ஒரு மழை நாளில்

வீட்டின் வாசலில் உருவான திடீர் நீர்  ஓடைகள். பிஞ்சு விரல்களால் செய்யப்பட்ட கப்பல்கள் குழந்தைகளுக்கு  டாட்டா காட்டியபடி பிரயாணப்படுகிறது...

விடாமல் பொழியும்  மழையால் வீட்டிற்குள் உருவான ஸவரில் விரல் வைத்து சிதறுண்ட துளிகள் 'அட ! தீபாவளி மத்தாப்புகள் கொளுத்தாமலே...'

மழை நீரை ஓவியனாக்கி  வண்ணக் கலவை பூசாத வீட்டின் சுவற்றில் ஒழுகி பரவும் நீரின் கைபிடித்து வரைய கற்றுத்தரும் பிஞ்சு விரல்கள்...

மூன்று சக்கர வாகனங்கள் கூட வர மறுக்கும் எங்கள் வீதிகளில்  கப்பல்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக தரைதட்டாமல் பயணப்படுகிறது நீரில் நனைந்தபடி..

நனைந்து கொண்டு இருக்கும் சாலை ஓரம் நானும் நிற்கிறேன் குழந்தைகள் விட்ட கப்பல் நனையாமல் செல்ல குடை பிடித்து...

எழுதியவர் : இராமதுரை ஜெ (21-Jan-15, 6:35 pm)
சேர்த்தது : ராமதுரை ஜெ
Tanglish : oru mazhai nalil
பார்வை : 57

மேலே