வருட பாடல் நாளை மறுநாள் சர்ச்சில் ஒலிக்க இருக்கிறது...

பலலவி – 1

வந்தாடும் நிலவென,
வசந்தங்கள் உறவென,
விடியல்கள் அவரென,
வாழ்த்திப் பாடு..!

சொந்தங்கள் சுகமென
சந்தங்கள் ஒலியென;
சங்கீதம் அவரென -
போற்றிப் பாடு..!

நெஞ்செல்லாம் எங்கும் சந்தோசம் துள்ள.,
நினைவெல்லாம் தங்கும் சுகமாக மெல்ல -
வான்மேகம் துள்ளி வழியொன்றைச் சொல்ல;
வரவேற்போம் கையில் ஒளியெங்கும் மின்ன -
காலம் கனிந்திட தேவன்வருகிறார் கண்கள்திறந்திடு;


பலலவி – 2

மரியன்னை மடியினில்,
மனிதாஉன் சாயலில்,
மண்ணாள வருகிறார் -
மாலைச் சூடு..!

நமக்காக ஒருயுகம்,
நன்மைக்கு புதுயுகம்;
நலமாக்க வருகிறார் -
நன்றிப் பாடு..!

பூவெங்கும் வாசம் ; புதுராகம் பாடும்;
பகையெல்லாம் தீரும்; பாசத்தில் சேரும்
பாரெங்கும் தேடும் பாசத்தின் தீபம்;
புவியெங்கும் ஆளப் பிறந்தாரோ இன்று -
பாவம் மறைந்திட பாலன்வருகிறார் மனதைத்திறந்திடு..!

எழுதியவர் : ஜேக் .ஜி .ஜே (23-Dec-14, 7:44 pm)
சேர்த்தது : ஜெபீ ஜாக்
பார்வை : 309

மேலே