நீ நான் நாம் வினோதன்

தூரத்து தூறல் நீ
நில்லாமல் நகர்கிறாய்
நெருப்பென எனை நோக்கி
வற்றா வாஞ்சையோடு !

கண்ட போதும் காணாத
காதல் - காணாத போது
ஊறலென ஏறுகிறது,
இருதயச் சுவர்களில்
இரு தாய ஏணியென !

மூளை கடித்தபின்
பாம்பென இறங்கும்
அன்பெல்லாம் - அழிவின்றி
சுற்றித் திரிகின்றன
குருதிக் குடிசையோரம் !

நீ முன்பெப்போதோ
காட்டிய காதலின்
விலாசத்தை ஏந்தி
உன் விழிவாசலில்
விசாரித்தபடி கடத்துகிறேன்,
என்னையும் உன் அன்பையும்,
விடியும் மறுநொடிக்கு !

ஒருபோதும் - மீண்டும்
காதல் சுமந்தபடி - உன்
விழி வீசி விடாதே,
என்னிலிருந்து என்னை
மீட்பது எனக்கே
முடியாததுதாகிவிடும் !

நீ காதல் சுமந்தபடி
நடந்த தடங்களுண்டு - என்
குருதிக் குளக்கரையில்...
எப்போது தரிசித்தாலும்
வாசந்தம் நோக்கி
கை காட்டும் அது...
கை கட்டி நடப்பேன் !

உன்னை மறக்க மட்டும்
முயற்சிக்கவே இல்லை,
மூளை சிக்குறும்...
அறிவியலுக்கு அப்பாற்பட்ட
எதிலும் எனக்கு
நம்பிக்கை இல்லை !

நீ நான் நாமாகிய
கடந்த காலத்தை
பதப்படுத்தி உண்டு
பயணப்படுகிறேன்,
எதிர்காலத்திற்கும்,
நீ நான் நாமாகவே !

- வினோதன்

(காதல் தோல்வி அப்டி இப்டினு புரளிய கிளப்பி விற்றாதிங்க மக்களே...இது முற்றிலும் கற்பனை வலியின் வரிகள்...தங்கள் கற்பனைக்கு கம்பெனி பொறுப்பேற்காது ;) ;) :P )

எழுதியவர் : வினோதன் (9-Jan-15, 8:56 pm)
பார்வை : 117

மேலே