ரசிகன்
மழைக்காலத்து சாலை போல்
மனசெல்லாம் சகதி
தவமிருக்க தேடியபோது
போதி மரங்கள்
பூமிக்குள் புதையுண்டன
வெற்றுக் காகிதத்தில்
வெண்சோறு என்றெழுதி
விருந்து போட்டான் .
ஆனாலும் நான் மாறவில்லை
மறுபடியும்
அவன் வார்த்தைகளே எனக்கு வேதம்
பிரபஞ்ச கருப்பு குழி போல்
அந்த இருட்டு குழி
என்னை உள்வாங்கியது..
எனக்குள் நான்
கேள்விகள் தொடுத்து
வேள்விகள் செய்தேன்...
நானதை தேடிப் போனேனா
இல்லை
நாணமின்றி அது வந்ததா
ஆராய்ச்சி செய்ய இது சமயமில்லை
அவனின்
ஆளுயர படத்துக்கு
அபிசேகம் செய்வதைவிட
அழுமென் குழந்தையின் பால் தேவை
அவ்வண்ணமே பெரிதாகத் தெரியவில்லை .
இறந்ததையும் மறந்ததையும் பேசி
நிகழ்காலம் மறந்து
வருங்காலம் வருவதற்குள்
வயோதிகன் ஆகிவிட்டேன்...
பிண்டச்சோறு தின்னும் எறும்புகள்
போட்டன கோசம்
சவங்கள் வாழ்க :
அப்போது
செத்த அவனும் உயிர்த்தெழுந்தான்
நானோ செத்துக் கொண்டிருந்தேன்.
நான் கொடுத்ததில்
அவனின் வங்கி இருப்பு வீங்கியது
நான் மேலும் ஏழையாகி
என் நாடி நரம்பு தொங்கியது .
அண்டங் காக்கையாக-
அறம் தொலைத்தவனாக
கண்கள் இருண்டு
சகதியில் விழுந்தான்
எனக்குள் இருந்த மனிதன்.
எனக்கு
பாடம் சொல்லிகொடுத்த பாடசாலைகள்
பிராயச் சித்தம் வேண்டி
பூகம்பத்துக்கு விண்ணப்பம் எழுதிப் போட்டன:
-சீக்கிரம் வந்து எம்மை விழுங்கு.-