மகிழ்நனே பதில் நீதானே

எழு வீரா எழு
உழு உன் வயல் பூரா
புறாவாய் விம்மினாய்
அது போதும்
சுறாவாய் சீறுவாய்
இது வேண்டும்

புழுதியாய் நீ
கிடந்தது போதும்
புண்ணியமாய் நீ
மின்ன வேண்டும்

மகிழ்நனே
மறவனே
பதில் நீதானே
பரிட்சை பழக்கு

மகிழ்நனே
மதில் தாண்டு
மக்களை தோண்டு
மாணிக்கங்களை கண்டு கொள்

தன்மானக் காலங்களை
தட்டிக் கொடுத்தது போதும்
கொட்டிப் பார்
முதல் முறையே
வெற்றிக் காட்டில்
எல்லாமே எட்டிப் பார்

இல்லாத காடுகள்
இருப்பதாக ஓடு
சிறு கூட்டு சிறுத்தையா நீ
பெருங்காட்டுச் சிங்கம் நீ
திருப்பு முகம்
விரும்பு யுத்தம்
உன் காட்டில்
சிறு நரிகள் பூரிப்பதா?

பசித்த சிங்கம்
புசிக்காது பழைய வேட்டை
ரசிக்காது பழைய காட்சிகள்
ருசிக்கும் தினமும் வேட்டை
வேட்டை சாதியே
வேட்கை கொள்
சோரா கை
வேராக வை
நேராக பாய்
இலக்கை பார்
இரையை கவர்

ஓயாதே ஆடுகள மகனே
உள்ளூர் சேவலா நீ
ஊர்க் கழுகு நீ
ஊறும் கேணி நீ
சோராத தேனீ நீ
சேர்க்க முடியா ஞானி நீ
சேர்ப்போருக்கு ஏணி நீ

யானை முன்னே
பயப்படா பாம்பாய் நில்
பூனை வந்தால்
புத்திசாலி எலியாய் நகர்
எத்திசையும் நீயே
என்பதை உணர்

சில ஆகட்டும்
நீ துஞ்சும் நாட்கள்
இல்லாது போகட்டும்
நீ கெஞ்சும் நாட்கள்
கொஞ்சமும் மிச்சமின்றி குடி
உன் பிம்பங்களுக்கு
கம்பனாகு
கவிதை கொடு
அழகாக்கு
அதையே செயலாக்கு
முதலை ஆனாலும் விழுங்கு

கூரைக்குள் குடித்தனம் போதும்
வானின் கீழ்
வாழப் பழகு
உன் வாலிபத்தை விரிவாக்கு
வாழ்விடத்தை பெரிதாக்கு
வாள்முனை ஆகட்டும்
நீ வாழும் மனை

வாழவிடாதே உன்னை
வெற்றிகள்
உனதாகும் வரை
வாழ்ந்துவிடாதே
வெற்றிகள் உணதில்லா
ஒரு வாழ்க்கை
மகிழ்நனே பதில் நீதானே ..!

எழுதியவர் : Raymond (22-Jan-15, 6:44 pm)
பார்வை : 94

மேலே