விழுந்தும் எழல் வேண்டும்

வலியெடுத்தும் அறமெடுத்தும்
பகைமுடித்த தமிழ இன்று
வகை யடுத்து நடப்பதென்ன கூறு
கிலி பிடித்து குளிரெடுக்க
கிடுகிடென்று உடல்நடுங்க
கீழ் கிடப்பதோ நினைந்து தேறு
புலிவிரட்ட முறமெடுத்த
பெண்மணிக் கென்றான கதை
புழுகிவைத்த பொய்தனுமோ அன்று
கலியெடுத்து தொகையுரைத்த
களையெடுத்து தோள்பெருக்க
கதைநிறுத்தி புதியவாழ்வு காணு

மலைசிறுத்தும் திடம்பெருக்கும்
மகிழ்வெடுத்துக் களம்புகுந்த
மகன் குடித்ததனமறுக்க வென்று
தலை யடித்து கதறி மார்பில்
தான்விழுப் புண் தாங்கினானோ ’
தவறிம் தன்முதுகில் இல்லையென்றே
நிலை யெடுத்த வீரஅன்னை
நெறியெடுத்த பாவையர்கள்
நிறுத்தியும் உயிர் பறித்த கண்டும்
குலை நடுங்கிக் கிடந்ததென்ன
குரல் கொடுத்தும் அவனியெங்கும்
கரங்கொடுக்கக் கதியுமற்றதென்ன

சிலையெடுத்த நிலை யிருப்பின்
சிறுமைதரும் வாழ்விலென்றும்
சீறிஎழும் தன்மை கொஞ்சம் வேண்டும்
அலை யெழுந்து வீழ்ந்த பின்னே
அடங்கியுள்ளே கிடந்ததில்லை
அதுவெழுந்து வளைந்து கரையேறும்
வலை விழுந்தபோதும் அஞ்சி
வாழ்விழந்த தென்று புறா
வாடவில்லை வேடனை ஏமாற்றும்
தலைசிறந்த கதைகளிலே
தர்மவழிகாட்டும் அதைத்
தனுமறிந்து ஒன்றெனக் கைகூடு

**********

எழுதியவர் : கிரிகாசன் (30-Dec-14, 4:48 pm)
சேர்த்தது : கிரிகாசன்
பார்வை : 54

மேலே