கனவு தேசம்

கண்கள் அயர்ந்த வேளையில்
இதயம் வரைந்த ஓவியம்
கனவில் மட்டும் சாத்தியப்படும்
தூர தேசம்!...

முகிலுக்கேன் நீரென்று
புவி சேர்ந்த மழையில்
வண்ணமேறிய கரிசல்
பச்சையாகிப் போக
பாதைக்காக பிடுங்கப்பட்ட களைகள்
பாவமாய்ப் பார்க்க
மீண்டும் நட்டு விட்டேன்
மேலுமோர் கனமழை!...

சாரல்கள் சங்கமித்து
ஓடிச் சென்ற ஊருணியில்
நாரைகளின் பாடலுக்கு
இசையமைக்கும் தவளை!

தண்ணீரைக் கிழித்து
பாம்பு வரைந்த ஓவியம்!

அழகிப் போட்டியில்
வென்ற மமதையில்
உயரப் பறக்கும் ராணித் தட்டான்!...

நீரின் மேல் நடந்து
குறி சொல்லும் பூச்சிகள்!

இப்படி
அழகின் ஆக்கிரமிப்பில்
அழகான பூமி அது

புகையில்லா அப்புவியில்
நிழல்கள் இலவசம்
எரிபொருள் இல்லை
எனவே போர்கள் இல்லை

ஒட்டுமொத்தமாய் இரண்டே சாதி
உயிருள்ளதும் இல்லாததுமாய்
வெட்டிக் கொல்ல ஆளில்லாதலால்
வீரம் அன்பென் றானது

உணவுக்காக பித்ரு வேடமில்லை
உரிமையுடன் காகங்கள்!..
மாலையில் மின்வெட்டு
குருவிகளின் அணிவகுப்பில் கம்பங்கள்!..

பணம் தடை செய்யப்பட்டதால்
வேலை நிறுத்தத்தில் வறுமை - எங்கும்
குணம் பொங்கிச் சிரித்த பூமியில்
மகிழ்ந்திருந்தேன் நான்!

சாணம் தெளித்த முற்றத்தில்
கோணல் நிலவை ரசித்தபடி
கலக்கமின்றி கழிந்தது - என்
கனவு தேசத்தின்
இரவுப் பொழுதுகள்!....

எழுதியவர் : செல்வா பாரதி (28-Jan-15, 4:27 pm)
Tanglish : kanavu dhesam
பார்வை : 523

மேலே