+மின்சாரம் கண்ணாமூச்சி ஆடியவேளை+

சில மணித்துளிகளுக்கு முன் மின்சாரம் சென்றது
அது சென்ற வேளை மாலை வேளை..
சிறிது நேரத்திலேயே
கைப்பேசிகள் ஒவ்வொன்றாக
உயிரிழந்து போயின...

வானம் வாடத்துவங்கியது...
இருளும் ஆடத்துவங்கியது...

மெழுகுவர்த்திகள் ஒவ்வொன்றாக
உயிர்பெறத் துவங்கியது...

மின்சாரம் இல்லாத இரவு..
ஒரு வெறுமையை கொடுக்கத் துவங்கியது...

மின்சார விளக்குகள் எதுவுமில்லை..
கைப்பேசி ஒலிகளும் கேட்கவில்லை...
தொலைக்காட்சி களேபரங்களும் ஆக்கிரமிக்கவில்லை....

ஓரமாய் அமர்ந்து
வீட்டையே அன்னியமாய்
பார்த்துக்கொண்டிருந்த தாத்தா..
மெல்ல மெல்ல எதையோ பேசத்துவங்கினார்...

அவரது வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகளை
நகைச்சுவையோடு அவர் கூற கூற‌
வீடே அவருடன் இணைந்து கொண்டது...

இடை இடையே
சண்டைக்கார பாட்டியும் அழகாய் ஒரு தெம்மாங்கு பாட‌
தாத்தா பாட்டியின் சண்டை அன்றே முடிவுக்கு வந்தது...

தேளைப்போல கொட்டிக்கொள்ளும்
மாமியாரும் மருமகளும்
ஒருவரை ஒருவர் அன்பாய் கலாய்க்கத் துவங்கினர்...

இதுவரை இத்தகைய நிகழ்வுகளை பார்க்காத பேரன்கள்...
கைப்பேசி, தொலைக்காட்சி, கணினி
வீடியோ விளையாட்டுக்கள், வீட்டுப்பாடம், அவசர வகுப்புகள் என‌
எப்போதும் ஒதுங்கியே இருக்கும் குழந்தைகள்..
வாழ்க்கைப்பாடத்தை படித்துக் கொண்டிருந்தனர்...

கோபக்கார மாமாவோ
சிரித்து சிரித்து ஒவ்வொரு நிகழ்வையும்
ரசித்துக் கொண்டிருந்தார்...

எங்கோ யாரோ பேசிக் கொண்டிருந்தனர்...
நாளை இரவு தான் மின்சாரம் வருமாம்..

அதனை அனைவருமே கேட்டனர்..
ஆனால்
நாளை கூட மின்சாரம் வராவிட்டால் பரவாயில்லை என‌
ஒவ்வொரு மனமும் உள்ளுக்குள் எண்ணிக்கொண்டிருந்தது..

மின்சாரம் இல்லா இந்த நேரத்தை
மின்சாரம் இவர்கள் வாழ்வில் ஆடும் ஆட்டத்தை
வானில் நிலாவாயிருக்கும் எடிசன்
மௌனமாய் ரசித்துக்கொண்டிருந்தார்...

வாழ்க்கைப்பாடம் முடிந்த வேளை
வீட்டிலிருந்த கடைசி மெழுகுவர்த்தியும்
நிம்மதியாய் கண்மூடியது....

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (4-Jan-15, 8:50 am)
பார்வை : 1624

மேலே