நீ - நீயாக இருப்பாயா
பயணத்தின் ருசி
இனிப்பென
உணர்ந்ததொரு
பால்யத்தில்
யாதும் ஊரென
பறந்தயெனது
சிறகுகள்
சிதைக்கப்பட்டு
பறப்பதே
மறந்து கிடந்ததொரு
தேய் பிறைப்
பின்னிரவில் -
உனது புணரமைப்பின்
நிவாரண
வலி துடைப்பினில்
மீண்டுமெனக்கு
சிறகுகள் முளைத்தன !
என்
முதல் நன்றிக்கான
வார்த்தைகள்
சீர்பட்ட யெனது
சிறகடிப்பில்
சொரிந்து அமுதூட்டும்
அன்பொழுகலில்
எனக்கான மயிலிறகே
என் சாமரமாகிப்
போன
சந்தோஷத்தில் -
பறத்தலின்
அடையாளம் தேடி
தட்டுத் தடுமாறி
உன்
தோளிலமர்ந்தேன் !
காயம்பட்ட
பெருநிலங்களில்
புதிய தளவாடாத் தேடல்
அதிகரித்திருக்கும்
போர்க்களங்களுக்கிடையில்
பறத்தலின்
தேடல் அறிந்தவள்
நீ !
கதவுகளேதுமற்ற
உனது கரிசனத்தின்
நீள் வெளிப்
பிராந்தியத்தில்
எனது
புறவெளி கடந்து -
உனது
அகவெளி புகுந்திருக்கிறேன் !
என்றாவது
மீண்டுமெனது
சிறகோய்ந்ததொரு
நேரம் -
உன் தெருவோரம்
வீழ்ந்தால்
அப்போதும்
இப்போதிருக்கும் - நீயாகவே
" நீ " - இருப்பாயா ?