தெருமுக்கு டைட்டானிக்குகள்

கீழத்தெரு ஜாக் பற்றி அறிந்திருப்பீர்கள்
பலநாளாய் தெருமுக்கு புளியமரத்தடியில்
கடந்து செல்லும் ரோஸூக்காக காத்திருப்பான்
ஒரு நாள் ரோஸ் நின்றாள்.
அடுத்தடுத்த நாட்களில் மரத்தடியில் இருவரும்
பட்டாம்பூச்சிகளோடு பேசினர்
மழைநாளில் குடைவிரித்து நனைந்தனர்
புளியம்பழம் பறித்து விளையாடினர்
மரத்தண்டில் பெயர் கீறி மகிழ்ந்தனர்.
நிறைய சிரித்தனர்.
மரமும் சிரித்தது.
ஒரு நாள் ரோஸின் மாமன் நின்றிருந்தான்
பிறகொரு பெரியோர்களால் நிச்சயக்கப்பட்ட
சுபயோக சுபதினத்தில்
ஜாக்கும் மேலத்தெரு ரோஸும்
புளியமரக்கிளையில் ஒற்றைக்கயிற்றில்
தூக்கு போட்டு செத்துப் போனார்கள்.

மறுநாள் மரத்தடியில் சலீம் இருந்தான்
மறுநாள் மரம் வெட்டப்பட்டது
மறுநாள் மரமிருந்த இடத்தில் அம்பிகாபதி இருந்தான்.

மறுநாள் வீடு மாறிய எனது
புதிய வீட்டுத்தெரு முக்கில்
புளியமரமொன்று இருந்தது.

எழுதியவர் : ஈ.ரா. (27-Jan-15, 4:03 pm)
பார்வை : 88

மேலே