அதே வருடத்தில் தான் வாழ்கிறோம்

ஒரு வருடம் கழிகிறது.....!
மறு வருடம் பிறக்கிறது.....!
மலையென வாழ்த்துக்கள் குவிகிறது....!
மாறி வாழ்ந்தோமா நாம்?

தோய்ந்த முகத்துடன்
தொலைக்காட்சி
தொடர் கண்டு.....!
கணினிக்குள் புகுந்து......!
களிப்பு ஆட்டம் ஆடி
காலத்தை விரையம் செய்தோமே.....!

கையூட்டு அளித்து.....
காரியத்தை முடித்து.....!
களவாணிபயல்களுக்கு
காலமெல்லாம் துனைபோனோமே.....!

ராகுகாலம் பார்த்து
ராசி பலன் படித்து
ராப்பகலாய் உழைக்காமல்......!
ரம்மியமான நேரத்தை
ரம்மி ஆடி கழித்தோமே.....!

அலைபேசியில்
அரட்டை அடித்து.....!
அயல்நாட்டு அங்காடியில்
அசட்டு பிசட்டாய் பொருள் வாங்கி......!
அத்துமீறி திரிந்தோமே......!

பெற்ற தாய் தந்தையை
பேனிக்காத்திடாமால்......!
குத்தாட்டம் போடும்
கூத்தாடி கும்பலுக்கு.....!
பீர் அபிஷேகம்
பால் அபிஷேகம் செய்து.....!
பெற்றவர்களை
பாழ் செய்தோமே.....!

பச்சை காய் கனிகளுக்கு
பாடை கட்டி.....!
பதாதைகள் காட்டும்
பாழா போன உணவுக்கு
பல்லக்கு தூக்கினோமே.....!

போகியேன்று பெயர் சொல்லி
பொருட்களையேல்லாம்
பொறுப்பாய் எரித்து....!
புகை மண்டலமாக்கி.....!
இயற்கைக்கு
பகைசெய்கிறோமே....!

நாலாபுறமும் பெண்கள் சூழ
நான் தான் கடவுள் என்று.....!
ஆசிரமம் கட்டி
கடை போடும்
காவி வியாபாரிகளை.....!
சொகுசு அரியணையில் அமர்த்தி
சோடசோபசாரம் செய்து
சொந்த செலவில்
சூன்யம் வைத்தோமே.....!

கோள்கள் நகருகிறது
விண்வெளியில்.....!
வருடங்கள் கழிகிறது
நாட்காட்டியில்......!
வாழ்ந்த அதே
வருடத்தில்
தான் வாழ்கிறோம்.....!
ஆனாலும்
வாழ்த்துகிறேன்
புத்தாண்டு வாழ்த்துக்கள்.....!

எழுதியவர் : பெ.கோகுலபாலன் (30-Dec-14, 10:48 pm)
பார்வை : 86

மேலே