நாளைய தமிழும் தமிழரும் “பொங்கல் கவிதை போட்டி 2015”

நாளைய தமிழும் தமிழரும் “பொங்கல் கவிதை போட்டி 2015”
------------------------------------------------------------------------------------------
முத்தமிழே வரலாற்றில் முந்திய தாகும்
இத்தமிழே இனியெங்கும் பேசிடக் கூடும் !
சத்துமிக்க அரசாங்கம் சங்கம மைக்கும்
இத்தரையோர் இணைந்தேறப் பாலமி ணைக்கும் !

வள்ளலுளப் பொறியாளர் மென்பொருள் கூட்ட
கள்ளமறக் கணினித்த மிழ்மலர் பூக்கும் !
வெள்ளையனார் குடியேற்றத் தேசமென் றாலும்
வள்ளுவனார் கொடியங்கே பாதைவ குக்கும் !

வங்கிகளில் தமிழெண்ணில் ஐந்தொகை ஏறும்
பொங்குதமிழ் சமிக்ஞைக்குப் பூமியி யங்கும் !
இங்கிலாந்து கொலுக்கூடம் சங்குமு ழங்கும்
தங்கரதம் தமிழ்த்தாய்க்கு கோவில மைக்கும் !

நாடனைத்தும் தமிழூறும் பள்ளிக ளாகும்
கூடவாங்கி லவிருப்பப் பாடமென் றாகும் !
வீடனைத்தும் குரள்தொட்டே வேளைதொ டங்கும்
மேடைதோறும் கரகாட்டம் மின்னியி ருக்கும் !

சிந்துசம வெளியின்னும் தொன்மைப டைத்த
சந்தமொழி உலகாண்டு ஒற்றுமை காக்கும் !
பந்தமென்றே பலநாடும் சேர்ந்துவ ணங்க
பைந்தமிழில் உருவாகும் தேசிய கீதம் !

கொள்கையென தமிழ்பேசி நாமுமி ருந்தால்
கொள்ளைபோக இயலாமல் கூடியி ருப்பாள் !
நல்லவிலை கொடுத்தீட்டும் ஆங்கிலம் தீர
வல்லரசாய் தமிழென்றும் வையமி ருப்பாள் !

* மீ.மணிகண்டன்
* 12-Jan-15

எழுதியவர் : மீ.மணிகண்டன் (12-Jan-15, 12:07 pm)
பார்வை : 680

மேலே