புலம்பும் பூமி - காட்சிப் பிழை

நெஞ்சம் துடிக்கிறது
நெகிழ வைக்குமொரு
நிகழ்வு நினைவுகளாய்
நிம்மதி யில்லாமல்..!

பாச மழலைகளை
படத்தில் பார்த்தபடி
பதிவை எழுதுகிறேன்
பாரம் பகிர்ந்துவிட..!

தஞ்சம் இல்லாதொரு
பஞ்சப் பிணிகளிலே
படுத்து உறங்குமொரு
பச்சிளங் குழந்தைகள்..!

கட்டில் சுகமட்டும்
காசாய் பார்த்தவளோ
விசிறி யடித்தாளோ
விதிகள் தீர்ந்ததென..!

வலிக ளில்லாதொரு
வாழ்க்கை வாழ்வதற்கு
வாரிசை யேன்வதைத்தாய்
வழிமாறி திரிவதற்கு..!

தவிக்கு மொருமனதை
தாவி அணைத்துவிடும்
தாய்மை இனத்திற்கே
தலைவலி நீயன்றோ..!

நிமிடம் நினைத்துப்பார்
நிர்கதி யானதொரு
நிலையி லிருகுழந்தை
நிரந்தர இடமின்றி...!

ஈர்க்கும் இன்பமதை
எட்டிப் பிடித்தவளே
தொட்டில் சுமையதனை
சுடுகா டாக்கிவிட்டாய்..!

இறக்கி நீவிட்டாய்
இதயம் இல்லாமல்
பாவம் சுமப்பதெல்லாம்
பச்சிளம் குழந்தைகளா..?

ஆசை மோகமென
அலைந்த வுன்னழகோ
காலம் கடந்துவர
கழிவாய்ப் போகுமடி..!

காமம் தீர்க்குமொரு
கருவி நீயென்றால்
காதல் என்பதெல்லாம்
காட்சிப் பிழைதானோ..?

பெண்மை தெய்வமென
பேணிக் காக்குமொரு
பொறுமை பூமியுமே
புலம்பித் தீர்க்கின்றாள்
புத்திக் கெட்டவளை...!

ஆயிரம் தெய்வங்கள்
அன்னைக் கீடென்றால்
அனாதை ஆக்கியவளை
அடிப்பதில்(வரிகளால்) தவறில்லை..!




சிந்திப்போம் ...!

அவசர உலகத்தில்
ஆசை அழிவதில்லை
கவசம் ஏந்தியவனோ
காயம் அடைவதில்லை

புரிந்தால் புலம்பும் பூமி புன்னகைக்கும்..

எழுதியவர் : ஜாக் .ஜி .ஜெ (29-Dec-14, 4:44 pm)
பார்வை : 116

மேலே