பூக்கள் கணித்த வாழ்க்கை
எருக்கம்பூக்கள் நசுக்கி
தேர்வு முடிவுகள் யூகிக்கையில்
எதிர்மறையாய் சில
பூக்கள் மௌனிக்கும்... நானும்
அவைகளோடு
முறைத்திருக்கையில்....
அதிகாலை பனம்பழமெடுப்பது
யாரென பந்தயம்கட்டி
வந்திருப்பான் கூட்டாளியும்...
முந்துபவனுக்கு
இரண்டு கொடுக்காப்புளிகளென
ஒப்பந்த முடிவில்
பட்டப் பெயரழைத்து ஓடுவேன்....
துரத்தும் அவனுக்கும்
பிடிகொடா எனக்கும்....
பரவசம் மட்டுமே நிலைத்திருக்கும்...
சுட்ட பனம்பழம்
மென்றிருந்த முற்பகலொன்றில்
தபாலில் வந்திருந்த
தேர்ச்சி பெற்றுள்ளாய்
அறிவிப்பில்... பூக்கணிப்புகள்
பொய்யாகி விட்டிருக்கும்...
அப்பொழுதைய கோடைமழையில்
மொத்தமாய் நனைந்து
அடுத்த பரவசம்.....
இப்படியாய் கதை சொல்லிக்
கொண்டிருக்க....
எப்படியாவது தப்பிக்கவேண்டுமென
கணினித் துப்பாக்கிமுனையில்
வளைந்து நெளிந்திருந்தான்
அண்ணன் மகன்....
புரிந்தது எனக்கு....
இப்போதைய பரவசம் என்பது
நிம்மதி தொலைப்பது.....