நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்

இந்திய சுதந்திரப் போராட்டத்திலும், இந்திய வரலாற்றிலும் முக்கிய இடம் பெற்றவர், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ். வங்காளத்தில் புகழ் பெற்ற வழக்கறிஞராகத் திகழ்ந்த ஜானகி நாத்போஸ் பிரபாவதி தேவி தம்பதிகளின் 9வது குழந்தையாக 23/1/1897 ல் பிறந்தவர் சுபாஷ் சந்திரபோஸ். (நேருவைவிட எட்டு வயது இளையவர்).

லண்டனுக்குச் சென்று ஐ.சி.எஸ் (தற்போதைய ஐ.ஏ.எஸ்) படிப்பு படித்தார். முதல் வகுப்பில் தேறினார். ஆனால் வெள்ளையர் ஆட்சியில் கலெக்டராக வேலை பார்க்கப்பிடிக்காமல், “ஐ.சி.எஸ்” பட்டத்தை வாங்காமலேயே இந்தியா திரும்பினார். காந்தியை சந்தித்தார். காங்கிரசில் சேர்ந்தார். சுபாஷ் சந்திரபோசும், நேருவும் நெருங்கிய நண்பர்கள் ஆனார்கள்.

சுத்திரப் போராட்டத்தில் கைது செய்யப்பட்ட நேதாஜி, பர்மாவில் மாண்டலே என்ற இடத்தில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டார். விடுதலை அடைந்த பின், 1938-ம் ஆண்டு ஹரிபுராவில் நடந்த காங்கிரஸ் மாநாட்டின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். “சட்டமன்றங்களைக் கைப்பற்றினால் மட்டும் போதாது. வெள்ளையர்களை வெளியேற்ற தீவிரமாகப் போராட வேண்டும்” என்று வீர உரை நிகழ்த்தினார். அவர் புகழ் நாடெங்கும் பரவியது. அவரை “நேதாஜி” (தலைவர்) என்று மக்கள் அழைத்தனர். நேதாஜியின் தீவிரவாதப்போக்கு காங்கிரஸ் தலைவர்களுக்கு -குறிப்பாக மகாத்மா காந்திக்குப் பிடிக்கவில்லை.

1939-ம் ஆண்டு நடந்த காங்கிரஸ் தலைவர் தேர்தலில் மீண்டும் போட்டியிடப்போவதாக நேதாஜி அறிவித்தார். அவரை எதிர்த்து, பட்டாபி சீத்தாராமையாவை காந்தி நிறுத்தினார். கடும் போட்டியில், நேதாஜி வெற்றி பெற்றார். இதனால் அதிர்ச்சி அடைந்த காந்தி, “பட்டாபியின் தோல்வி, என் தோல்வி” என்று கூறினார். இதனால் மனம் புண்பட்ட நேதாஜி, காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். ஆயினும், காங்கிரசுடன் இணைந்து சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட “பார்வர்டு பிளாக்” என்ற அமைப்பை உருவாக்கினார். இரண்டாவது உலகப்போர் மூண்டதும், இந்திய மக்களின் ஒத்துழைப்பைப் பிரிட்டிஷ் அரசு கோரியது. ஆனால், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக மக்களை ஒன்று திரட்டுவதில் ஈடுபட்டார். இதன் காரணமாக 1940 ஜுலையில் நேதாஜியை பிரிட்டிஷ் அரசாங்கம் கைது செய்து சிறையில் அடைத்தது.

உலகப்போரின் ஆரம்பத்தில், பிரிட்டிஷ் படைகளுக்கு தோல்வியே ஏற்பட்டது. இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு, பிரிட்டனின் எதிரி நாடுகளின் ஒத்துழைப்புடன் இந்தியாவை விடுவிக்கவேண்டும் என்று நேதாஜி எண்ணினார். அதற்கு சிறையில் இருந்து வெளியே வரவேண்டும் என்று கருதினார். 1940 நவம்பரில், சிறையில் உண்ணாவிரதம் தொடங்கினார். சுபாஷ் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால், பெரிய பிரளயமே ஏற்படும் என்பதைப் பிரிட்டிஷ் அரசு அறிந்திருந்தது. எனவே, உண்ணாவிரதத்தைக் கைவிடும்படி அவரிடம் அதிகாரிகள் கெஞ்சினார்கள். ஆனால் சுபாஷ் இணங்கவில்லை. உண்ணாவிரதம் தொடங்கி ஒரு வாரம் ஆயிற்று. நேதாஜியின் உடல் நிலை மோசம் அடைந்தது. வேறு வழியின்றி நேதாஜியை அரசாங்கம் விடுதலை செய்தது.

ஆனால் அவர் வீட்டைச்சுற்றி ரகசிய போலீசார் சாதாரண உடையில் 24 மணி நேரமும் வட்டமிட்டபடி இருந்தனர். எப்படியும் இந்தியாவிலிருந்து வெளியேறிவிடவேண்டும் என்று நேதாஜி தீர்மானித்தார். வெளிநாடு செல்ல உதவுவதாக, அவருடைய நண்பர்கள் சிலர் வாக்களித்தனர்.

1941-ம் ஆண்டு ஜனவரி 15-ம் நாள் நேதாஜி ஒரு முஸ்லிம் போல் தாடி வைத்துக்கொண்டு, மாறு வேடத்தில் தப்பிச்சென்றார். ஒரு காரில், கல்கத்தாவிலிருந்து 40 மைல் தூரத்தில் உள்ள ஒரு சிறிய ரெயில் நிலையத்துக்குச் சென்றார். “சயாதீன்” என்ற பெயரில், ரெயிலில் இரண்டாம் வகுப்பில் பயணம் செய்தார். 17-ந்தேதி பெஷாவர் நகரை (தற்போது இது பாகிஸ்தானில் உள்ளது) அடைந்தார். அங்கே அவருடைய நண்பர்கள் காத்திருந்தனர். அவர்கள் நேதாஜியை ஒரு காரில் அழைத்துச் சென்றார்கள். மூன்று நாள் கழித்து பட்டாணியர் போல் மாறுவேடம் அணிந்து, நேதாஜி ஒரு காரில் பயணமானார். ரகமத்கான் என்ற நண்பர் உடன் சென்றார். கார் நெடுந்தூரம் சென்றது. கார் செல்ல முடியாத பாதையில் இருவரும் நடந்து சென்றார்கள். மறுநாள் மாலை இந்தியாவின் எல்லையைக் கடந்து ஒரு கிராமத்தை அடைந்தார்கள். அன்று இரவு ஒரு மசூதியில் தங்கினார்கள். மறுநாள் காலை எழுந்ததும், மீண்டும் தங்கள் பயணத்தைத் தொடங்கினார்கள்.

காட்டிலும், கரடுமுரடான மலைப்பாதைகளிலும் நடந்து, ஒரு ரோட்டை அடைந்தார்கள். அங்கு ஒரு லாரியில் ஏறி, ஆப்கானிஸ்தான் தலைநகரான காபூல் போய்ச் சேர்ந்தார்கள். அங்கு இத்தாலி நாட்டு தூதரக அதிகாரிகளுடன் நேதாஜி தொடர்பு கொண்டார். தான் யார் என்பதையும், இத்தாலிக்கு செல்ல விரும்புவதையும் தெரிவித்தார். அவர்கள் இது பற்றி இத்தாலி அரசுக்கு தகவல் அனுப்பினார்கள். பதில் வர தாமதமாயிற்று. எனினும் நேதாஜி பொறுமையுடன் பல நாட்கள் காத்திருந்தார். இறுதியில் அவரை அழைத்துச்செல்ல ரோமில் இருந்து இரண்டு தூதர்களை இத்தாலி அரசு அனுப்பி வைத்தது. மார்ச் 18-ந்தேதி காலை, நேதாஜி, அந்த இருவருடன் காரில் புறப்பட்டார்.

காபூல் வரை துணைக்கு வந்த அவர் நண்பர் ரகமத்கான், இந்தியாவுக்குத் திரும்பிச் சென்றார். நேதாஜிக்கு, பிரயாண அனுமதிச்சீட்டை இத்தாலி அனுப்பியிருந்தது. அதன் உதவியால், ரஷிய எல்லைக்குள் நேதாஜியும், மற்ற இருவரும் நுழைந்தனர். ரஷியா வழியாக இத்தாலிக்குச் செல்ல வேண்டும் என்பது நேதாஜியின் திட்டம். ஆனால் எதிர்பாராதவிதமாக ஜெர்மனிக்கு வருமாறு ஹிட்லரிடமிருந்து அழைப்பு வந்தது. அதை ஏற்ற நேதாஜி, ரெயில் மூலம் மாஸ்கோ சென்று அங்கிருந்து ஜெர்மன் தலைநகரான பெர்லினுக்குப் போய்ச்சேர்ந்தார். அவர் ஜெர்மனி வந்து சேர்ந்த செய்தியை மார்ச் 28-ந்தேதி ஜெர்மனி பத்திரிகைகள் வெளியிட்டன. அப்போதுதான், அவர் இந்தியாவில் இருந்து மாறுவேடத்தில் தப்பிச் சென்ற விஷயமே பிரிட்டிஷ் அரசுக்குத் தெரிந்தது! ஜெர்மனியில் நேதாஜிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. சர்வாதிகாரி ஹிட்லரை நேதாஜி சந்தித்துப்பேசினார். இந்தியாவின் விடுதலைக்கு முழு ஆதரவு தருவதாக ஹிட்லர் உறுதி அளித்தார்.

நேதாஜியின் வீர சாகசம் :

இந்தியாவைப் பிரிட்டிஷ் ஆதிக்கத்திலிருந்து விடுவிக்க, ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் ஆகிய நாடுகளுடன் நேதாஜி ஒப்பந்தம் செய்து கொண்டார். ஜெர்மனியில் இந்திய தேசிய ராணுவத்தை அமைத்தார். 4 ஆயிரம் வீரர்கள் கொண்ட படை அது. அவர்கள் பிரான்சு நாட்டுக்கு சென்று, பிரிட்டிஷ் படைகளை எதிர்த்துப்போரிட்டனர். 1941 டிசம்பர் 7-ந்தேதி, போரில் ஜெர்மனிக்கு ஆதரவாக ஜப்பான் குதித்தது. வெகு எளிதாக சிங்கப்பூரைக் கைப்பற்றியது. 1942 பிப்ரவரியில், சிங்கப்பூரிலிருந்த பிரிட்டிஷ் ராணுவம் ஜப்பானிடம் சரண் அடைந்தது. தாய்லாந்து, மலேயா, அந்தமான் ஆகிய நாடுகளையும் ஜப்பானிய படைகள் கைப்பற்றிக்கொண்டு, மேலும் முன்னேறின. பிரிட்டிஷ் வசம் இருந்த ரங்கூனும், ஜப்பானியர் வசம் ஆகியது. ஜப்பானிடம் சரண் அடைந்த பிரிட்டிஷ் படைகளில் இந்திய ராணுவத்தினர் இருந்தார்கள். அவர்களைக்கொண்டு, “இந்திய தேசிய ராணுவம்” அமைக்கப்பட்டது.

போரில் ஜப்பானின் கை ஓங்கிக்கொண்டிருந்தது. ஜப்பான் உதவியுடன் இந்தியாவை விடுவிக்க முடியும் என்று நேதாஜி கருதினார். ஜப்பானுக்குச் செல்ல முடிவு செய்தார். ஜப்பானுக்கு எப்படிச் செல்வது? கடலில் அமெரிக்க, பிரிட்டிஷ் கப்பல்களும், நீர்மூழ்கிகளும் சுற்றிக்கொண்டிருந்தன. விமானத்தில் செல்வதும், தரை வழியில் செல்வதும் அதிக ஆபத்தானவை. எல்லாவற்றையும் சிந்தித்துப் பார்த்த நேதாஜி, நீர்மூழ்கிக் கப்பலில் செல்ல முடிவு செய்தார். “இது ஆபத்தானது” என்று ஜெர்மன் அதிகாரிகள் எச்சரித்தனர். ஆனால் நேதாஜி துணிவுடன் 1943 பிப்ரவரி 8-ந்தேதி ஜெர்மனியில் உள்ள நீல் என்ற துறைமுகத்திலிருந்து நீர்மூழ்கிக் கப்பலில் பயணமானார். அவருடைய செயலாளர் கர்னல் ஹசன், ராணுவ அதிகாரி குலாம் ஹைதர், ஒரு ஜப்பான் அதிகாரி, ஒரு ஜெர்மன் அதிகாரி ஆகியோரும் உடன் புறப்பட்டனர்.

எதிரிகளின் போர்க்கப்பல்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள் ஆகியவற்றின் பார்வையில் சிக்காமலும், விமானக் குண்டுவீச்சில் அகப்பட்டுக்கொள்ளாமலும் நேதாஜியின் நீர்மூழ்கிக் கப்பல், ஆப்பிரிக்கா கண்டத்தைச் சுற்றிக்கொண்டு, இந்துமகா சமுத்திரத்தில் பிரவேசித்தது. மடகாஸ்கர் தீவுக்கு 400 மைல் தூரத்தில் ஜப்பான் அனுப்பி வைத்த நீர்மூழ்கிக் கப்பல் ஒன்று, நேதாஜியின் நீர்மூழ்கியை எதிர்கொண்டு வரவேற்றது. ஜெர்மனி நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து ஜப்பான் நீர்மூழ்கிக் கப்பலுக்கு ஏப்ரல் 28-ந்தேதி மாறினார் நேதாஜி. நீர்மூழ்கிக்கப்பல் பயணம் தொடர்ந்தது. இந்தோனேஷியாவைச் சேர்ந்த சுமத்ரா தீவை,

மே 6-ந்தேதியன்று நேதாஜி அடைந்தார். அதாவது, நேதாஜியின் நீர்மூழ்கிக் கப்பல் பயணம் 3 மாதம் நீடித்தது.

சுமத்திராவில் ஒரு வாரம் தங்கியபின் விமானம் மூலம் ஜப்பான் தலைநகருக்குப் பயணமானார். மே 16-ந்தேதி டோக்கியோ போய்ச்சேர்ந்தார். அங்கு ஜப்பானிய அதிகாரிகளுடன் பேச்சு நடத்தினார். இந்தியா சுதந்திரம் அடைய ஜப்பான் எல்லா உதவிகளையும் செய்யும் என்று அவர்கள் உறுதியளித்தனர். ஜப்பானிலிருந்து புறப்பட்டு, ஜுலை 2-ந்தேதி சிங்கப்பூர் சென்றார். சிங்கப்பூர் மக்கள் அவருக்கு பிரமாண்டமான வரவேற்பு அளித்தனர். இந்தியர்கள் மட்டுமின்றி, மலேசியர், சீனர், ஜப்பானியர் ஆகியோரும் வரவேற்பில் கலந்து கொண்டனர்.

சிங்கப்பூரில் உள்ள இந்திய தேசிய ராணுவ அதிகாரிகளை அழைத்துப் பேசினார். போரில் புதிய வியூகங்களை வகுத்தார். நேதாஜி மாணவராக இருந்தபோதே, “தேசிய மாணவர் படை”யில் சேர்ந்து ராணுவப் பயிற்சி பெற்றிருந்தார். எனவே, ராணுவத்தின் செயல்பாடுகளை நன்கு அறிந்திருந்தார். அவருடைய போர்த்திறன், ராணுவ அதிகாரிகளையே திகைக்க வைத்தது. அதன்பின் நேதாஜி என்ற பெயர் உலகமெங்கும் பரவியது.

1943 அக்டோபர் மாதம், “சுதந்திர இந்திய அரசாங்க”த்தை சிங்கப்பூரில் அமைத்தார். பிரதமர் பதவியையும், பிரதம ராணுவத் தளபதி பொறுப்பையும் அவர் ஏற்றார். பெண்கள் படையின் தளபதியாக தமிழ்ப்பெண்ணான மேஜர் லட்சுமி சுவாமிநாதன் நியமிக்கப்பட்டார். சுதந்திர அரசாங்கம் அமைக்கப்பட்ட 2 நாட்களில், பிரிட்டனுக்கும், அமெரிக்காவுக்கும் எதிரான போர்ப்பிரகடனத்தை நேதாஜி வெளியிட்டார்.

அரசாங்கத்தையும், ராணுவத்தையும் குறுகிய காலத்தில் பலப்படுத்தினார் நேதாஜி. தேசிய அரசாங்கம் போரை நடத்தியதுடன் நில்லாது, பல பள்ளிக்கூடங்களைத் திறந்தது; புதிய நாணயங்களை வெளியிட்டது. பத்திரிகைகளையும் நடத்தியது. சுதந்திர அரசாங்கத்தின் தலைமையகம், முதலில் சிங்கப்பூரில் இருந்தது. பிறகு ரங்கூனுக்கு மாறியது. இந்த அரசாங்கத்தின் கிளை அலுவலகங்கள், பல்வேறு தென்கிழக்கு ஆசிய நாடுகளில் அமைக்கப்பட்டன.

நேதாஜியின் சுதந்திர அரசுக்கு ஜப்பான், பிலிப்பைன்ஸ், ஜெர்மனி, இத்தாலி, அயர்லாந்து முதலிய நாடுகள் அங்கீகாரம் அளித்தன. சுதந்திர அரசுக்கென தனியாக “பாங்கி” தொடங்கவேண்டும் என்றார், நேதாஜி. “இதற்கு எவ்வளவு பணம் தேவைப்படும்?” என்று ஒரு முஸ்லிம் கோடீஸ்வரர் கேட்டார். “ஐம்பது லட்சம் ரூபாய் வேண்டும்” என்று நேதாஜி கூறியதும், “இப்போது முப்பது லட்சம் தருகிறேன். ஒரு வாரத்தில் மீதி இருபது லட்சம் தருகிறேன்” என்று கூறிய அந்தப் பிரமுகர், சொன்னபடியே ஐம்பது லட்சம் ரூபாய் கொடுத்தார். இரண்டே வாரங்களில் “ஆசாத் ஹிந்த் பாங்க்” தொடங்கப்பட்டது.

இந்திய தேசிய ராணுவத்துக்கும், சுதந்திர அரசுக்கும் நிறையப் பணம் தேவைப்பட்டது. மக்கள் ஏராளமாக நன்கொடை அளித்தனர். நேதாஜிக்கு அணிவிக்கப்பட்ட மாலைகள் லட்சக்கணக்கான ரூபாய்களுக்கு ஏலம் போயின. ஒருமுறை, ஒரே மாலை 12 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போயிற்று! நகைகள், ரொக்கம், நிலமாக ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை ஒரு பிரமுகர் கொடுத்தார். பெண்கள் ஒன்று சேர்ந்து, நேதாஜியின் எடைக்கு எடை தங்க நகைகளை வழங்கினர்.

பர்மாவில் மட்டும் ரூ.8 கோடி வசூலாயிற்று. உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்து குவிந்த நன்கொடை மூலம் ஆயுதங்களும், வெடிப்பொருட்களும் வாங்கினார்நேதாஜி. இந்திய தேசிய ராணுவத்தில் 50 ஆயிரம் வீரர்கள் இருந்தனர். 1,500 ராணுவ அதிகாரிகளின் மேற்பார்வையில் இவர்கள் செயல்பட்டனர். மேஜர் லட்சுமி தலைமையில் இருந்த பெண்கள் ராணுவம், “ஜான்சிராணிப்படை” என்ற பெயரில் இயங்கியது.

இதில் 1,200 பெண்கள் இருந்தனர். “தற்கொலைப்படை” ஒன்றும் இயங்கியது. இவர்கள், முதுகில் வெடிகுண்டுகளை கட்டிக்கொண்டு, எதிரிப்படைகளின் டாங்கிகள் அணிவகுத்து வரும்போது, பாய்ந்து சென்று குறுக்கே படுத்துக்கொள்வார்கள். டாங்கிகளால் அவர்கள் நசுக்கப்படும் அதே நேரத்தில், குண்டுகள் வெடித்து டாங்கிகள் சின்னாபின்னமாகச் சிதறும்! இந்த தற்கொலைப்படையில், இளைஞர்கள் ஏராளமாகச் சேர்ந்தனர்.

“டெல்லி சலோ!” என்று நேதாஜி கட்டளையிட்டதும், இந்திய தேசிய ராணுவத்தினர் இந்தியாவுக்குள் புகுந்தனர். பல இடங்களில் பிரிட்டிஷ் படைகள், தேசிய ராணுவத்திடம் தோற்றுப் பின்வாங்கியது. “ஜான்சிராணிப்படை” பல மைல்கள் முன்னேறியது. அவர்களிடம் வெள்ளையர் ராணுவம் சரண் அடைந்தது. மணிப்புரி சமஸ்தானத்தின் பல பகுதிகளை தேசிய ராணுவம் கைப்பற்றியது. “விரைவில் இந்தியாவை விட்டுப் பிரிட்டிஷ் படைகள் விரட்டியடிக்கப்படும். டெல்லியில் சுதந்திரக்கொடியை நேதாஜி பறக்க விடுவார்” என்று எல்லோரும் எதிர்பார்த்தனர். ஆனால்…
நேதாஜி போன விமானம் மாயமாய் மறைந்தது

போரில் எதிர்பாராத திருப்பம் ஏற்பட்டது. போரில் பிரிட்டனுக்கு ஆதரவாக அமெரிக்கா குதித்ததும், போரின் போக்கே தலைகீழாக மாறியது. வெற்றி மேல் வெற்றி பெற்று வந்த ஜப்பானுக்கும், ஜெர்மனிக்கும் தோல்வி மேல் தோல்வி ஏற்பட்டது. பர்மாவில் இருந்த ஜப்பான் படைகள் அங்கிருந்து பின்வாங்கின. அமெரிக்க தளபதி மக்ஆர்தர், பெரும் படையுடன் ஜப்பானை நெருங்கிக் கொண்டிருந்தார்.

1945 ஏப்ரல் 30-ந்தேதி ஜெர்மன் தலைநகரான பெர்லின் நகரை ரஷியப்படைகள் முற்றுகையிட்டன. இனி தப்ப வழி இல்லை என்பதை அறிந்து கொண்ட ஹிட்லர் மனைவியுடன் தற்கொலை செய்து கொண்டார். அதைத்தொடர்ந்து, ஜெர்மனி சரண் அடைந்தது.

ஜெர்மனி சரண் அடைந்த பிறகும் ஜப்பான் போரை நிறுத்தவில்லை. எனவே, 1945 ஆகஸ்ட் 6-ந்தேதி ஜப்பான் நகரமான ஹிரோஷிமா மீது அமெரிக்கா அணுகுண்டு வீசியது. அப்படியும் ஜப்பான் சரண் அடையாததால், இரண்டாவது அணுகுண்டை ஜப்பானின் மற்றொரு நகரான நாகசாகி மீது வீசியது. இதைத்தொடர்ந்து 1945 ஆகஸ்ட் 12-ந்தேதி, ஜப்பான், தோல்வியை ஒப்புக்கொண்டு சரண் அடையத் தீர்மானித்தது.

அப்போது நேதாஜி மலேயாவில் இருந்தார். அவர் உடனே கார் மூலம் சிங்கப்பூர் திரும்பினார். சுதந்திர அரசாங்கத்தின் இதர தலைவர்களுடனும், தளபதிகளுடனும் ஆலோசனை நடத்தினார். 1945 ஆகஸ்ட் 15-ந்தேதி ஜப்பான் மன்னர் ரேடியோவில் பேசும்போது, ஜப்பானின் சரணாகதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அன்றிரவு நேதாஜி தூங்கவில்லை. விடிய விடிய நண்பர்களுடன் ஆலோசனை நடத்தினார். அடுத்து என்ன செய்யவேண்டும் என்று, ராணுவத் தளபதிகளுக்கு கட்டளைகள் பிறப்பித்தார். முக்கியமாக, “ஜான்சி ராணிப்படை”யில் உள்ள பெண்களைப் பாதுகாக்க வேண்டிய அவசியத்தை வற்புறுத்தினார். இதற்கிடையே, ஜப்பான் அரசிடமிருந்து, நேதாஜிக்கு ஒரு செய்தி வந்தது.

“ரஷியா வசம் இருக்கும் மஞ்சூரியா பகுதிக்கு உங்களை பத்திரமாகக் கொண்டு போய்ச் சேர்த்துவிடுகிறோம். அதன் பிறகு என்ன செய்வது என்பதை நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள்” என்பதுதான் அந்தச் செய்தி. அதன்படி அடுத்த நாள் காலை பாங்காக் (தாய்லாந்து) செல்வதென்றும், அங்கிருந்து மஞ்சூரியாவுக்குப் புறப்படுவது என்றும் நேதாஜி முடிவு செய்தார்.

1945 ஆகஸ்ட் 16-ந்தேதி சிங்கப்பூரில் இருந்து புறப்படுவதற்கு முன், இரண்டு செய்திகளை வெளியிட்டார். முதலாவது செய்தி, இந்திய தேசிய ராணுவத்தினருக்கு. “ஜப்பான் சரண் அடைந்துவிட்டாலும், டெல்லியை அடையப் பல வழிகள் இருக்கின்றன. இந்தியாவை மீட்பதுதான் நமது லட்சியம்” என்பதே அந்தச் செய்தி. அடுத்த செய்தி, கிழக்கு ஆசியாவில் வாழும் மக்களுக்கு. “நமது வரலாற்றில் இதற்கு முன் கண்டிராத நெருக்கடியான நேரம் இது. நமது தற்காலிக தோல்வியைக் கண்டு மனம் தளராதீர்கள். இந்தியாவின் விடுதலையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. வெகு விரைவில் இந்தியா சுதந்திரம் அடையும். ஜெய்ஹிந்த்.”

இந்தச் செய்தியை வெளியிட்டு விட்டு, காலை 10 மணி அளவில் பாங்காக் நகருக்கு விமானத்தில் புறப்பட்டார். பிற்பகலில் பாங்காக் போய்ச்சேர்ந்தார். அதன் பின்னர் மின்னல் வேகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிகள் விவரம் வருமாறு:-1945 ஆகஸ்ட் 17 அதிகாலை பாங்காக் நகரிலிருந்து, சைகோன் (தென் வியட்நாம்) நகருக்கு விமானத்தில் புறப்பட்டார். துணைத்தளபதி கர்னல் ஹபிப்-வுர்-ரகிமான், கர்னல் குல்ஜாராசிங், கர்னல் பிரிதம்சிங், மேஜர் அபித் ஹசன் (நேதாஜி நீர்மூழ்கிக் கப்பலில் பயணம் செய்தபோது உடன் இருந்தவர்) ஆலோசகர் தேவநாத் தாஸ், நேதாஜியின் சுதந்திர அரசாங்கத்தில் பிரசார இலாகா மந்திரியாக பதவி வகித்த எஸ்.ஏ.அய்யர் (தமிழர்) ஆகியோர் உடன் சென்றனர்.

ஆகஸ்ட் 18 காலை 10 மணி: விமானம் சைகோன் விமான தளத்தில் இறங்கியது. அங்கு ஜப்பானிய போர் விமானம் ஒன்று புறப்படத்தயாராக இருந்தது. அதில் ஒருவருக்கு மட்டும் இடம் இருக்கிறது என்றும், நேதாஜி மட்டும் வரலாம் என்றும், விமானத்தில் இருந்த ஜப்பானிய அதிகாரிகள் கூறினார்கள். விமானத்தில் போவதா, வேண்டாமா என்று ஒரு கணம் நேதாஜி யோசித்தார். சைகோன் நகரை எந்த நிமிடமும் பிரிட்டிஷ், அமெரிக்கப்படைகள் கைப்பற்றலாம் என்ற நிலை இருந்தது.

அந்தப் படைகளிடம் சிக்கினால் தன்னைக் கைது செய்வது நிச்சயம். போர்க் கைதியாகப் பிடிபடுவதை நேதாஜி விரும்பவில்லை. எனவே, விமானத்தில் போவதே மேல் என்று முடிவு செய்தார். விமானத்தில் ஏறி அமர்ந்தார். கடைசி நேரத்தில், “இன்னொருவர் வரலாம்” என்று ஜப்பானிய அதிகாரிகள் கூறினார்கள். எனவே ஹபிப்-வுர்-ரகிமான், நேதாஜி அருகில் போய் அமர்ந்தார். விமான நிலையத்தில் கூடியிருந்தவர்களைப் பார்த்து நேதாஜி “ஜெய் ஹிந்த்” என்று கூறினார். விமானம் புறப்பட்டது. அது எந்த இடத்துக்குப் போகிறது என்று அறிவிக்கப்படவில்லை. நேதாஜியின் கடைசி விமானப் பயணம் அதுவாக இருக்கும் என்றும் யாரும் நினைக்கவில்லை.

ஆகஸ்ட் 19-ந்தேதி, ஜப்பான் ரேடியோ “நேதாஜி இறந்துவிட்டார்” என்ற திடுக்கிடும் செய்தியை அறிவித்தது.

ஜப்பானிய ரேடியோ கூறியதாவது:-”சுதந்திர இந்திய தற்காலிக அரசாங்கத்தின் தலைவரான நேதாஜி, 1945 ஆகஸ்ட் 16-ந்தேதி ஜப்பானிய அரசுடன் பேச்சு நடத்த விமானத்தில் புறப்பட்டார். 18-ந்தேதி பிற்பகல் 2 மணிக்கு, பார்மோசா தீவில் உள்ள தைஹோக்கு விமான நிலையத்தில் அவர் விமானம் விபத்துக்குள்ளாகியது. அதில் அவர் படுகாயம் அடைந்தார். ஜப்பானில் ஒரு மருத்துவமனையில் அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டது. அன்று நள்ளிரவில் அவர் மரணம் அடைந்தார். அவருடன் விமானத்தில் பயணம் செய்த ஜெனரல் சுனாமாசா என்ற ஜப்பானிய அதிகாரி விபத்து ஏற்பட்டவுடனேயே மரணம் அடைந்தார். நேதாஜியின் உதவித் தளபதி கர்னல் ஹபிப்-வுர்-ரகிமானும், மற்றும் 4 ஜப்பானிய அதிகாரிகளும் பலத்த காயம் அடைந்தனர்” இவ்வாறு ஜப்பானிய ரேடியோ அறிவித்தது.

இந்தச்செய்தி, இந்திய மக்களை நிலைகுலையச் செய்தது. நேதாஜி இறந்துவிட்டார் என்பதை பலர் நம்பவில்லை. “நேதாஜி இறந்து விட்டார் என்றால், அவர் உடலை ஏன் இந்திய மக்களிடம் ஒப்படைக்கவில்லை?” என்று கேட்டனர். ஆயினும் நேதாஜியுடன் பயணம் செய்து, படுகாயத்துடன் தப்பிய ஹபிப்-வுர்-ரகிமான், “நேதாஜியின் உடல் தகனம் செய்யப்பட்டதை என் கண்ணால் பார்த்தேன்” என்று கூறினார். ஆயினும், முத்துராமலிங்க தேவர் உள்பட பல தலைவர்கள், “நேதாஜி உயிருடன் இருக்கிறார்” என்றே கூறி வந்தனர்.

இந்தியா சுதந்திரம் அடைந்த பின், 1956-ல் நேதாஜி பற்றிய உண்மைகளைக் கண்டறிய மூவர் கொண்ட ஒரு விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. அந்த கமிட்டி டோக்கியோ, சைகோன், பாங்காக் உள்பட பல இடங்களுக்குச் சென்று விசாரணை நடத்தியது. இறுதியில், கமிட்டியின் மூன்று உறுப்பினர்களில் இரண்டு பேர், விமான விபத்தில் நேதாஜி இறந்தது உண்மை.

டோக்கியோவில் உள்ள புத்தர் கோவிலில் இருப்பது அவருடைய அஸ்திதான்” என்று அறிக்கை கொடுத்தனர். மூன்றாவது உறுப்பினர் சுரேஷ் சந்திரபோஸ் (நேதாஜியின் அண்ணன்) இதை ஏற்க மறுத்து தனி அறிக்கை கொடுத்தார். 1967-ல், 350 “எம்.பி.”க்கள் கையெழுத்திட்டு, நேதாஜி பற்றி மீண்டும் விசாரணை நடத்தும்படி, ஜனாதிபதியிடம் மனு கொடுத்தனர். அதன்படி ஓய்வு பெற்ற பஞ்சாப் ஐகோர்ட் தலைமை நீதிபதி ஜி.டி.கோசலாவைக் கொண்ட “ஒரு நபர் விசாரணை கமிஷன்” அமைக்கப்பட்டது. அவர் ஜப்பான், தைவான் உள்பட பல நாடுகளுக்குச் சென்று விசாரணை நடத்தி, “விமான விபத்தில் நேதாஜி இறந்தது உண்மை” என்று உறுதி செய்து அறிக்கை கொடுத்தார்

எழுதியவர் : (23-Jan-15, 4:41 pm)
பார்வை : 5959

மேலே