வள்ளுவனின் புகழ் வான்முட்ட எழும்

வணக்கம் தோழமைகளே...!

பொங்கல் கவிதைபோட்டி திருவிழா கோலாகலமாக நடந்துகொண்டு இருக்கிறது. நீங்கள் அனைவரும் போட்டியில் கலந்துகொண்டு படைப்புகளை சமர்பித்துகொண்டு இருக்கிறீர்கள். நீங்கள் பரிசை வெல்ல எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

ம்ம் ... நான் சொல்ல வந்த விடயம் வேற...! காலைலவே தினத்தந்தி பத்திரிக்கையை வாங்கி படிச்சேன், அதுல இலங்கை தேர்தலைதவிர பெருசா ஒன்னும் இல்லை. நாளேட்டை புரட்டிக்கொண்டே இருக்கும்போது குறிப்பாக ஒரு விடயம் கண்ணில்பட்டது. அந்த விடயத்தின்மீது கண் நிலைத்து நின்றது. ஆம்... அது நம்ம திருக்குறளையும், திருவள்ளுவரையும் பற்றிய செய்தி.

தருண் விஜய் எம்.பி எழுதிய ''திருவள்ளுவர்'' என்ற புத்தகத்தை மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி டெல்லியில் வெளியிட்டபோது எடுக்கப்பட்ட படம் போடப்பட்டு இருந்தது.

அந்த படத்திற்கும் கீழே ''நாடு முழுவதும் உள்ள மத்திய அரசு பள்ளிகளில் திருவள்ளுவர் பற்றிய கட்டுரைப்போட்டி ஆன்லைன் மூலம் அடுத்த வாரம் நடக்கிறது'' என்று தலைப்பிடப்பட்டு எழுதப்பட்டு இருந்த செய்தியை முழுவதுமாக வாசித்தேன்.

அதன் செய்தி பின்வருமாறு......

புதுடெல்லி, ஜன.8- நாடு முழுவதும் உள்ள மத்திய அரசு பள்ளிகளில் திருவள்ளுவர் பற்றிய கட்டுரைப்போட்டி அடுத்த வாரம் ஆன்லைன் மூலம் நடத்தப்படும் என ''மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரி ஸ்மிரிதி இரானி கூறினார்.

திருவள்ளுவர் தினம்....

உலக பொதுமறையாம் திருக்குறளை உலகுக்கு அளித்த தமிழ் புலவர் திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாற்றை நாடு முழுவதும் உள்ள மாணவர்களும் அறிந்துகொள்ள மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

அதன்படி திருவள்ளுவரின் படைப்புகளும், வாழ்க்கை வரலாற்றையும் நாடு முழுவதும் பரவலாக அறிமுகப்படுத்த மத்திய அரசு முடிவு செய்து உள்ளது. மேலும் நாடு முழுவதும் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் திருவள்ளுவர் தினம் விமரிசையாக கொண்டாடப்படும் என்றும் மத்திய அரசு அறிவித்து உள்ளது.

கட்டுரைப்போட்டி....

திருவள்ளுவர் தினம் 16-ந் தேதி வெள்ளிக்கிழமை கொண்டாடப்படும் நிலையில், மத்திய அரசு பள்ளிகளில் திருவள்ளுவர் பற்றிய கட்டுரைப்போட்டி ஒன்றை நடத்த மத்திய அரசு முடிவு செய்து உள்ளது. இது குறித்து மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரி ஸ்மிரிதி இரானி நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

22 மொழிகளில்....

திருவள்ளுவர் வாழ்க்கை மற்றும் பணிகள் குறித்து மாணவர்கள் தெரிந்துகொள்ளும் வகையில் ஆன்லைன் கட்டுரைப்போட்டி ஒன்றை இந்த மாத மத்தியில் (அடுத்த வாரம்) மத்திய அரசு பள்ளிகளில் நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.

இந்த கட்டுரைப்போட்டி திட்டமிட்ட 22 மொழிகளில் நடத்தப்படும். இந்த போட்டி தொடர்பாக மத்திய அரசு பள்ளி (சி.பி.எஸ்.சி.) நிர்வாகத்துக்கு நாங்கள் வேண்டுகோள் வைத்துள்ளோம்.

புதிய கல்விக்கொள்கை....

புதிய கல்விக்கொள்கை உருவாக்குவது தொடர்பாக அனைத்து மாநிலங்களுடனும் நாங்கள் ஆலோசனை நடத்தி வருகிறோம். ஒவ்வொரு மாநிலத்துக்கும், கொண்டாடப்படவேண்டிய தனிப்பட்ட கலாச்சாரம் மற்றும் பண்பாடும் உள்ளது, இவை அனைத்தும் புதிய கல்விக்கொள்கையில் இடம்பெறும் என நான் நம்புகிறேன். இவ்வாறு ஸ்மிரிதி இராணி கூறினார்.

புத்தகம் வெளியீடு....

தேசிய பாடத்திட்டத்தில் திருவள்ளுவர் வாழ்க்கை வரலாறு சேர்க்கப்படுமா? என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், புதிய தேசிய கல்விக்கொள்கை வகுக்கப்பட்டப்பின் இது குறித்து முடிவு செய்யப்படும் என்று கூறினார். இந்த சந்திப்பின்போது, திருவள்ளுவர் குறித்து தருண் விஜய் எம்.பி எழுதிய புத்தகம் ஒன்றையும் ஸ்மிரிதி இரானி வெளியிட்டார்.

---------தினத்தந்தி.

இன்று தினத்தந்தியில் வந்த இந்த செய்தியை கண்டதும் மனசுக்கு மகிழ்ச்சி வந்தது, மத்திய அரசுகூட திருக்குறள் பற்றி பேசுகிறது, திருவள்ளுவர் தினத்தை அங்கீகரிக்கிறது, அனைவரையும் கொண்டாடச்சொல்கிறது. 22 மொழிகளில் திருவள்ளுவர் பற்றிய வரலாற்றுக் குறிப்பு கட்டுரைப்போட்டி நடத்தப்படுவது கூடுதலான மகிழ்ச்சியையே அளிக்கிறது. ஆனாலும் மனதிற்குள் ஏதோ உறுத்தல்கள் வந்து என்னமோ செய்கிறது. அது என்னவென்றால், திருவள்ளுவர் பற்றியும், திருக்குறள் பற்றியும் திரிப்புகள் இல்லாத நிதர்சன உண்மைகளை மத்திய அரசு உலகிற்கு எடுத்துரைக்க வேண்டும் என்பதே அந்த உறுத்தல்.

ஆம்.... திருவள்ளுவர் இந்த உலகிற்கே பொதுவானவர், சாதி, மதம், கடவுள், இவைகளுக்கெல்லாம் அப்பாற்பட்டவர். இந்து, முஸ்லிம், கிறிஸ்டின், பௌத்தம் இவைகலெல்லாம் அவருக்கு தெரியாது. அவர் எந்த மதத்தையும், சாதியையும் சாதியையும் சார்ந்தவர் அல்ல. அவர் அனைவருக்கும் சொந்தக்காரர், சுத்தத்தமிழ் மனிதர், அவருக்கான ஒரே அடையாளம் தமிழன் என்பது மட்டும்தான். மற்றபடி அவரது உண்மையான வரலாறு இன்னும் கிடைக்கவில்லை.

1330 குறளில் உலகத்தை அடக்கிய இந்த மாமேதை, 1330 குரலில் ஒரு குறளில்கூட சாதியையோ, மதத்தையோ பற்றி ஒரு சிறு சொல்கூட கூறவில்லை. இயற்க்கையைமட்டும்தான் கடவுளாக பாவித்து இருப்பார். அப்படிப்பட்ட இந்த உலகமாக மேதையை இந்து என்ற வட்டத்திற்குள் எவரும் அடக்கிவிடக்கூடாது என்பதே எனது கட்டாய எண்ணம்.

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகலவன் முதற்றே உலகு.

என்று தனது முதல் குறளிலேயே ஆதியாகிய சூரியனை மையமாகக் கொண்டுதான் இந்த உலகம் இயங்குகிறது எனற உண்மையை பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே திருவள்ளுவர் கூறிவிட்டார். ஆனால் விஞ்ஞானிகள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு பிறகுதான் இதை கண்டுபிடித்தார்கள். திருவள்ளுவன் எவ்வளவுப்பெரிய விஞ்ஞானி என்பது வெளிஉலகிற்கு தெரியாமல் போனது மிக வருத்தமான விடயமாகும்.

தருண் விஜய் எம்.பி அவர்கள் திருவள்ளுவர் பற்றிய புத்தகத்தை வெளியிட்டு இருப்பது வரவேற்கத்தக்கது மட்டுமல்ல பாராட்டதக்கதும்கூட. ஒரு தமிழனாக நான் அவரை பாராட்டுகிறேன். அதே வேளையில் அந்த புத்தகம் முழு உண்மையை வெளிபடுத்த வேண்டும், எங்கேயும் எந்த ஒரு திரிப்பும் இருக்கக்கூடாது என்று விரும்புகின்றேன். ஆனாலும் அந்த புத்தகத்தை படிக்காமல் நாம் எதுவும் கூறிவிட இயலாது.

அதே போல் மத்திய அரசும் திருவள்ளுவர் பற்றிய கட்டுரைப்போட்டியினை நடத்துவது வரவேற்க்கதக்க விடயமாகும். அதே நேரம் உள்நோக்கங்கள் இல்லாமல், திருவள்ளுவரை பற்றிய உண்மைகளையும், தமிழனின் உன்னதங்களையும் ஏற்றுக்கொண்டு திருக்குறளின் புகழை உலகறியச்செய்ய வேண்டும்.

இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களில் உள்ள பள்ளிப்பாடங்களிலும் திருக்குறள் இடம்பெறச் செய்ய வேண்டும். ஏனென்றால், அயல்நாட்டுக்காரகள் திருக்குறளின் பெருமையை அறிந்த அளவிற்கு இந்தியாவில் தமிழகத்தை தவிர மற்ற மாநிலங்கள் அறியவில்லை என்பதே உண்மை, ஆகையினால் திருக்குறள் நாடுமுழுவதும் அனைத்துப்பாடங்களிலும் இடம்பெறச் செய்ய வேண்டும்.

திருக்குறள் எழுதப்பட்டது தமிழில். அதை எழுதியவன் தமிழன். ஆனால் இது உலகில் வாழுகிற ஒவ்வொரு மனிதனுக்கும் அவசியமான ஒரு நூல். அன்றே தமிழன் இந்த உலக மானுடத்தை பிரிவினைகள் இல்லாத ஒரேப் பார்வையில் நோக்கி இந்த நூலை எழுதி இருக்கிறான். ஆகையினால் திருக்குறளின் பெருமை உலகம் பேசப்படவேண்டியதாகும்.

பைபிள், கீதை, குரான், மகாவம்சம் இவைகளுக்கெல்லாம் மேலே வைக்க வேண்டிய நூல் திருக்குறளாகும். ஏனென்றால் இவைகள் எல்லாம் ஒரு ஒரு மதத்தினருக்கும் மார்க்கங்களை போதிக்கின்ற மதநூல்களாக இருக்கின்றன, ஆனால் திருக்குறள் மட்டுமே இந்த உலக மனிதர்களை எல்லாம் ஒரே பார்வையில் நோக்கி வாழுகிற மார்க்கம் சொல்லப்பட்டு இருக்கிறது.

ஒரு ஒரு மனிதனின் வாழ்க்கைக்கும் தேவையான உன்னத பொக்கிசங்கள் திருக்குறளுக்குள் இருக்கிறது.

திருவள்ளுவர் தமிழன் என்பதால், அவர் ஒரு இந்து மதத்தவர் என்று யாரும் தவறான கண்ணோட்டத்தில் பார்க்க கூடாது என்பதே இந்த கட்டுரையின் நோக்கமாகும்.

==
அட, பொங்கல் கவிதை போட்டிக்கு நீங்கள் கவிதை எழுதிட்டிங்களா? இன்னும் இல்லனா உடனே எழுதுகோல் எடுத்து எழுதத்தொடங்குங்களேன்.இன்னும் ஏழு நாட்கள்தான் இருக்கிறது. மறக்காம எழுதிடுங்க, மகிழ்ச்சியை பகிர்ந்துகங்க.



----------------நிலாசூரியன்.

எழுதியவர் : நிலாசூரியன். தச்சூர். (8-Jan-15, 3:41 pm)
பார்வை : 1444

மேலே