8 தாய்க்குச் செய்த கொடுமை
தாயே உன்னைத் தவிக்க விட்ட பாவிநான்!
நோயே தாக்கி நொந்து பாதி உயிராகிப்
பாயே கதியாய்ப் படுத்துக் கிடந்த அப்போதும்
தீயே போலும் சொற்கள் வீசிச் சுட்டேனே!
என்ன கதிதான் எனக்குக் கிடைக்கும் அறியேனே!
அன்ன மற்று நீரு மற்றே அழிவேனோ!
சின்ன பின்ன மாகித் தெருவில் சிதைவேனோ!
சொன்ன வாயில் புற்று வைத்தே புதைவேனோ!
அருந்து அருந்து என்று பாலைத் தந்தாயே!
மருந்து கூட வாங்கித் தராமல் கொன்றேனே!
திருந்த மாட்டான் என்றே உறுதி கொண்டாயோ!
இருந்து பயனே இல்லை என்று சென்றாயோ!
தந்தை இறந்த பிறகு வந்தாய் என்வீடு!
பொந்து போன்ற அறைக்குள் அடைத்தேன் கையோடு!
நிந்தை செய்தே நித்தம் இட்டேன் பழஞ்சோறு!
கந்தை மாற்றக் கையை விரித்தேன் திமிரோடு!
வாசற் படிக்கே வராதே என்று விதித்தேனே!
வீசுங் காற்றும் கிடையா தென்று குதித்தேனே!
பேசக் கண்டால் பிள்ளை களையும் உதைத்தேனே!
ஓசைப் படாமல் உன்றன் உயிரைக் குடித்தேனே!
தாய்க்குச் செய்த கொடுமைக் களவே இல்லையே!
பேய்க்குக் கூட என்னைப் பிடிக்க வில்லையே!
நாய்க்கும் என்னை நக்க மகிழ்ச்சி இல்லையே!
தீக்கும் சுட்டால் அதற்குத் தானே தொல்லையே!
யார்தான் இட்டார் சாபம் அம்மா நம்மீது?
ஊரார்க் கென்ன கொடுமை செய்தோம் எப்போது?
யாரால் இந்த நிலைமை மாறும் இப்போது?
சீரும் சிறப்பும் வருமோ வாழ்வில் தப்பாது?
வலிவந் தாலும் உன்னைத் தானே நினைக்கின்றேன்!
கிலிவந் தாலும் உன்னைத் தானே நினைக்கின்றேன்!
பலியா காமல் என்றன் உயிரைக் காப்பாயே!
ஒலியாய் உள்ளக் குரலாய் என்றும் ஒலிப்பாயே!
செய்த பாவம் எல்லாம் தாயே மன்னிப்பாய்!
வைத வார்த்தை மனம்வைக் காமல் சிந்திப்பாய்!
பெய்த கண்ணீர் பாவம் கழுவ நிற்கின்றேன்!
கொய்த மலர்கள் கொட்டிப் பாதம் பணிகின்றேன்!
கண்ணைக் காட்டுன் கருணை மழையில் குளிக்கின்றேன்!
புண்ணை ஆற்றிப் புதிய பிறவி எடுக்கின்றேன்!
மண்ணில் பெரிய மனித னாகத் துடிக்கின்றேன்!
எண்ணம் மூச்சில் இயங்கு காலைப் பிடிக்கின்றேன்!