இலவச ஆணுறைகளை , பெருக்கி கொண்டிருந்தேன் கைகளில் , உறை ஏதும் இல்லாமல்
![](https://eluthu.com/images/loading.gif)
பெருக்கி கொண்டிருந்தேன் ..
பெருக்குமாருடன் ,
பெருவிரலும் சிறுவிரலும் சேர்ந்தே தேய ..
பெருக்கி கொண்டிருந்தேன் ..
பெரிய வீதியெல்லாம் ,
பெரியதாய் எண்ணாமல் ..
* * *
இரவு நேரத்தில் ,
தண்டவாள ஓரத்தில் ..
உபயோகித்து ,
உரித்து எறியப்பட்ட ..
இலவச ஆணுறைகளை ,
பெருக்கி கொண்டிருந்தேன் ..
கைகளில் ,
உறை ஏதும் இல்லாமல் ..
* * *
மதுபான கூடம் எதிரே ..
மது ஒழிப்பு போராட்டம் ,
நடந்து முடிந்த இடத்தில் ..
அச்சிடப்பட்ட பிரச்சார தாள்களையும் ..
பிரச்சார மேடையின் பின் ,
குவிந்து கிடந்த ..
மது குடுவைகளையும் - சேர்த்தே
பெருக்கி கொண்டிருந்தேன் ..
* * *
கைப்பிடித்த கணவன் ,
கை கழுவி விட்டவன் ..
கன்னி ஒருத்தியுடன் ,
கண்ணெதிரே ..
கை கோர்த்து செல்ல ,
கண்களில் ..
கண்ணீர் துளி ஏதும் கொள்ளாமல் ,
பெருக்கி கொண்டிருந்தேன் ..
* * *
முறையாக அகற்றப்படாத ,
மருத்துவ கழிவுகளையும் ..
முறையாக அகற்றவேண்டிய ,
மங்கையர் கழிவுகளையும் ..
சமையல் கழிவுகளையும் ,
சாவு வீட்டு கழிவுகளையும் ..
பெருக்கி கொண்டிருந்தேன் ,
சங்கடம் ஏதும் கொள்ளாமல் ..
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
பெட்டி கடைதனில் ஊதி எறியப்பட்ட ,
பீடி துண்டுகளையும் ..
தேநீர் கடைதனில் ,
குடித்து எறியப்பட்ட காகித குவளைகளையும் ..
துணி கடைதனில் ,
தூக்கி எறியப்பட்ட அட்டை கழிவுகளையும் ..
பெருக்கி கொண்டிருந்தேன் ,
அசதி ஏதும் கொள்ளாமல் ..
* * *
நாகரிகத்தின் வெளிப்படையாய் ,
அரை குறை ஆடையுடன் ..
வீதியில் வலம் வந்தவளை ,
வீதியே வெறித்து ரசிக்க ..
பெருக்கி கொண்டிருந்தேன் ,
கண்டும் காணாதது போல் ..
கிழிந்திருந்த என் ரவிக்கையை ,
முந்தானை கொண்டு வேகமாய் மறைத்தே ..
* * *
பத்திரிக்கை நண்பர்களும் ,
புகைப்பட கலைஞர்களும் ..
திடீரென ,
என்னை சூழ்ந்து நிற்க ..
கூட்டி அள்ளிய ,
குப்பை எல்லாம் ..
வேகமாய் பிடுங்கி ,
ஒருவன் கீழே கொட்ட ..
அருகினில் வந்து நின்ற ,
சொகுசு வண்டியில் ..
பூசிய வர்ணம் சிறிதும் கலையாது ,
பெண் மந்திரி இறங்க ..
பிடுங்கப்பட்ட பெருக்குமார் கொண்டு ,
புகைப்படம் எடுத்துவிட்டு ஜோராக புறப்பட ..
மீண்டும் பெருக்கி கொண்டிருந்தேன் ,
ஏதும் நடக்காதது போல் ..
* * *
உரைவிடமற்ற குழந்தை ஒன்று ,
கழிப்பிடமென உரிமை கொண்டு ..
வீதி ஓரம் ,
ஒதுங்கி இருக்க ..
முகம் கண்டு பாதியில் எழுந்து ஓட ,
முன் கண்ட கழிவுகளை விட ..
இது அசுத்தமல்ல என்று சிரித்துக் கொண்டே ,
பெருக்கி கொண்டிருந்தேன் ..
* * *
வீதியெல்லாம் சுத்தம் செய்தே ,
கூலி வாங்க மேஸ்திரியிடம் செல்ல ..
கூலி கொடுக்கும் சாக்கில் ,
கூப்பிடுகிறான் கைகளை தடவி ..
கைகளை சட்டென உதறியே ,
கழிவுடன் கழிவாக எண்ணி ..
அதையும் கடந்து ,
விரைந்தேன் வீட்டிற்கு ..
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வாங்கிய என்பதில் ,
ஒரு பத்து எடுத்து ..
இட்டிலி பொட்டலம் ஒன்று வாங்கி ,
பத்திரமாய் மடியில் கட்டி ..
பறந்தேன் வீட்டிற்கு ,
பசியுடன் ..
உணவிற்காக காத்திருக்கும் ,
என் மகனை நோக்கி ...!!
-- கற்குவேல் .பா
[ பின் குறிப்பு: தோழர் பொள்ளாச்சி அபி அவர்கள் அளித்த எண்ணத்தில் (எண்ணம் எண்: 14410)
அதில் கீழே வருமாறு குறிப்பிட்டு இருந்தார்...
(இது உங்களுக்கான பக்கம்..!
இந்தப் படத்திற்கு நீங்கள் விரும்பும் வகையில், வெறுமனே கருத்து என்றில்லாமல்,கவிதைகள் எழுதலாம்..! எழுதித்தான் பாருங்களேன்..! தலைப்பும் கருவும் உங்கள் விருப்பம்.! )
( இது தோழர் ஜின்னா அவர்களின் கவிதை எண் : 225184 என்ற கவிதையை படித்து ,
படத்தின் மேல் ஆவல் கொண்டு எழுதிய கவிதை , நண்பர்கள் தொடர வாழ்த்துக்கள் )
வாய்ப்பு அளித்த இரு தோழர்களுக்கும் நன்றி கூறிக்கொள்கிறேன் ..
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++