இப்படி நாம் காதலிப்போம் o0o “பொங்கல் கவிதை போட்டி 2015”

இப்படி நாம் காதலிப்போம் - “பொங்கல் கவிதை போட்டி 2015”

அன்புமனம் கொண்டுநாமும் காதல் பாதை வகுப்போம்
சாதிபூதம் வழிநின்றால் ஏறித்தானே மிதிப்போம்
ஊடலுடன் நித்தமொரு யுத்தமொன்றை நடத்தி
கட்டிக் கொஞ்சி முத்தமிட்டு அந்த யுத்தம் முடிப்போம் !!!

சொத்துபத்து சேர்த்து வைக்க சொந்த நாடு மறந்து
செல்லுமந்த கேடுகெட்ட சிந்தனைகள் விடுத்து
கஞ்சி கூழும் சொந்தத்தோடு கலந்துண்டு மகிழ்ந்து
இன்பமிது இன்பமென்று எல்லோருக்கும் உரைப்போம் !!!

ஆளாக்கி வைக்குமந்த அன்னை தந்தை தெய்வங்கள்
அனாதையாவதில்லை நம்மில்லமவர் கோயில்கள்
ஈன்றவராம் பிரம்மாக்கள் காதலிப்போம் போற்றுவோம்
முதியோர் இல்லமில்லா(த) நம் நாடென் றாக்குவோம் !!!

சூழ்ச்சி யதிகாரம்வந்து சூழ்ந்து நின்ற போதிலும்
நேர்மையெனும் மூச்சுக் காற்றை என்றென்றும் சுவாசிப்போம்
வாழவகை செய்யுந் தொழில் யாவையுமே வணங்கி
ஏணியென ஏற்றுமந்த பணியினை நேசிப்போம் !!!

ஆதரவு ஏதுமில்லா அந்த மக்கள் நாடி
அன்னை தந்தையாயிருப்போம் அன்பு விதை தூவி
பெற்ற பிள்ளை ஒன்றிருக்க தத்து ஒன்று எடுப்போம்
காதல் கொண்டு கல்வி தந்து அந்த பிள்ளை வளர்ப்போம் !!!

ஊருறவை காதலிப்போம் பகை இருள் விரட்டி
ஒற்றுமையை விதைப்போம் பாச உரம் கூட்டி
இப்படி நாம் காதலிக்க சுடர்விடும் விளக்கு
என்றாகிவிடும் தேசத்திலே இல்லையொரு வழக்கு !!! 

-------------------------------------------------------------------------------------

இப்படைப்பு எனக்கு சொந்தமானது என்று உறுதிபடுத்தி சான்றளிக்கிறேன்.

எழுதியவர் : (14-Jan-15, 10:21 pm)
பார்வை : 101

மேலே