மூச்சுக்காற்றாய் நீ

புவனா மிகவும் மென்மையானவள். செடியில் இருக்கும் மலரை பறிக்கும் போது கூட செடிக்கும் வலிக்காமல், பூவிற்கும் வலிக்காமல் பறிப்பவள்..

அன்று ஞாயிற்றுக்கிழமை.

ஞாயிறு என்றாலே ஒரு வித சோம்பல் பற்றிக்கொள்ளும் கொஞ்சம் லேட்டாக எழுந்திருக்கலாம் என்று, ஆனால் புவனா அன்றுதான் சுறுசுறுப்பாய் அதிகாலையிலேயே எழுந்து கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து கொண்டிருக்கும் வெண்ணிலவையும், பின்பு எழும் அதிகாலை சூரியனையும் அப்படியே ரசித்துக்கொண்டு நிற்பாள்...

மழை விட்டபின் இருக்கும் வானம் போன்றது இவளது மனம். தன் மொட்டை மாடியில் வைத்திருக்கும் செடிகளுக்கு நீர் விட்டுக்கொண்டே பேசிக்கொண்டும் பாடிக்கொண்டும்… கீழே இறங்கிவர எட்டு மணி ஆகி இருந்தது...

புவனாவின் அப்பாதான் அன்று சமையல்.. மகள் இறங்கி வரவும் காபி டம்ளரை நீட்டினார்.. வாங்கி பருகிக் கொண்டிருந்தவளிடம் கேட்டார்...

"ஏம்மா! நாளை தானே வேலையில் சேரப் போகிறாய். அதற்காக உன் தோழி கவிதாவிடம் இதை பற்றி பேசினாயா..!" என்றார்.

"ம்.. பேசிவிட்டேன்ப்பா.. ஒன்பது முப்பதுக்கெல்லாம் வரச்சொன்னாள்"

என்று சொல்லிவிட்டு

"என்னப்பா! இன்னும் இவள் எழுந்திருக்கவில்லையா…!", என்று கேட்டுக்கொண்டே தங்கையை எழுப்பச் சென்றாள்..

"குட்டிம்மா! மணி என்ன தெரியுமா?" என்று அதட்டினாள்..

அம்மாவை விட அப்பாமேல் அதிக அன்பு வைத்திருப்பவர்கள் இரண்டு பேரும். அப்பா வேலையில் இருந்து ஓய்வு பெற்ற பின்புதான் வேலைக்கு போக வேண்டும் என்று அன்பான கட்டளையிட்டவர்.

அதை ஆமோதித்தே இதோ புவனா நாளை முதல் அலுவலகத்தில் அடியெடுத்து வைக்கிறாள்...

அப்பா மட்டுமே இவள் வாழ்வில் பௌர்ணமி....!!!

அடுத்த நாள்....

"அப்பா! உங்கள எங்கெல்லாம் தேடுரது? இங்க என்ன செய்றீங்க?" , என்று கேட்டபடியே புஷ்பா வந்தாள்..

"அது ஒண்ணு இல்லம்மா.. நேத்து புதுசா ஒரு பூச்செடி வாங்கிட்டு வந்தேன்.. அத நட்டு வச்சிக்கிட்டு இருந்தேன்.. சரி சரி அக்கா வேலைக்கு கிளம்பியாச்சா..."

"ம் கிளம்பிட்டு இருக்கா… உங்கள்ட்ட ஏதோ சொல்லணுமா வரச்சொன்னா"

"அம்மாடி புவனா ஏன்டா கூப்ட்ட..."

"அப்பா உங்களுக்கு எத்தனை தடவ சொல்லியாச்சி.. ஏன் நேத்து உங்க ப்ரண்டு வீட்டுக்கு போயிட்டு லேட்டா வந்தீங்க... அம்மா உங்க மேல ரொம்ப கோவமா இருக்காங்க.."

"அது வந்தும்மா...."

"அத நான் சொல்றேன்", என்று சின்னவள் ஓடி வந்தாள்.

"அப்பா..! யாருக்காவது கல்யாணம்ன்னு பத்திரிகை கொடுத்தாங்களா..."

"அட..! கரெக்ட்டா கண்டுபிடிச்சிட்ட..."

"அதானே பார்த்தேன். நம்ம கணக்கு தப்பாதே..", என்று புஷ்பா அளக்க..

"அம்மாடி புவனா... நம்ம சுதாகர் பொண்ணுக்கு கல்யாணமாம்.. பத்திரிகை கொடுத்தான்.. உன்னோட ஞாபகம் வந்துடுச்சி. நீதான் இப்போ கல்யாணம் வேண்டாம் அப்படி இப்படின்னு ஆயிரெத்தெட்டு கண்டிசன் போடுறியே..."

"அதுக்கு உடனே தண்ணி அடிச்சிட்டு லேட்டா வர்றதா.. அம்மா உங்கமேல ரொம்ப கோவமா இருக்காங்க..."

"அம்மாடி.. அம்மாடி.. நேத்து ஒரு நாள் தானே.... நீங்க ரெண்டு பேரும் அம்மாட்ட சொல்லக் கூடாதா.."

"ம்கூம்.. இதயே எத்தனை தடவை சொல்லி இருக்கீங்க? குடிச்சிட்டு வரும்போதெல்லாம் இதுதாம்மா ..கடைசி தடவைன்னு சொல்றது.."

"நீங்களாச்சி.. உங்க மனைவியாச்சி.. நாங்க கிளம்பறோம்.. சாப்ட வாங்க.. குட்டிம்மா நீயும் வா.."

"அக்கா எத்தனை தடவ சொல்றது உன‌க்கு... என்ன குட்டிம்மான்னு கூப்டாதன்னு... அழகா அம்மாவும் அப்பாவும் எனக்கு புஷ்பான்னு பேரு வச்சிருக்காங்க.. அத சொல்லி கூப்டேன்.."

"சரிடி வாயாடி..."

"என்னம்மா.. அம்மா சாப்டாச்சா..?"

"ம்.. சாப்டாச்சுப்பா.. இந்தாங்க அம்மாவோட ப்ளேட்.."

"என்னம்மா பொங்கல் சாம்பார் சட்னியெல்லாம் சூடாவே இருக்கு அம்மா சாப்டலயோ...!!"

"நீங்க சாப்டுங்க.. அவுங்க உங்க மேல கோவமா இருக்காங்களாம்மா..."

"சரி சரி நான் பார்த்துக்குறேன்... நீ ஆபிஸ் போகும்போது சின்னவள ஸ்கூல்ல விட்டுடும்மா.. நான் கொஞ்சம் சீக்கிரமாவே ரேஷனுக்கு போகணும்.."

"சரிப்பா...."

"சரிம்மா… இன்னைக்கு முதல் நாள் ஆபிஸ்க்கு போற.. பாத்தும்மா...."

"சரிப்பா பாய்...."

"வா குட்டிம்மா...."

"பாய்ம்மா", என்று சொல்லிவிட்டு இருவரும் பஸ் நிலையம் நோக்கி செல்கின்றனர்...

புவனா, புஷ்பாவின் அப்பா தணிகாச்சலம் வாசலுக்கு வருகிறார்..

பக்கத்து வீட்டு சிவகாமியைப் பார்த்து... அவர் பூ தொடுப்பவர்... "சிவகாமி பூ இருக்கா? எனக்கு மல்லிப்பூ இரண்டு முழ‌ம் குடு" என்றார்.

"எண்ணண்ணே.. நேத்து லேட்டா வந்தீங்கலோ.. அதான் பூ வாங்கலையா" என்று கேட்டுக்கொண்டே எடுத்து வந்து தந்தாள்..

மனைவியை “வள்ளி……….” என்று அழைத்துக்கொண்டே உள்ளே சென்றார் தணிகாசலம்...

"வள்ளி என்னம்மா.. என் மேல கோவமா... பசங்க சொன்னாங்க... அது ஒண்ணும் இல்ல.. எப்போதும் போலத்தான்… புவனா கல்யாணத்தப்பத்தி.. சரி சரி மொறைக்காத", என்று சொல்லிக்கொண்டே மனைவியின் படத்துக்குப் பூவை போட்டார்...

எழுதியவர் : வே.புனிதா வேளாங்கண்ணி (8-Jan-15, 10:15 pm)
பார்வை : 416

மேலே