சாதி ஒழி மதம் அழி சாதி - பொங்கல் கவிதைப் போட்டி 2015

கால நதியின் கரையில் ஒருநாள்
கடவுள் நின்றிருந்தான்
கோல வெறியில் "பூமி" என்றொரு
கவிதை எழுதி வைத்தான்

காடு,மலை வண்ணப் பூக்கள் என்றுபல
அழகிய உருவகங்கள்
பறவைகள் மான்கள் பலகோடி உயிர்களின்
சிலிர்ப்புகள் தூவி விட்டான்

முற்றுப் பெறாத கவிதையை முடிக்க
முத்தாய்ப்பு கிடைக்கவில்லை
மூளையைக் கசக்கிப் பிழிந்து முடிவினில்
மனிதனை எழுதிவைத்தான் .

அழகிய கவிதை கர்வம் கொண்டது
அதுதான் ஆரம்பம்..
முத்தாய்ப்பு வரியே மொத்தக் கவிதையை
மேயத் தொடங்கியது

இனம் இனமாக நிறம் நிறமாக
மனிதன் தனை வளர்த்தான்
இறைவனையே அவன் சாதி / மதச் சான்றிதழ்
கொடுத்து பிரித்துவிட்டான்

கால நதியின் கரையில் இன்றொரு
யாகம் நடக்கட்டும்
கறுத்த மனங்களில் செழித்த பேய்களின்
சாபம் எரிக்கட்டும்..!

எழுதியவர் : கவித்தாசபாபதி (5-Jan-15, 6:06 pm)
பார்வை : 187

மேலே