வல்லான் வகுத்த வாய்க்கால்

பிரளயம் என்றும் - ஊழிப்
பெருவெள்ளம் என்றும்
கடற்கோள் என்றும்
கேள்விப்பட்டிருக்கிறோம்...
கண்டதில்லை நாம்.

ஹிரோஷிமா என்றும்
நாகசாகி என்றும்
படித்திருக்கிறோம்...
பார்த்ததில்லை நாம்.

முள்ளிவாய்க்காலைப்
பார்த்தோம்.. துடித்தோம்...
உங்கள் அலறல் அழுகுரல்
கேட்டோம்... தவித்தோம்...

பிரளயமும்...
பெருவெள்ளமும்...
கடற்கோளும்...
இயற்கையின் சீற்றங்கள்.

ஹிரோஷிமாவும்,
நாகசாகியும்
சாம் மாமாவின் அணுக்கொலைகள்.
இரண்டாம் உலகப் போரின்
இறுதிப் புள்ளிகள்.

முள்ளி வாய்க்கால்
பெருவெள்ளமில்லை..
உலகப் போருமில்லை...

ஆனால்,
பேரழிவு
முழுப் பேரழிவு

அழிவன்று,
அழிப்பு
இன அழிப்பு
தமிழின அழிப்பு

சிங்களக் கொடியோன்
செய்திட்ட இனக்கொலை.

வியட்நாமின் மைலாய்...
சாதியால்,...
சா...தீயால் எறிந்த
தமிழ்நாட்டின் கீழ் வெண்மணி...

சயோனிச பயங்கரவாதத்தால்
சாம்பலாகிப் போன
பாலஸ்தீனச் சிற்றூர்கள் பல பல

இந்திய கொடுநகங்களால் குதறப்பட்ட
தமிழீழத்தின் வல்வெட்டித்துறை

இவை -

புவி மண்ணில் இரத்த புள்ளியிட்டு
காலம் வரைந்த கோலங்கள்.

முன்னறிந்த இவையெல்லாம்
முள்ளி வாய்க்காலுக்கு முன்
ஒன்றுமே இல்லை..
ஒன்றுமே இல்லை...

முள்ளி வாய்க்காலில்
துள்ளத்துடிக்க
கொலையுண்டு போன
எங்கள் தமிழ் சொந்தங்களே,

என்ன குற்றம் செய்தீர்கள் என்பதால்
இந்த கொடுந்தண்டனை உங்களுக்கு?

தமிழராய் பிறந்தது குற்றம்...
தன்மானம் இனமானம்
கொண்டது பெருங்குற்றம்...
விடுதலை வேட்க்கை
யாவற்றிலும் கொடுங்குற்றம்...

இதற்க்கு முன்னே
இனக்கொலை
போர்குற்றம்
மனிதநேய மறுப்பு
எதுவுமே இல்லையாம்...

இது
வல்லான் வகுத்த வாய்க்கால்,
இதனால் விளைந்ததே முள்ளிவாய்க்கால்.

ஆனால்,
சொந்தங்களே
நீங்கள் கண்மூடினாலும்...
உங்களை மண் மூடினாலும்...
நீதியின் கண்களைத்
திறவாமல் ஓய்ந்திடோம்.

நீதியின்
நெற்றிக் கண்ணிலிருந்து
நெருப்புமிழ்ந்து,..
அநீதியை...
ஆதிக்கத்தை...
எரியாமல் ஓய்ந்திடோம்.

உங்களுக்காக அழுதோம்
உள்ளமுருகி தொழுதோம்
எங்கள் கண்ணீரால்
உங்கள் செந்நீரைக்
கழுவ எண்ணினோம்
கரை நீங்கவில்லை.

இன்றைக்கும் விளங்கவில்லையோ
எங்கள் முறையீட்டின் மொழி?

இனி அழ மாட்டோம்
எவரையும் தொழ மாட்டோம்
கண்ணீரைத் துடைக்கின்றோம்
களம்காண எழுகின்றோம்

எப் பகை வரினும்
எதிர்நிற்கும் அறவளிமைத்
துணைகொண்டு வருகின்றோம்...

உலகத் தமிழர் உள்ளமே

நீங்கள் துயிலும் இல்லம்,..
முள்ளிக் கொடுமைக்கொரு நீதி,..
நம்முரிமைக்கொரு தேசம்,..
அதற்கொரு விலையாய்
எம்முயிர் கேட்பினும் தருவோம்.

எழுதியவர் : ஆனந்தி (10-Jan-15, 2:58 am)
பார்வை : 116

மேலே