புறாக்கள் கட்டிய மாளிகை - டாக்டர் நாகூர் ரூமி

அனைத்துப் புகழும் அந்த அல்லாஹ் ஒருவனுக்கே.

சமநிலைச்சமுதாயம் இதழில் நான் எழுதும் இஸ்லாமிய வரலாற்றுத் தொடரின் முதல் பகுதி:

Samanilai Cover-1சில ஆண்டுகளுக்கு முன் நான் இந்தோனேஷியா போயிருந்தேன். அதன் தலைநகர் ஜகார்த்தாவில் என் தங்கை இருக்கிறார். அவரைப் பார்க்கப் போயிருந்தேன். ஜகார்த்தாவில் உள்ள ஒரு பிரபலமான மிருகக்காட்சிச் சாலைக்குச் சென்றுவிட்டு நாங்கள் திரும்பிக்கொண்டிருந்தபோது அந்தக் காட்சியைப் பார்த்தேன்.

கூட்டம் கூட்டமாக ஆண்களும், தலையிலிருந்து தோள்வரை மூடிய துணியுடன், முகம் மட்டும் தெரியுமாறு புர்கா அணிந்த பெண்களும் சாலையைக் கடந்து போய்க்கொண்டிருந்தனர். ஏதோ திருமண நிகழ்ச்சிக்குப் போகிறார்கள் என்று நினைத்தேன். ஏனெனில் ஒரு ஐநூறு பேராவது அங்கே இருந்திருப்பார்கள்.

ஆனால் நான் நினைத்தது தவறு. அவர்கள் திருமணம் போன்ற எந்த நிகழ்ச்சிக்கும் போகவில்லை. இஷா தொழுகைக்காக சென்றுகொண்டிருந்தார்கள்! ஆஹா, என்ன அற்புதமான காட்சி! இந்தியாவில் இப்படிப் பார்க்கமுடியுமா என்று ஒருகணம் வியந்தேன். இந்த உலகில் மிக அதிகமான எண்ணிக்கையில் முஸ்லிம்கள் வாழும் நாடு இந்தோனேஷியாதான். தெரியும். ஆனால் முஸ்லிமாக இருப்பது வேறு, முஃமினாக இருப்பது வேறு! எண்ணிக்கையில் மட்டுமல்லாது, மார்க்க ரீதியான நம்பிக்கையிலும் நம்மை அவர்கள் மிகைத்திருந்தனர்.
“இன்னும் நூறு வருடங்களில் இங்கிலாந்தை, ஏன் ஐரோப்பாவையே, ஆளுகின்ற வாய்ப்பு ஒரு மதத்துக்கு இருக்குமானால், அது இஸ்லாம்தான்” என்று ஜார்ஜ் பெர்னாட்ஷா சொன்னார்.(‘The Genuine Islam,’ வால்யூம் 1, எண் 8, 1936.)

PKM-1அது அன்று. இந்த உலகத்தில் இன்று வாழும் மொத்த மக்கள் தொகையில் இருபத்து மூன்று விழுக்காடு முஸ்லிம்கள் என்று பிபிசி கூறியது. இந்தியாவில் மட்டும் கிட்டத்தட்ட 18 கோடிக்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் வாழ்கிறார்கள். இந்தியா, பாகிஸ்தான், காஷ்மீர், இந்தோனேஷியா, மலேஷியா, சிங்கப்பூர், இலங்கை, ஈரான், ஈராக், ஸ்பெயின், சிரியா, எகிப்து, ரஷ்யா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா, அமெரிக்கா என உலகில் உள்ள அனைத்து நாடுகளிலும் கணிசமான அளவு முஸ்லிம்கள் இருக்கிறார்கள்.

உலகில், ஒரு நாளைக்கு 68000 பேர் இஸ்லாத்தில் இணைவதாக ஒரு தகவல் கூறுகிறது!

அமெரிக்காவில் மட்டும் 1200க்கும் மேற்பட்ட மஸ்ஜித்கள் உள்ளன! ”அமெரிக்காவில் அதிவேகமாக வளரும் மார்க்கமாகவும் (fastest growing religion), மக்களுக்கு ஒரு வழிகாட்டியாகவும், தூணாகவும் இஸ்லாம் உள்ளது” என்று அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பில்கிளிண்டனின் மனைவி ஹிலாரி க்ளிண்டன் கூறினார் (லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ் பத்திரிக்கை, மே 31, 1996).

“இந்த உலகம் இஸ்லாத்திடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய உள்ளது. இன்றைக்கு உலகில் உள்ள மக்களில் நான்கில் ஒருவர் முஸ்லிமாக இருக்கிறார்” என்று அமெரிக்க ஜனாதிபதி கிளிண்டன் கூறினார் (வெள்ளை மாளிகை, ஈதுல்ஃபித்ர் ப்ரெசெண்டேஷன், ஜனவரி 10, 2000).

உலகில் உள்ள ஆறு முக்கியமான மார்க்கங்களில் இஸ்லாம்தான் அதிவேகமாகப் பரவுவதில் முதலிடத்தில் இருப்பதாக அமெரிக்காவில் உள்ள சர்வதேச அமைதிக்கான கார்னகி அறக்கட்டளை (Carnegie Endowment for International Peace) என்ற அமைப்பு கூறுகிறது.

PKM-1.1அமெரிக்காவின் இப்போதைய ஜனாதிபதி ஒபாமா ஒரு முஸ்லிம் தந்தைக்கும் ஒரு கிறிஸ்தவ தாய்க்கும் பிறந்தவர். அவரது பெயர் சுத்தமான முஸ்லிம் பெயர். பாரக் ஹுசைன் ஒபாமா. ஆனால் ’ஹுசைனை’ மறைத்துவிட்டு ‘பராக்’ ஒபாமா என்று தப்பும் தவறுமாக வேண்டுமென்றே அல்லது இயல்பான (தவறான) அமெரிக்க உச்சரிப்பில் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்!
ஒபாமாவின் அப்பாவும் அம்மாவும் திருமணமான சில ஆண்டுகளிலேயே பிரிந்துவிட்டாலும், இஸ்லாத்தோடு அவர்களுக்கு இருந்த தொடர்பு தொடர்ந்துகொண்டுதான் இருந்தது. ஒபாமாவின் அம்மா டன்ஹாம் இரண்டாவதாகத் திருமணம் செய்துகொண்ட லோலோ என்பவரும் ஒரு முஸ்லிம்தான்!

அம்மாவோடே இருந்ததனால் ஒபாமா கிறிஸ்தவராகத்தான் வளர்க்கப்பட்டார். அப்பாவோடு வாழ்ந்த காலம் கொஞ்சம்தான் என்றாலும் அப்பா மீதான பாசம் அவருக்குப் போகவே இல்லை. அப்பாவைப் பற்றி Dreams from My Father என்று ஒரு நூலே எழுதியிருக்கிறார்! இக் காரணங்களினால் ஒபாமா ஒரு முஸ்லிம் என்று நான் சொல்லவரவில்லை. ஆனால் “இனி இந்த தேசம் ஒரு கிறிஸ்தவ தேசமல்ல” என்று ஒபாமா சொன்னதன் பின்னால் அவரது சுயசரிதையும் ரத்த சரித்திரமும் மறைந்துள்ளது.

உலகின் மிகப்புகழ்பெற்ற மனிதர்கள் பலர் இஸ்லாத்தில் இணைந்தனர் என்பதும் வரலாறு. அமெரிக்க குத்துச்சண்டை வீரர்களான காசியஸ் க்ளே (முஹம்மது அலீ) மற்றும் மைக் டைசன், பிரிட்டிஷ் எழுத்தாளரும் அறிஞருமான மார்ட்டின் லிங்ஸ், அமெரிக்க கருப்பின மனித உரிமைப் போராளி மால்கம் எக்ஸ் (மாலிக் அல் ஷாபாஸ்), பிரிட்டிஷ் பாடகர் காட் ஸ்டீவன்ஸ் (யூசுஃப் இஸ்லாம்), மர்மட்யூக் வில்லியம் பிக்தால் (உலகப்புகழ் பெற்ற திருமறையின் ஆங்கில மொழிபெயர்ப்பைக் கொடுத்த முஹம்மது மர்மட்யூக் பிக்தால்) என்று வரிசை நீண்டுகொண்டே போகிறது.

1930 இல் பிக்தால் வெளியிட்ட திருமறையின் The Meaning of the Glorious Quran என்னும் ஆங்கில மொழி பெயர்ப்பு உலகின் தலைசிறந்த மொழி பெயர்ப்புகளில் ஒன்றாக இன்றளவும் விளங்குகிறது. திருமறையின் மனம் மயக்கும் ஒலிகளை the inimitable symphony என்று அவர் வர்ணித்தார். ஏன், சமீபத்தில் இஸ்லாத்தில் இணைந்த தமிழ்நாட்டின் உளவியல் பேராசிரியர், பேச்சாளர் மறைந்த பெரியார்தாசன் (அப்துல்லாஹ்) இரண்டாண்டுகள் இஸ்லாத்தையும் குர்’ஆனையும் ஆராய்ந்த பிறகே இஸ்லாத்தில் இணைந்ததாகச் சொன்னார். இசையமைப்பாளர் யுவன்கூட “இஸ்லாம் என்னைத் தேர்ந்தெடுத்துக் கொண்டது” என்றுதான் கூறினார்.

இதையெல்லாம் நான் இங்கே குறிப்பிடுவதற்கு ஒரு காரணமுள்ளது. பயங்கரவாதமும் வன்முறையும் காலம் காலமாக, கர்ண பரம்பரையாக உலகெங்கிலும் நடந்துவருவதுதான். தனி மனித வன்முறை, குழு வன்முறை, ஜாதி வன்முறை, மத ரீதியான வன்முறை, அரசாங்க ரீதியான வன்முறை, கலாச்சார ரீதியான வன்முறை, சிலுவைப் போர்கள், முதல் உலகப்போர், இரண்டாம் உலகப்போர், ஹிட்லரின் கான்சண்ட்ரேஷன் முகாம்கள், முசோலினி, ரஷ்ய ஜார் மன்னர்கள், இலங்கையில் நடந்த, நடந்துகொண்டிருக்கும் இன அழிப்பு – இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.

ஆனால் நம் நாட்டிலோ, எங்கு வன்முறை நடந்தாலும் அதன் பின்னால் முஸ்லிம்கள் இருப்பார்கள் என்ற ஒரு தவறான பார்வை இருக்கிறது. ’மை நேம் ஈஸ் கான்’ என்ற திரைப்படத்துக்காக நடிகர் ஷாருக் கான் அமெரிக்கா சென்றார். முஸ்லிம் பெயராக இருந்ததனால் அவரை அமெரிக்க கஸ்டம்ஸில் பலவாறான கேள்விகளுக்கும் இன்னல்களுக்கும் ஆளாக்கிய பிறகே உள்ளே செல்ல அனுமதித்தனர் என்று நடிகர் ஷாருக்கான் ஒரு பேட்டியில் கூறியிருந்தார். இரட்டைக் கோபுரத்தை நாசம் செய்தது ஒரு முட்டாள் முஸ்லிம் குழு செய்த தீவிரவாதம் என்றால், சதாம் ஹுசைனை தூக்கிலிட்டது, ஈரானில் குண்டு மழை பெய்தது, பதுங்கு குழிகளில்கூட குண்டு வீசியது, இஸ்ரேலின் பாலஸ்தீன அட்டூழியங்கள் — இவையெல்லாம் என்ன? வல்லரசு என்ற கொழுப்பில், அல்லது வல்லரசின் ஆதரவு இருக்கிறது என்ற திமிரில் செய்யப்பட்ட வன்முறைகள் அவை. எந்தப் பெயரில் செய்யப்பட்டாலும் தீவிரவாதம், பயங்கரவாதம், வன்முறை ஆகியவற்றை நாம் நியாயப்படுத்த முடியாது.
இஸ்லாம் மட்டுமல்ல, எந்த மதமுமே வன்முறையையோ தீவிரவாதத்தையோ, கொலை செய்வதையோ ஆதரிக்கவில்லை. அன்பே சிவம் என்றார் திருமூலர். அன்புதான் கடவுள் என்கிறது புனித பைபிள்.

இஸ்லாம் தீவிரவாதத்தைத் தூண்டுகிறதா, ஆதரிக்கிறதா, அனுமதிக்கிறதா என்ற கேள்விகளுக்கு ஒரு அழுத்தமான ‘இல்லை’ என்பதையே பதிலாக இஸ்லாமிய வரலாறு காட்டுகிறது. அது மட்டுமல்ல. அஹிம்சை, அமைதி, சமாதானம் இவற்றை மட்டுமே இஸ்லாம் ஆதரிக்கிறது, சிபாரிசு செய்கிறது என்பதையும் நாம் புரிந்துகொள்ள முடியும்.

தீவிரவாதமும் வன்முறையும், எல்லா நாட்டிலும் எல்லா சமூகத்தினராலும் அவரவர்க்குரிய காரணங்களுக்காகச் செய்யப்படுகின்றன. அப்பாவி மக்களைக் கொல்வதை நியாயம் என்று மனசாட்சி உள்ள எந்த மனிதனும் சொல்ல மாட்டான். வெறுப்புக்கு ஜாதி, மதம் எல்லாம் கிடையாது. ஆனால், தீவிரவாதம் என்பது முஸ்லிம்கள் மட்டுமே செய்கின்ற ஒரு காரியம் என்பதைப் போன்ற ஒரு தோற்றத்தை, ’தீவிரவாதம்’ என்ற சொல்லை முஸ்லிம்களோடு இணைக்கும் போக்கை வேண்டுமென்றே பத்திரிக்கைகளும் ஊடகங்களும் ஏற்படுத்தி வருவதை நாம் காண முடிவது துரதிருஷ்டமே.

அப்படியானால் இஸ்லாமிய வரலாற்றில் போர்களே நடக்கவில்லையா என்றால் நடந்தன. ஆனால் அவையாவும் தற்காப்பு நடவடிக்கைகள். ஏனெனில் திருமறை மிகத்தெளிவாகக் கூறுகிறது:

அல்லாஹ்வுடைய பாதையில் (நீங்கள் செல்வதைத்தடுத்து) உங்களை எதிர்த்தோருடன் நீங்களும் யுத்தம் செய்யுங்கள். ஆனால் நீங்கள் வரம்பு கடந்துவிட வேண்டாம். ஏனென்றால் நிச்சயமாக அல்லாஹ் வரம்பு மீறியவர்களை நேசிப்பதில்லை (சூரா பகரா 02 : 190)

ஆனால் இறுதித்தூதர் (ஸல்) அவர்களின் வாழ்வில் நாம் காண்பதெல்லாம் அன்பும் மன்னிப்பும், கருணையும்தான். கல்லால் அடித்து விரட்டிய தாயிப் நகர மக்களுக்காக அவர்கள் இறைவனிடம் பிரார்த்தனை புரிந்தார்கள்.

கல்லால் எறிந்தொருகால் காயமுறக் கண்டகொடு
பொல்லாப் புலையருக்கும் புத்திவரக் கையேந்தி
அல்லாத் திருச்சமுகம் ஆன’துஆ’க் கேட்டுவந்த
நல்லாருமைப்போலும் நானிலத்திலுண்டேயோ?
நாதர் நபி நாயகமே நானிலத்திலுண்டேயோ?

என்று சதாவதானி செய்குத்தம்பிப் பாவலர் ஒரு பாடலில் கேட்கிறார்!

பெருமானார் (ஸல்) இந்த உலகத்தில் 63 ஆண்டுகள் வாழ்ந்திருந்தார்கள். அதில் 23 ஆண்டுகள்தான் இஸ்லாமியப் பிரச்சாரம், ஆட்சி நிறுவனம், இஸ்லாத்தை உலகெங்கும் பின்பற்றும் ஒரு மார்க்கமாக ஆக்குவதற்கான முயற்சிகள் என நடந்துள்ளன. இந்த 23 ஆண்டுகளில் பெருமானார் மக்காவில் வாழ்ந்தது 13 ஆண்டுகள். மதினாவில் 10 ஆண்டுகள். இந்த 23 ஆண்டுகளில்தான் திருமறையும் கொஞ்சம் கொஞ்சமாக தேவைக்கேற்றவாறு இறைவனால் இறக்கி அருளப்பட்டது. இந்த காலகட்டத்தை வசதிக்காக போர்க்காலம், அமைதிக்காலம் என்று பிரிப்போமெனில், 20 ஆண்டுகள் அமைதிக்காலமாகவும் மூன்று ஆண்டுகளே போர்க்காலமாகவும் இருந்துள்ளது!

இஸ்லாமிய வரலாற்றில் கிட்டத்தட்ட 80 யுத்தங்கள் நடந்ததாக வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றனர். இதன்படிப் பார்த்தால், பெருமானார் சராசரியாக ஒரு ஆண்டுக்கு நான்கு யுத்தங்கள் நடத்தியதாக கணக்கு வருகிறது! இதுவும் உண்மைக்குப் புறம்பான ஒன்றே. காரணம், இருபத்து மூன்று ஆண்டுகால தூதுத்துவ வாழ்க்கையில் பெருமானார் தவிர்க்க முடியாமல் முழு வீச்சுடன் போரில் பங்கேற்றது மூன்றே மூன்று முறைகள்தான்!

பத்ரு, உஹது, ஹுனைன் என்ற மூன்று பெரும் யுத்தங்கள்தான் தற்காப்பின் பொருட்டு தவிர்க்க இயலாதபடி நிகழ்ந்தன. முஸ்லிம்களை வேண்டுமென்றே எதிர்த்தவர்கள்தான் இந்த போர்களுக்கும் காரணமாக இருந்துள்ளார்கள்.

ஆச்சரியம் என்னவெனில், இந்த மூன்று போர்களிலும் மற்றும் எல்லாப் ‘போர்’களிலுமாக சேர்த்து ஒட்டு மொத்தமாக பெருமானார் நேரில் கலந்துகொண்ட போர்களின் கால அளவு அரை நாள்தான்! அதாவது தனது ஒட்டு மொத்த வாழ்நாளிலேயும் இறைத்தூதர் அவர்கள் அரை நாளுக்குமேல் யுத்தம் நிகழ்த்தவில்லை! தனது 23 வருட தூதுத்துவ வாழ்க்கை முழுவதும் பெருமானார் அமைதி வழியையும் சமாதானத்தையும்தான் செயல் படுத்தியிருக்கிறார்கள். தவிர்க்கமுடியாமல் ஒரு அரை நாளைத்தவிர!

“இந்த உலகின் அனைத்து நாடுகளில் இருந்தும் கல்வியாளர்களையும் அறிஞர்களையும் ஒன்று திரட்டி குரானின் கொள்கைகளின் அடிப்படையில் ஏற்றத் தாழ்வுகளில்லாத ஒரு ஆட்சியை நிறுவ வேண்டும். அப்படிப்பட்ட ஆட்சிதான் உண்மையானதாகவும் மனிதர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுப்பதாகவும் அமையும். அந்த நாள் வெகு தொலைவில் இல்லை என்றே நான் நம்புகிறேன்.” இப்படிச் சொன்னவர் யாராக இருக்கும் என்று நினைக்கிறீர்கள்? மாவீரன் நெப்போலியன் போனபார்ட்டேதான்! (Christian Cherfils, ‘Bonaparte et Islam,’ பதிப்பு பெடோன், பாரிஸ், ஃப்ரான்ஸ். 1914, பக். 105, 125).

“முஹம்மதைப்போல ஒரு மனிதர் இந்த நவீன உலகின் சர்வாதிகாரியானால் அதன் எல்லா பிரச்சனைகளையும் அவர் தீர்க்க முடியும் என்றும் அதன் மூலம் இந்த உலகின் அவசியத் தேவையான அமைதியையும் மகிழ்ச்சியையும் கொண்டு வரமுடியுமென்று நான் நம்புகிறேன்.” இப்படிச் சொன்னவர் ஜார்ஜ் பெர்னார்ட்ஷா.(‘The Genuine Islam,’ வால்யூம் 1, எண் 8, 1936.)

“அரபிய நாட்டில் தோன்றி ஆண்டவன் ஒருவன் என்னும்
மரபினை வாழச்செய்த முஹம்மது நபியே போற்றி!
தரையினில் பொதுமை மல்கிச் சகோதர நேயம் ஓங்கக்
கரவிலா மறையைத் தந்த கருணையே போற்றி! போற்றி!” என்று பாடுகிறார் தமிழ்த் தென்றல் திரு.வி.க!

“முஹம்மது நபியவர்கள் மஹா சுந்தர புருஷர், மஹா சூரர், மஹா ஞானி, மஹா பண்டிதர், மஹா பக்தர், மஹா லெளகீக தந்திரி, வியாபாரமானாலும் யுத்தமானாலும் நபி கவனித்தால், அந்த விஷயத்தில் வெற்றி உறுதி. ஆதலால் அவர் அபிமானிக்கப்பட்டார்” என்கிறார் நம் மகாகவி பாரதி!

கீழ்வரும் திருமறையின் வசனத்தைக் கொஞ்சம் சிந்தியுங்கள் :

எவனொருவன் மற்றோர் ஆத்மாவை…(அநியாயமாகக்) கொலை செய்கின்றானோ அவன், மனிதர்கள் யாவரையுமே கொலை செய்தவன் போலாவான். அன்றி, எவன் ஓர் ஆத்மாவை வாழவைக்கிறானோ அவன், மனிதர்கள் யாவரையுமே வாழவைத்தவன் போலாவான்(சூரா அல்மாயிதா, 05 : 38)

இப்படிச் சொல்லும் திருமறை வழியில் அமைந்த இஸ்லாத்தின் வரலாற்றை நாம் உன்னிப்பாக கவனிக்க வேண்டியுள்ளது. அப்படி கவனிப்பவர்களுக்கு ஒரு உண்மை புரியும். இஸ்லாம் வாளால் பரப்பப்பட்ட மார்க்கமல்ல. அறிவைக்கொண்டு சிந்தித்துப் பார்த்தால் ஒரு உண்மை புரியும். அது இதுதான்: வாளால் எதையுமே பரப்ப முடியாது. ஆம். வாளால் வெட்டத்தான் முடியும். ஆனால் இஸ்லாம் என்ற மாளிகை அமைதிப் புறாக்களால் கட்டப்பட்ட மாளிகையாகும். இதுதான் வரலாறு காட்டும் உண்மை. இல்லையெனில் இவ்வளவு பிரச்சனைகளையும் மீறி அதி வேகமாகப் பரவிக்கொண்டிருக்கும் மார்க்கமாக எப்படி இஸ்லாம் இருக்க முடியும்? எனவே, இஸ்லாம் உலகளாவ விரிந்து பரவுவதற்கும், அதன் உண்மையான, நேர்மையான, கூட்டிக்குறைக்காமல் சொல்லப்பட்ட வரலாற்றுக்கும் நெருங்கிய தொடர்புள்ளது. இதை விளக்குவதற்காகத்தான் இந்தத் தொடர்.

இன்ஷா அல்லாஹ் (இறைவன் நாடினால்) சந்திப்போம்.

எழுதியவர் : நாகூர் ரூமி (8-Jan-15, 12:37 pm)
பார்வை : 405

சிறந்த கட்டுரைகள்

மேலே