கடைசி நூறு ரூபாய் -சந்தோஷ்

கடைசியாய்
ஒரு நூறு ரூபாய்
செலவழிக்க மனமில்லை
செலவழித்துவிட்டால்
நாளையின் தன்னம்பிக்கைக்கு
என்னிடம் வேறெதுவுமில்லை.


இன்றைய பசித்தீக்கு
மாநகராட்சியின் தண்ணீர்
ஊற்றி அணைக்கிறேன்.
இருந்தும்,
வயிறு எரிகிறது- என்
குடல் கருகி சுருங்குகிறது.

வீராப்பாய் அன்று
அன்னையிடம் சொல்லிவந்துவிட்டேன்.
'சாதித்துதான் வீடு திரும்புவேன்' என்று.
இன்று வயிற்று பசியைக்கூட
வெல்லமுடியா கோழையாய்
நான்
இலட்சிய வீரன் எனும் பெயரில்....!

கடைசியாய்
ஒரு நூறு ரூபாய்..!

பேருந்து ஏறி- கூலி
வேலைத்தேடியாவது
வருமானம் பார்க்கலாம்தான்...!
அவமானப்படுகிறது எனது
நேற்றைய முதலாளித்துவப்புத்தி.
என்ன செய்ய.. ??
நான் நேற்றைய தொழிலதிபர்..!

கடைசியாயிருக்கும்
இந்த ஒற்றை
நூறுரூபாய் தாளினை
மென்று தின்று விட்டால்.....

வரும் பத்து நாட்களுக்கு
பசியெடுக்காமல்
இருந்தால்தான் என்ன... ?

ரூபாயை தின்று
பசியை போக்குமளவு
இன்னும் ஏனிந்த
மருத்துவவிஞ்ஞானம்
வளரவில்லை...? அய்யகோ...!!

வரவேற்ற வாய்ப்புக்கள்
கொக்கரிக்கின்றன.
அரவணைக்குமென நம்பிய
காதலும் அவசரகதியில்
சமாதியாகிவிட்டன.

ஹம்ம்ம்ம்ம்

இந்த கவிதை............
இந்த எழுத்துக்கள்...

நிச்சயம்
என் மரணவாக்குமூலமாக
இருந்திடக்கூடாது.

இருக்ககூடாது....
நம்புகிறேன்..

என் தன்னம்பிக்கை
எப்போதும் ஊனமாகிவிடாது
நிச்சயமாய் சத்தியமாய்
நம்புகிறேன்....

நம்பிக்கையுடன்..
நாளைய கதாநாயகன்....!

-----------------------------------------

-இரா.சந்தோஷ் குமார்.

எழுதியவர் : இரா.சந்தோஷ் குமார். (11-Jan-15, 9:51 am)
பார்வை : 175

மேலே