தயவுசெய்து பேசுங்கள் - Mano Red
பேச்சு....
இதுதான் உயிர் மூச்சென
பலருக்கு புரிவதில்லை,
பேசிப் பயனில்லாத நிலையில்
பேசி என்ன செய்வது...??
ஆயிரங்காலம் கடந்தாலும்
அன்புப் பேச்சு அவசியம் ..!!
பின்னாளில் வாழ்க்கை
இறுகிப் போகாமலிருக்க
மொழிப் புணர்தல் அவசியம் ,
துரித வாழ்வின்
வெளிப்பக்கத்து இரைச்சல்
நாலு சுவற்றுக்குள்
அமானுஷ்ய மௌனத்தை
விதைத்துவிடக் கூடாது..!!
வீட்டுக்குள் அகப்பட்டு
முகத்தை சுருக்கி,
உம்மென இருந்து,
அகோரமாக மூழ்கும் போது,
சிலாகித்து குலாவிய
நேசமிகு பொழுதுகள் எல்லாம்
தொலைந்து கடக்கின்றன....!!
நவீன வாழ்க்கை வீச்சுகள்
பேச்சை வேகமாக தொலைத்து
பலவீனமாக்கி விட்டது,
காதலில்,பாசத்தில்,கோபத்தில்
காட்ட வேண்டிய
பேச்சுக்கள் எல்லாம்
அயற்சியில் காணாமல் போய்விட்டது...!!
அப்புறம் என்ன...??
என்ற அளவில்தான்
பல பேச்சுக்கள் முடிகின்றன,
முகம் கொடுத்துக்கூட
பேசமுடியாத அளவுக்கு
எந்த விதத்தில் என்ன
குறையோ தெரியவில்லை..!
கடுங்கோடை வெயிலில்
கதறிய நாட்கள் கூட
துன்ப இன்பம் பொறுக்கும்,
பேசாமல் தவறிப்போனால்
குளிர் காலங்கள் கூட
விரக்தியில் எரிந்து போகும்..!!
எப்போதாவது வரும்
ஓரிரு வார்த்தைகள்
தீக்குளிக்க துணிந்துவிடும்...!!
மானமில்லாத
அமைதி தீர்மானங்களை
ஒதுக்கி வையுங்கள்,
உள்ளத்தின் ஆழ்ந்த
சமிக்ஞைகளை
பேசித்தான் தீர்க்க முடியும்
தயவுசெய்து மனம்விட்டு பேசுங்கள்,
அது முடியாதபோது
உங்களுடனாவது பேசுங்கள்..,!!