என் எப் பிறப்பாயினும்
நண்பர்களே.. இந்த ஆண்டின் தொடக்கம் எனக்கு மகிழ்ச்சியாய் அமையவில்லை.. என் ஆருயிர் தோழி
திருமதி.சர்மி சுரேஸ் (திருகோணமலை) திடீரென ஏற்பட்ட உடல்நலக் குறைவால் இயற்கையுடன் இரண்டறக் கலந்து போனாள்.. அவளின் நினைவாக இக் கவிதை...
உன் நலச்செய்தி வரும்...... நீயே எனக்கு சொல்வாய்........
என்று விழித்திருந்த பொழுதுகளில்... இன்று முதல்
நீ எம்மோடு இவ் உலகில் இல்லை என்ற செய்தி கேட்டு...
மூர்ச்சையுற்றுப் போனேன் தோழி...
என் பதின் பருவம் முதல் எம் நண்பர்கள் அனைவருக்கும்
உற்ற தோழியாய்.. சகோதரியாய்.. எங்கள் வாழ்வில்
இன்ப துன்பம் அனைத்திலும் நீயே நிறைந்திருந்தாய்.......
என் வாழ்வின் வசந்தங்களை உன்னோடு பகிர்ந்து கொண்ட நாட்கள்
கண்களில் நீர்த்திரைகளோடு நிழலாடுகின்றது...
எங்கள் எல்லோரது வாழ்விலும் தோழி என்பவள் யார் என்பதற்கு
இலக்கணம் ஆகிப் போனாய்.. நீ
பள்ளிப் பருவத்தில் ஊர் முழுதும் சுற்றிவந்தாலும்
தாகம் தீர்க்கும் இடமாகிப் போனது.. உன் வீடு,...
மீண்டும் வந்து நானும் உங்கள் நட்போடு கலந்திருப்பேன் -என்னும்
என் கற்பனைகள் யாவும் கனவாகிப் போனது தோழி..
எப்போதும் நீ எம்மோடுதான் இருப்பாய்.. ....
எம் ஒவ்வொரு சிரிப்பிலும் எம்மோடு சிரித்துக் கொண்டு..
எம் ஒவ்வொரு அழுகையிலும் எமக்கு ஆறுதல் கூறிக்கொண்டு...
ஆனால் இப்போது நீ இல்லாத இந்த பிரிவுக்கு யார் கூறுவார் எமக்கு ஆறுதல்....
உன்னிடம் பகிரப்படாத என் மகிழ்ச்சிகள்
என்றும் முழுமை பெற்றதும் இல்லை ...
உன்னிடம் பகிரப்படாத என் துயரங்கள்
என்றும்முற்றுப் பெற்றதும் இல்லை..
இன்று ஆறுதல் சொல்ல யாரும் இன்றி தவிக்கிறேன் தோழி..
நாம் பயணம் செய்த தோழமையின் பாதையில் இருந்து
நீ மட்டும் விடைபெற்றுச் செல்கிறாய்- எங்கள்
யாரிடமும் கூறாமல்... நீ இல்லாத
இந்த பயணம் எப்படி முற்றுப் பெறும்..
சென்றுவா.. தோழி என் எப் பிறப்பாயினும்
அப் பிறப்பில் எல்லாம் என் ஆருயிர்த் தோழியாய்
நீ எனக்கு வரவேண்டும்..
உன் ஆருயிர் தோழன்:
நா.சிறிதரன்