இதுவா சிங்காரச் சென்னை

நேற்று ஒரு வேலையாக சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சென்றிருந்தேன்.. அங்கே உள்ள கழிப்பறையின் லட்சணத்தை பார்த்து நிர்வாகத்தின் மீதுள்ள கோவத்தில் படிவழியாகவே வேகமாக சென்று ஒவ்வொரு தளத்திலும் உள்ள கழிப்பறைகளில் இருக்கும் குழாய்களை ஒவ்வொன்றாக திறந்து பார்த்தேன்...
விடயம் என்னவென்றால் நான் பார்வையிட்ட 4 தளங்களிலும் உள்ள 16 கழிப்பறையிலும் உள்ள 20 குழாய்களிலும் மிக சீரான வேகத்தில் சுத்தமாகவே தண்ணீர் வந்து கொண்டிருந்தது.. அதுமட்டுமின்றி ஒவ்வொரு அறையிலும் ஒரு பெரிய டிரம்மில் தண்ணீர் நிரப்பப்பட்டிருந்தது...
இப்படி இருந்தும் அந்த கழிப்பறைகளின் நிலைமை இத்தனை மோசமாக இருக்க காரணம் அங்குள்ள மக்களே என்பது மிக வேதனைக்குரிய விடயமாக இருந்தது..
5வது மாடிக்கு சென்றபோது ஒரு அம்மா அதனை அத்தனை சுத்தமாக கழுவிவிட்டு வெளியே வந்து கொண்டிருந்தார்... என்னை பார்த்ததும் "இப்போதான் சுத்தம் பண்ணேன்" அப்படின்னு புலம்பினார். அந்தளவு நொந்து போயிருக்கிறார் போலும்..... யார் வந்தாலும் தண்ணீர் ஊற்றுவதில்லை என்பது அவர் சலிப்பில் தெரிந்தது..
அவரை விசாரித்ததில் அவர் 4 மாடிகளை சுத்தம் செய்து விட்டு தான் 5வது மாடிக்கு வந்திருக்கிறார் என்பது தெரிய வந்தது.. அதற்குள் அதை அத்தனை கொடூரமாக ஆக்குவானேன்... அப்படி என்ன அலட்சியம்..?
அங்குள்ள அத்தனை மாடியிலும் ஒவ்வொரு நோயாளிகளிடமும், பார்வையாளர்களிடமும் இதை பற்றி எடுத்து சொன்ன பொது ஒருவரும் அதை மதித்ததாக தெரியவில்லை... நம் தாய்மார்கள் அந்த வேலையை செய்பவர்களாக இருந்தால் நாம் அவர்களுக்கு இப்படி ஒரு தீங்கிழைப்போமா...? அவர்களும் மனிதர்கள் தானே.. நாற்றத்திற்கும் நறுமனதிற்கும் வித்தியாசம் உணரக்கூடிய உயிரனம்தானே... இதை ஏன் சிந்திப்பதில்லை..? இதை கேட்டபோது
"இல்லாதவங்க தான் இங்க வராங்க.. அவங்களுக்கு என்னமா தெரியும், இதுங்கள சொல்லி திருத்த முடியாது விடுங்க.. " என்கிறார் வார்டுபாய் வேலை செய்யும் ஒருவர்...
இல்லாதவர்கள் என்றால் என்ன..? அடித்தட்டு மக்களுக்கு சுகாதாரத்தை பற்றி தெரிந்திருக்க வேண்டியதில்லையா..? அவசியமில்லையா அவர்களுக்கு...? ஒரு நோய் குணமாக்க வந்து பல நோய் வாங்கி செல்வது சரியா...? பார்வையாளர்களுக்கும் தானே பாதிப்பு.. அதை ஏன் உணர மறுக்கிறார்கள்.... ஒரு ஒருமணிநேரம் அங்கே வருபவர்களை ஒவ்வொருவராக நிறுத்தி இதை எடுத்து சொன்னால், நின்று செவி கொடுத்து கூட கேட்க தயாராக இல்லை எவரும்....
சரி என்ன செய்வது உடனே வண்டி எடுத்துகொண்டு அலுவலகத்திற்கு வந்து ஒரு டிசைன் செய்து அங்கே அதை ஓட்டுவதற்கு அனுமதி கிடைக்காமல்., கொண்டு சென்ற சில பிரதிகளை அங்குள்ள சில நோயாளிகளுக்கு கொடுத்தோம்.. அதை வாங்கிய பலர் அங்கேயே கசக்கி போட்டார்கள்... சிலர் "ஏதாவது கட்சி ஆளுங்களா இருப்பாங்க என்று முனகினார்... ஒருவரும் அதில் உள்ளவற்றை உள்வாங்கியதாக தெரியவில்லை...
அதில் சந்தோசமான விடயம், ஒரு 8 வயது சிறுவன் அறுவை சிகிச்சை செய்து சிகிச்சையில் இருக்கும் அந்த சிறுவன் மட்டும் தன் அம்மாவிற்கு அதை படித்துக்காட்டி விளக்கம் சொல்லி கொண்டிருந்தான்... அவர்களும் அடித்தட்டு மக்கள் தான்...
ஒரு நல்ல விடயத்தை சக மனிதன் சொல்லும்போது செவி கொடுத்து கேளாதவரை இந்த சமூகம் எப்படி முன்னேறும்...? சுகாதாரம் கூட தரம் பிரிக்க பட்டுவிட்டாதா..? அல்லது சோம்பேறித்தனத்திற்கு சப்பை கட்டா..?
இதை நான் எப்படி சிங்காரச் சென்னை என்று பெருமையாக சொல்ல முடியும்.. ?