மார்கழித் தமிழ்பாடு - உரை

நண்பர் காளியப்பன் அவர்களின் அழகிய நயம் மிகுந்த 'மார்கழித் தமிழ்பாடு' பாடலுக்கு அவர் கேட்டுக் கொண்டதற்கிணங்க உரை எழுதி தனியாக வெளியிடுகிறேன். காளியப்பன் அவர்களுக்கு என் இனிய பாராட்டுகள்.

பாடல்:

நீரிறங்கி நெருப்பெழுப்பும் நெஞ்சுகுளிர் மார்கழியில்
சீருறங்கு கழனிப்புல் சிலிர்த்தனவாய்த் தலையாட்டும்
ஊருறக்கம் கலைப்பனபோல் ஓங்குகோ புரப்புறாக்கள்
பேரிறக்கை படபடக்கும் புலர்காலை அழைப்பதுகேள்! 1

தூரகன்ற கால்வாயில் தொடர்னீரில் நீராடு!
பார்விளங்க எழுகதிரின் படரொளிபோல் போராடு!
மாருறங்கு குழந்தை,ஏர் மறவனது நடைதேரு!
போருறங்கி அமைதி,கண் புலர்ந்திடவே தமிழ்பாடு! 2 - காளியப்பன் எசேக்கியல்

நீரிறங்கி நெருப்பெழுப்பும் - காலைப் பனி,நீர்த்துவாலைகளாகப் பூமியில் படர்ந்து, பூமி முதல் நாள் பகலில் பெற்ற நெருப்புப் போன்ற வெப்பத்தை மேலே வரும்படி எழுப்பும்;

நெஞ்சுகுளிர் மார்கழியில் - இரவில் பெய்த பனியின் சில்லிப்பு நெஞ்சுக்குள் சென்று குளிர் தரும் மார்கழி மாதத்தில்;

சீருறங்கு கழனிப்புல் - செழுமையாக வளர்ந்து அசைந்தாடும் நன்செய் நில நெற்பயிர்கள்

சிலிர்த்தனவாய்த் தலையாட்டும் - காலைவேளையில் சில்லென்ற காற்றில் சிலிர்த்து நெற்கதிர்களை கொண்டுள்ள தலையை ஆட்டும்.

ஊர்,உறக்கம் கலைப்பனபோல் - உறங்கிக் கொண்டிருக்கும் ஊரிலுள்ளோரைத் தங்களது தூக்கத்திலிருந்து எழுப்புவது போல

ஓங்கு,கோபுரப்புறாக்கள் - உயர்ந்த கோபுர மாடங்களில் வாழும் பலவகைப் புறாக்களும்

பேரிறக்கை படபடக்கும் - தங்களுடைய அழ்கிய இறக்கைகளைப் படபடவென்று அடித்துத் துயிலெழுப்பும்

புலர்காலை அழைப்பதுகேள் - மெல்லென விடிந்து கொண்டிருக்கும் இளங்காலைப் பொழுது அனைவரையும் அழைப்பதைக் கேளுங்கள்! 1

தூரகன்ற கால்வாயில் - ஆழமும், அகலமும் அமைந்த நீரோடும் தண்ணீர் நிலைகளில்

தொடர்,நீரில் நீராடு - தொடர்ந்து ஓடுகின்ற தெளிந்த குளிர்ச்சியான நீரில் மூழ்கிக் குளித்து புத்துணர்ச்சி பெறு!

பார்விளங்க எழுகதிரின் - இந்த உலகில் அநீதியழிந்து நல்லோர்கள் விளங்க எழுகின்ற சுடரொளியுடன் கூடிய உதிக்கின்ற கதிர்களின்

படரொளிபோல் போராடு - பரந்து விளங்குகின்ற வெளிச்சத்தினைப் போல, மனயிருளைப் போக்கி நல்லவை பெருகப் போராட்டம் நடத்துங்கள் இளைஞர்களே!

மார்,உறங்கு குழந்தை,ஏர் - உறங்கும் குழந்தையைத் தன் மார்பினிலே போட்டு அலுங்காமல் நடக்கும் தகப்பனைப் போல,பொறுப்போடு உழவுக்கான கலப்பையினைத் தோள்மீது தாங்கி நடக்கின்ற

மறவனது நடைதேரு - உழவனாகிய மறக்குல ஆணின் கலங்காத உரமுடைய நடை பெருமை துலங்கும், அசைந்தாடிச் செல்லும் தேர் போன்றது!

போருறங்கி - அழிவுக்கான ஆரவாரங்கொண்ட போர்ச் சத்தங்களும் அடங்கி

அமைதிகண் புலர்ந்திடவே - அமைதி கண்விழித்து நன்மைகள் பெருகிப் பரவிடும் விதமாக

தமிழ்பாடு - அழகிய இனிய விழிப்பூட்டும் களிப்பூட்டும் ஊக்கமூட்டும் தமிழ்ப் பாட்டுக்களைப் பாடி மகிழ்ந்திருங்கள்! 2

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (12-Jan-15, 4:26 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 104

மேலே