மாற்றங்கள் நம்முள் நிகழட்டுமே

எத்தனை எத்தனை மாற்றமடி
என்னுள் நித்தம் நிகழ்ந்திட காணுகின்றேன்
சத்தியம் கேளடி சின்ன பெண்ணே
என் சிந்தைக்குள் சிக்கிய வார்த்தைகளில்....

சித்திரை மாதத்தில் நெற்றியில் பூத்திட்ட
முத்து வியர்வை துளிகளினை
மார்கழி மாதத்தின் மத்திய குளிரில்
தேடுகிறேன் அதை காணவில்லை....

தேக்கிய தேன்களை திருடிடும் கூட்டத்தை
வியாபாரி என்றே நாம் சொல்லுவதால்
ஏமாளி கோமாளி தேனீக்கள் கூட்டம்
என்னென்று நம்மை சொல்லிடுமோ???

கட்டிய சேலையின் பட்டு ஜரிகைக்குள்
செத்திட்ட பூச்சிகள் எத்தனையோ????
சுடுகாட்டு சுவரென்றே சேலையை நான் சொன்னால்
என் சுற்றமும் நட்பும் ஏற்றிடுமோ????

பூ பந்தல் மேடையில் நானிருக்க
புது மாப்பிள்ளை என்னை மணம் முடிக்க
நாணம் ஒன்றும் என்னுள் தோன்றவில்லை
மாறாய் கேள்விகள் நூறாய் பெருகுதடி.....

மாங்கல்ய தாலிக்கும் பொட்டுக்கும் பூவுக்கும்
என் மாப்பிள்ளை என்ன விலை வைத்தான்
அவன் கேட்டதை தந்து நான் என்ன பெற்றேன்
சிறை செல்லவா சீதனம் நான் கொடுத்தேன்

பைத்தியமோ என்றெண்ணி எண்ணியே என்னை
பார்க்கதேடி அடி பேதை பெண்ணே
பாரதி ஜாதி பாவியடி- நான்
காணும் உலகம் நீ காண்பதில்லை...

அர்த்தமில்ல இவ்வாழ்கையிலே என்
கேள்வியில் என்னடி குற்றம் கண்டாய்..
மாற்றத்தில் மட்டுமே மாற்றமில்லயடி ...
மாற்றங்கள் உன்னுள்ளும் நிகழட்டுமே......

எழுதியவர் : சந்தியா பிரியா (21-Jan-15, 11:10 am)
பார்வை : 649

மேலே