நகரப்பொங்கல்

நகரப்பொங்கல்

பாவலர் கருமலைத்தமிழாழன்

மாவிலையின் தோரணங்கள்
மணமில்லா ஞெகிழியிலே
தூவிவைத்த கோலம்பொடி
துலங்காநெய் வண்ணத்தில் !

மண்ணுருண்டை அடுப்பினிலே
மட்பானை வைத்தபொங்கல்
கண்மறைவில் பொங்கியது
கட்டடத்து மின்னடுப்பில் !

சூரியனைப் பார்த்துறவு
சூழ்ந்துநின்று தொழுதலின்றி
ஊரிலெங்கோ கணினிமுன்னே
உட்கார்ந்து வணங்கினார்கள் !

பசுக்களையே பார்க்காமல்
பதப்படுத்திய பால்குடிக்கும்
சிசுக்களொடு கடற்கரையில்
சுற்றிவந்தார் காணும்பொங்கல் !

வாழ்த்துகளைக் கவிதைகளில்
வடித்துமடல் அனுப்பியவர்
பாழ்செல்லில் கடமைக்காய்
பகர்ந்திட்டார் இருசொல்லில் !

விரிந்திருந்த மனம்சுருங்கி
விளைந்திட்ட சுயநலத்தால்
பிரியமுடன் தைபிறந்தும்
பிறக்கவில்லை புதியவழி !

எழுதியவர் : பாவலர் கருமலைத்தமிழாழன் (14-Jan-15, 9:44 pm)
பார்வை : 68

மேலே