நாளைய தமிழும் தமிழரும் - பொங்கல் கவிதைப் போட்டி -2015

தமிழுக்கென்ன? சிறந்திருப்பாள்
தமிழர்நாவில் தவழ்ந்திருப்பாள்
விண்ணும்மண்ணும் உள்ளவரை
வியக்கும்வண்ணம் வாழ்ந்திருப்பாள் !

ஐம்புலனில் கலந்திருப்பாள்
ஐம்பாவில் மகிழ்ந்திருப்பாள்
செம்மொழியாள் உயர்ந்திருப்பாள்
செருக்குடனே வலம்வருவாள் !

இலக்கியத்தால் புவியீர்ப்பாள்
இன்சுவையால் மனம்வெல்வாள்
பிறமொழிகள் புறந்தள்ளி
பிரகாசமாய் ஒளிர்ந்திடுவாள் !

மாற்றம்வந்து மானுடரின்
மாயத்திரை விலக்கிவிடும்
தமிழ்ப்பாவே பாவாகும்
தமிழ்மொழியே பாராளும் !

உலகத்தமிழர் ஒன்றிணைவர்
உரிமையாவும் மீட்டெடுப்பர்
உயர்பதவி வகித்திருப்பர்
உலகோர்தரத்தில் முன்னிருப்பர் !

பாரம்பரியம் போற்றிடுவர்
பாரினில்நற் பேரெடுப்பர்
கலாச்சாரம் காத்திடுவர்
கன்னித்தமிழால் களிப்புறுவர் ....!!



( இப்படைப்பு நான் சொந்தமாய் எழுதியது என உறுதி அளிக்கிறேன் . )

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (7-Jan-15, 11:31 pm)
பார்வை : 198

மேலே