இழந்த வாழ்வு
வரலாற்றின் வாளெடுத்து
நிகழ்கால கதவு திறந்து
களம் புகுந்து ..
ஓலமிடும் ஓநாய்கள் நடுவில்..
நுழைகின்றான்..அவன்..இளம்பரிதி!
எங்கு நோக்கினும்..
அடிமைகளின் சடலங்கள்..
அமைதியாக அழித்து
சுவை கண்டு கொண்டிருக்கும்
சுயநலப் பேய்கள்..
உயிர் பிரிந்து கொண்டிருக்கும்
வேளையில்..சாய்ந்து கொண்டிருந்த
ஒருவனைக் கண்டான்..
சரித்திரத்தை மாற்றிய நீங்களெல்லாம்
சவக்குழியில் இன்று வீழ்ந்ததேன்
எனக் கேட்டான்..
சுயநலத்தால்..பொறாமையினால்..
சோரம் போனோம்..
சுவாசத்திலும்.. அழிவுதனை
ஆலிங்கனம் செய்தோம் ..
மதியிழந்தோம் ..
மண்ணில் சாய்ந்தோம்.
என்று சொல்லி உயிரை விட்டான்..
..
எழுகின்றான் இளம்பரிதி..
எழில் வாழ்வை உருவாக்க !