வேலைக்கு வா -கருணா

என்றைக்கும் இல்லாமல் அன்று அம்பாளை அலங்கரித்துவிட்டு வெகு நேரம் லயித்துப் போய் நின்று கொண்டிருந்தார் சீனு குருக்கள்.. 'அம்மா.' என்று துக்கத்தோடு கண்ணில் பொங்கி வந்த கண்ணீருடன் சாஷ்டங்கமாய் ஒரு முறை விழுந்து எழுந்தார்.. கைகளை தலைக்கு மேல் சேர்த்து.. " நீதானம்மா கதி" என்று சொல்லும் போதே அவரது உடல் ஒருமுறை ஆடியது சிறு நடுக்கத்துடன்..மூலஸ்தானத்தின் நிலைப்படியில் காலை எடுத்து வைக்கும் போது கால் இடறி மயங்கி கீழே விழுந்தவரை சேவித்துக் கொண்டிருந்த பக்தர் சிலர் தூக்கி மூர்ச்சை தெளிவித்து அவரது வீட்டில் கொண்டு வந்து சேர்த்த போது ஓடி வந்தால் அவர் மனைவி..லக்ஷ்மி !

"அம்மா..அய்யர் மயக்கத்தில கீழ விழுந்திட்டார் ..பாத்துக்கங்க" என்று சொல்லி விட்டு நகர்ந்தவர்களை நன்றியுடன் அனுப்பி வைத்த லக்ஷ்மி உள்ளே வந்ததும் , " என்னங்க..ஆச்சு.." என்று அவர் தலை வருடியபடி கேட்டாள்.

"ஒண்ணுமில்ல..ஏதோ நெனப்பு..கொஞ்சம் அசந்துட்டேன்."

"இல்லீங்க.. கொஞ்ச நாளாவே ணீங்க அடிக்கடி மௌனமாயிடறதும்.. அப்புறம் கண்ணை மூடிக் கொண்டு சாஞ்சி உக்காந்திடறதும்.. எனக்கு புரியலீங்க..எதுவானாலும் என் கிட்ட சொல்றதால என்னக வந்திடும் .."

பள்ளியில் இருந்து ஓடி வந்த அவள் மகன்..கோபு "என்னம்மா அப்பாவுக்கு.." என்று அருகில் வந்து அமர்ந்தான்.

' ஒண்ணுமில்லடா கோபு .. அப்பா கீழ விழுந்துட்டார் .."

அன்று இரவு..

கண்களில் கோடாக நீர் வடிய படுத்திருந்த குருக்களை அவள் பக்கமாக திருப்பினாள் லக்ஷ்மி.

"ஒங்க மனசுல இருக்கிற கவலை என்னென்னன்னு எனக்கு தெரியும்.."

"என்ன"

" இந்த அறுபது வயசில உடம்பில வந்திருக்கிற காச நோயோட கோயிலுக்கு இனிமேல வரவேண்டாமுன்னு தர்மகர்த்தா சொல்லிட்டதால பதினாலு வயசு பையனையும்.. ரெண்டம்தாரமான என்னையும் வச்சிக்கிட்டு எப்படி காலத்த தள்ளப் போறோம்னுதான கவலைபடறீங்க.."

"அது இல்ல..லக்ஷ்மி.."

"அப்படீன்னா.. தர்மகர்த்தா என்ன நாளைலருந்து அவரோட அப்பள கம்பன் வேலைக்கு வர சொன்னதா?.."

" ம்ம்ம்"

" அதப் பத்தி இப்ப என்ன.. நான் போறதா இல்ல.."

"அப்புறம்.."

"நாளைக்கு சென்னையில மைலாப்பூர்ல இருக்கிற என் சித்தியோட ஒட்டு வீடு ஒன்னு பூட்டி கிடக்கு..அவ பிள்ளையோட ஹைதராபாதுல இருக்கிறதால .. சாயங்காலம் போனில பேசினேன்..நீ வந்து இருந்துக்கடீன்னுட்டா. நாம அங்க போயிடறோம் ..அப்புறம் "

" ஏன் லக்ஷ்மி.. உத்தியோகமில்லாம.. நான் வேணுன்னா தர்மகர்த்தா கிட்ட மறுபடியும் கேட்டுப் பாக்குறேன்"

" வேணாங்க.. இந்த முடிவுக்கு நான் வந்து ரொம்ப நாளாச்சு..ஒரு வகையில இது நம்ம பையனோட ஆசையும் கூட..அவன் பரீட்சை முடிய தான் காத்துக்கிட்டிருந்தேன் "
" அங்க போயி.."
"அங்க போயி சொல்றன்"

"இதே அப்பளம் போட்டு பத்து கடைக்கும் வீடுகளுக்கும் கொடுத்து நான் சமாளிச்சுக்குவேன்..சாயங்கால நேரங்களில பையனும் கை கொடுப்பான்..ஒங்க உடம்பையும் தேத்திடலாம்..எனக்காக இத எதுத்து எதுவும் பேசாதீங்க.."

"இல்ல லக்ஷ்மி..ஏன் இந்த நிலைக்கு நீ வரணும்.." சொல்லும் போதே குருக்கள் மீண்டும் தழு தழுத்தார்..

"இல்லீங்க ..அன்னைக்கு தர்மகர்த்தா மூணாவது வாட்டி வீட்டுக்கு வந்து என்ன வற்புறுத்தி வேலைக்கு வர சொன்னபோது அட்வான்ஸ் வச்சிக்கன்னு..
ஆயிரம் ரூபாய் நோட்ட கைல தரும் போது அவரு கண்ணுல இருந்த பரபரப்பும்..அவர் என் உள்ளங்கையில் பணத்த வச்சிட்டு என் கையில தடவி விளையாடினதும் உங்களுக்கு தெரியாது..அப்பவே முடிவு பண்ணினதுதான் இது" என்று அவரிடம் சொல்லாமல் ..

" இல்லீங்க .. ஒங்களுக்கு வைத்தியமும் அவனுக்கு நல்ல படிப்பும் குடும்பம் கரையேறவும் கொஞ்ச நாளக்கி இதுதான் சரியா வரும்.. நீங்க நெல்லை இருந்தீங்கன்னா எல்லாம் தானே வந்து சேரும்.." என்றாள்.

"அம்மா" என்றபடி கண்களை இறுக்கமாய் மூடிக் கொண்டார் சீனு குருக்கள்!

மேலே படத்தில் அம்பாள் பிரகாசமாய் சிரித்தாள் !



.

எழுதியவர் : கருணா (23-Jan-15, 1:06 pm)
சேர்த்தது : கருணாநிதி
பார்வை : 204

மேலே