பூவையர் ஜொலித்திட வேண்டும்

பருவ மெய்திய பாவப் பிறவிகள்
==பார்க்க ஏங்கிடும் வாழ்வு
துருவம் போலவே தொடரும் நீட்சியில்
==தூர விலகிய கோரம்
உருவ அழகது உதிர்ந்து போகமுன்
==உறவின் கரந்தனில் சேர
கருதும் மனிதரின் கருணை வடிவினில்
==கடவுள் இருந்திட லாமே!

ஏழைக் குமரிகள் இளமை குருவிகள்
==இதயம் குமுறிடும் பாவம்
வாழை மரந்தனில் கூடு தேடிடும்
==வாழ்வு என்பது சாபம்
கோழை மனமது கூடிப் போனதில்
==கோடி கேட்டிடும் லாபம்
கூழைக் குடிப்பவர் கொடுக்க மறுத்திட
==குடத்தில் எரியுது தீபம் !

குடத்தில் எறிந்திடும் குமரி தீபமோ
==குடியில் எரிந்திடல் வேண்டும்
நடத்தும் நாடகம் நாலு சுவரினுள்
==நல்ல தாகிட வேண்டும்
முடத்தை நடத்திட முயலும் மனங்களின்
==முகவரி தெரிந்திட வேண்டும்
புடத்தை இட்டதும் பொழிவுறும் தங்கமாய்
==பூவையர் ஜொலித்திட வேண்டும்!

*மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (27-Dec-14, 1:40 am)
பார்வை : 138

மேலே