ரணங்கள் மேல் ஒரு ரயில்

தடக்.. தடக்..
தடக்.. தடக்..
இயல்பாய் ரயில்வண்டி
தண்டவாளத்தின் தலைகோத,
ரயில்கவிஞன் முன்னுரைக்குள்
மொட்டுவிடும் இரட்டைக்கிளவியை
இக்கவிதைக்குப் பூச்சூடுகிறேன்...
மதுரை யின் தூரத்தை
படிப்படியாய் குறைத்துக்கொண்டு
'பாண்டியன் எக்ஸ்பிரஸ்' பயணமிட,
ஜன்னலோர கம்பிக்குள்
ஜான்முகம் சிறையிருக்க,
விழிவழியே
விரும்பியவளால்
வெளிவானில்
விழுந்து கொண்டிருந்தேன்...
வெறும்
பார்வையிலே நாள்நகர்த்த
பழகிய மனதுக்கு,
இருநாட்கள் இடைவெளி
ஏனோ
கண் ஈரத்தை
காற்றுக்கு கூவி விற்றது...
கவிதைகள் அழகென்று
நண்பர்கள் நனைத்தமழை
என் கண்ணீர்
கறை படிந்த
காகிதத்தை நனைத்ததில்லை..
உண்மை தான்..!
உணர்வுகளை வெறும்
பேனாதுளிகளில் பிரதி எடுக்க
இதுவரை என்னால் முடிந்ததில்லை...
கிரிக்கெட் விளையாட்டின்
பொறுமை பொதிந்த
டெஸ்ட் போட்டிகளை,
ஒருதளை காதலுடன்
ஒப்புமை செய்தவன்
வைரமுத்துக்கு வாரிசென
வகைப்படுத்தினேன்..
"மடையன் நான்" என
கடவுள் சொன்னான்...
முகத்தின் இடத்தில்
மனத்தை படைத்திருந்தால்
"மடையன் கடவுள்"
என மனம்சொல்லி இருக்காது..
படைத்தான்..!
மடையனானான்....!
ஓடும் வேகத்தில்,
வழி நெடுகே வான்படலம்
ஜன்னல் FRAME களை
இயற்கை காட்சிகளுக்கு
இலவசமாய் எழுதிவைக்க
என் கதையின் மீசைக்கு
நான் மட்டும்
மைபூசிக் கொண்டிருந்தேன்..
எண்ணங்களோ கலர்கலராய்
நெஞ்சுக்குள் இனம்பிரிய,
உடன் வந்த நண்பனின் ( Kiran :p)
"டேய்" சொல் ஏனோ
நிறப்பிரிகையை நிறுத்திவைத்தது...
ஊர்போகும் எண்ணம்
உயிரின் முகவரியை
ஒருவாறு அடைந்துவிட
சிந்தனைக்கு சிறைவிதித்துவிட்டு
எதிர் இருக்கையை ஏறிட்டேன்...
வெறுமை!
அதனருகிருக்கையில் ஒருபெண்!
"என் நினைவுகளாய்
உடன் வந்த
என்னுயிர் காதலியை
என் எதிரே அமர்ந்து கொள்ள
இடம்விட்டிருந்தாள் "-என
மறுபடியும் வேலை செய்தது
உருவகத்தில் ஊறிப்போன
என் பொல்லா மனம்...
கைக்கூப்ப கரம் உயர்ந்தும்
வெட்கத்தின் ஈர்ப்புவிசையில்
கைகளும் தான் கட்டுண்டது...
இருந்தும் விழிவழியே
இமைபூக்க சொல்லிக்கொண்டேன்
என்மன எண்ணத்தை
எளிதில் புரிந்துகொண்ட
பெயர்தெரியா பெண்ணுக்கு
மூன்றெழுத்தில் ஒரு
முழு 'SONNET' - "நன்றி" -JK