தமிழா தமிழா நாளைய நிலையென்ன
நாதியற்ற சாதியடா
நாம் தமிழனென்பது பாதியடா!
கூடி கூடி குலாவி மகிழ்ந்தே பின்
குழிபறிக்கும் புத்தியடா...!
வீதியெங்கும் இரக்கம் காட்டி
வீடிழந்து நிற்குமடா...!
பிற தேசத்தவர்க்கு பரிவு காட்டி
பின் புண்ணாகும் பின்புத்தி தமிழனடா!!
தானும் வாழாமல் தமிழை
தழைத்தோங்க செய்யாமல்
தமிழனுக்கு எதிராகி
தலை தொங்கி நிற்போமடா !!
பிறர்க்கென்றால் முன் நிற்கும்
தமக்கென்றால் பின் செல்லும்
தனக்கென்ற தனி சிந்தையற்ற
குறை சாதி கூட்டமடா ...!!
பிறர் துதி பாடி பாடி
பின்னாலே சென்று சென்று
பல்லாக்கு தூக்கி தூக்கி
கூனுலுந்த கிழவனடா !!
பிறருக்கு இழப்பென்றால்
தன் வீட்டையும் விற்று கொடுக்குமடா
தமிழனுக்கொன்றென்றால்
தனிமையில் புலம்புமடா !!
அரிசுவடி தந்த தமிழினத்தில்
செல்லரித்த வீரமகன்
செல்வத்தை பிறர்க்கு தந்தே
செல்லா காசாய் வாழுமடா !!
பிழைப்புக்கு வந்தவனை
தோள்கொடுத்து தூக்கிவிட்டு
தலைவனென தூக்கி வைத்து கொண்டாடி
தறுதலையான இனமடா !
வந்தோர்க்கு வாழ்வளித்து
வறுமையில் வாடுமடா
முந்திசெய்த வினையோ !
திரைகடலோடி வாழ்வற்று திரும்புமடா !