சாலையோரச் சுவடுகள் -ரகு

அடிக்கடி
நான் செல்லும்வழியில்
எதிர்ப்படும்
சிறுவனொருவன்
எப்போதும்
இதழ்விரித்தப்
புன்னகையைத்
தவழ்த்தியிருப்பான் முகத்தில்
வறுமை நீங்கலாக

மின்சாரம் அறுந்துபோன
நிசப்த இரவுகளில்
சாளரம் திறக்க
சட்டென முகத்தில் நழுவும்
தென்றலாய்
அவன் புன்னகை

அவன் புன்னகை
வாங்காத சில
தருணங்கள்
தகித்தே நகரும்
என்னுள்

அக்குளிலோ
பொத்தானருகிலொ
கால்டவுசரிலோ
சிலபலக்
கிளிதல்கள் சொல்லும்
அவனுக்கான
பிரபஞ்ச அடையாளத்தை

இயந்திர வாழ்க்கையின்
அகோரக் கைகைகளால்
இறுகிய மனதோடு
நானவ்வழியேப்
பயணிக்க நேரிடும்
சில நேரங்களில்
தவறவிட்டுவிடுவேன்
அவன் புன்னகையை

பின்னொருநாள் -அவன்
அச்சாலையின் ஓரத்தில்
சிறியதொரு மரம்நடுவதில்
மும்மூறபட்டிருந்தான்

வசதியும் கௌரவமும்
மறுக்கப்பட
வாகனம் விட்டிறங்காமல்
கனத்துக்கடந்தது
என் புன்ன்கைமட்டும்
தனியே

அதன்பிறகு
நிரந்திரமாகவேத்
தொலைந்துபோயின
அவனும்
அவன்புன்னகையும்

சாலையோரத்தில்
உறங்கிய நள்ளிரவில்
ஒரு குடிகாரன் வாகனம்
அவன் உயிரைக்
குடித்துவிட்டதாய்க் கேள்வி

என்னுள் அவனாய்
மிச்சப்பட்டிருந்தது
அவன் நட்டுவைத்துப்போன
ஒற்றைமரம்

தண்ணீரோடு
கொஞ்சம் கண்ணீரையும்
அதன் வேர்களில்
தெளிக்கிறேன்

ஏழைகளின்
வாழ்வாதாரங்களை
நிரந்தரமாகவே தன்னுள்
புதைத்துக்கொள்ளும்
பிரபஞ்சமெனும்
பெருங்கல்லறையின்
ஓரத்தில்
நின்றுகொண்டு!

எழுதியவர் : அ.ரகு (9-Jan-15, 3:37 pm)
பார்வை : 68

மேலே